Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

இப்படியும் ஒருவன்!-சிறுகதை


தாமரைக்குளம் என்னும் கிராமத்தில், பெரும் செல்வந்தன் ஒருவன் இருந்தான். ஏராளமான செல்வம் அவனுக்கு இருந்த போதிலும், யாருக்கும் ஒரு காசும் தராத கருமியாக இருந்தான்.
ஒருநாள்-
செல்வந்தன் கடைத்தெருவில் போய்க் கொண்டிருந்த பொழுது, ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த பரம ஏழையான ஓர் இளைஞன், தன்னிடமிருந்த ஒரு நாணயத்தை எடுத்து பிச்சைக்காரனின் தட்டில் போட்டான்.
உடனே அந்த பிச்சைக்காரன் செல்வந்தரான கருமியைப் பார்த்து, ""ஏழை கூட ஒரு காசு தர்மம் செய்கிறான். நீங்கள் அதிகமாக ஏதாவது கொடுக்கக் கூடாதா பிரபு!'' என்று கேட்டான்.
அதைக் கேட்ட கருமிக்கு வெட்கமாகப் போய்விட்டது.
அதே சமயம், தன் பணத்தை எடுத்துத் தர்மம் செய்யவும் அவருக்கு மனம் ஒப்பவில்லை. உடனே போய்க் கொண்டிருந்த அந்த ஏழை இளைஞனை அழைத்து, ""இந்தாப்பா என்னை யாரென்று தெரிகிறதா?'' என்று கேட்டார்.
""உங்களை தெரியாதா? நீங்கள் பெரிய வணிகராயிற்றே,'' என்றான் ஏழை.
""இந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் பண்ண என்னிடம் சில்லறை இல்லை. நீ ஒரு நாணயம் கடன் கொடு. நாளை என் வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்,'' என்றார்.
உடனே அந்த ஏழை இளைஞன் மறுபேச்சு பேசாமல் தன்னிடமிருந்த இன்னொரு நாணயத்தை எடுத்து அந்தச் செல்வந்தரிடம் கொடுத்தான். அவரும் அதை வாங்கிப் பிச்சைக்காரனின் தட்டில் போட்டுவிட்டு வீடு திரும்பினார்.
அன்று இரவு கஞ்சப் பணக்காரனுக்குத் தூக்கம் வரவில்லை. மறுநாள் காலையில் கொடுத்த காசை வசூலிக்க அந்த ஏழை இளைஞன் வந்து விடுவானே அவனிடமிருந்து எப்படித் தப்புவது என்ற சிந்தனை அவரை வாட்டி எடுத்தது. அப்போது ஓர் அருமையான யோசனை தோன்றியது. அதன் பின்னர்தான் அவரால் நிம்மதியாக தூங்க முடிந்தது.
மறுநாள் அவர் எதிர்பார்த்தது போலவே அந்த ஏழை இளைஞன் கடனை வசூலிக்க வந்து விட்டான். உடனே கருமிப் பணக்காரன் ஒரு ரூபாய் நோட்டை எடுத்து ஏழையிடம் காட்டி, ""என்னிடம் சில்லறையாக இல்லை. இதை வைத்துக் கொண்டு நீ கொடுத்த காசு போக மீதியைக் கொடுக்கிறியா?'' என்று கேட்டார்.
""என்னிடம் இவ்வளவு பணத்துக்குச் சில்லறை ஏது? நான் அடுத்த வாரம் வருகிறேன். நீங்கள் சில்லறையாக எடுத்து வைத்திருங்கள்,'' என்று கூறி விட்டுப் போய் விட்டான்.
அடுத்த வாரமும் அவன் வந்தான். கருமிப் பணக்காரர் அன்றும் அதே பாட்டைப் பாடினார்.
அந்த ஏழையும் அவரை விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப வந்தான். கருமிப் பணக்காரனும் கொடுப்பதாக இல்லை. இப்படியே சில வாரங்கள் சென்றன.
ஒருநாள் அந்த ஏழைக்குக் கோபம் வந்து விட்டது.
""என்ன நீங்கள் எப்போது வந்தாலும் சில்லறை இல்லை, சில்லறை இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு காசுக்காக நானும் எத்தனை தடவைதான் அலைவது? அடுத்த வாரம் வரும் போது நீங்கள் கண்டிப்பாகக் கொடுத்து விட வேண்டும். தவறினால் உங்கள் வேலைக்காரர்களையெல்லாம் கூட்டி ஒரு காசு கடனாளி நீங்கள் என்ற விவரத்தைக் கூறிவிட்டுப் போய் விடுவேன்,'' என்றான்
கருமிப் பணக்காரனுக்குப் பெரும் கவலை ஏற்பட்டு விட்டது. ஒருகாசு கடனுக்காக ஒரு பரதேசிப் பயல் அடிக்கடி வந்து தொல்லை தருகிறானே. இவன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டும். கடனையும் திரும்பத்தரக் கூடாது எப்படித் தப்புவது' என்று யோசிக்கத் தொடங்கினார்.
அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அதைத் தம்முடைய மனைவியிடம் கூறினார். அவளும் அப்படியே நடப்பதாக வாக்களித்தாள்.
அடுத்த வாரம் ஏழை இளைஞன் வந்த போது, கருமிப் பணக்காரரின் மனைவி தம் கணவர் இறந்து விட்டதாக அழுது, ஒப்பாரி வைத்தாள்.
அந்த ஏழை இளைஞனோ, அதை நம்பத் தயாராக இல்லை. தன்னை ஏமாற்றவே அவளும், கருமிப் பணக்காரனும் நாடகமாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட அவன், ""உங்கள் கணவனின் உயிரற்ற உடல் எங்கே? அவர் கால்களைக் கழுவிவிட்டு என் கடன் தீர்ந்தது என்று கூறிவிட்டுப் போகிறேன். அப்போது தான் அவருடைய ஆத்மா சாந்தியடையும்,'' என்றான்.
கருமியின் மனைவி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.
அங்கே கட்டிலில் கருமிப் பணக்காரர் ஆடாமல், அசையாமல் படுத்திருந்தார். ஏழை இளைஞன் அவர் காலில் ஒரு செம்பு வெந்நீரைக் கொட்ட பணக்காரன் துடித்தான், என்றாலும் அசையவில்லை.
""எனக்குத் தரவேண்டிய காசை தந்து விடுங்கள். என்னை ஏமாற்ற முடியாது,'' என்று கருமியின் மனைவியிடம் கத்தினான் இளைஞன்.
""அவர்தான் இறந்து விட்டாரே! இனிமேல் எப்படி அவரால் உன் கடனைத் திருப்பித் தர முடியும்!'' என்று கூறிய கருமிப் பணக்காரனின் மனைவி, அவனை வெளியேற்றுவதில் குறியாக இருந்தாள்.
ஏழை இளைஞனோ, ""இவரை அடக்கம் செய்யும் வரை நானும் இங்கேயே இருக்கிறேன்!'' என்று கூறிவிட்டு அசையாமல் நின்றாள்.
பணக்காரனின் மனைவிக்கு வேறு வழியே இல்லை. பணக்காரனின் உடலைச் சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லவும் ஏற்பாடு செய்தாள். அப்போதும், அந்த ஏழை இளைஞன் கருமிப் பணக்காரனின் உடலுக்குப் பின்னாலேயே நடந்து சென்றான். தூக்கிச் சென்றவர்கள் சுடு காட்டில் கொண்டு போய் வைத்ததும், கடுமையான மழை பெய்தது. உடனே சவப் பெட்டியை விட்டு விட்டு எல்லாரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால், அந்த ஏழை மட்டும் நகரவில்லை.
மழைநீர் கருமியின் உடலை நன்கு நனைத்ததும் குளிர் வாட்டியது என்றாலும், கடன்கார ஏழை அங்கேயே இருக்கிறானே என்ற அச்சத்தில் அப்போதும் எழுந்திருக்காமல் சவம் போலவே படுத்துக் கிடந்தார்.
நள்ளிரவும் வந்தது. அப்போது சில திருடர்கள் தாங்கள் திருடிய பொருள்களோடு அங்கே வர, ஏழை இளைஞன் சரசரவென்று ஆலமரத்தின் மீது ஏறிக் கொண்டான்.
திருடர்களும் அந்த ஆலமரத்தடியிலே அமர்ந்து திருடிய பொருள்களைப் பங்கிட்டு கொண்டனர். கடைசியில் ஒரு தங்கக் காசு மட்டும் தனியாக மிஞ்சியது. அதை யார் எடுத்துக் கொள்வது என்ற பிரச்னை ஏற்பட்டது.
ஆலமரத்தின் மீது இருந்த ஏழை இளைஞன், ""அதோ அந்தச் சவப்பெட்டியில் இருக்கும் பிணத்தின் தலையை உங்களில் யார் வெட்டி துண்டாக்குகிறீர்களோ அவர்களுக்கே இந்தப் பொற்காசு உரியது. இது ஆண்டவன் கட்டளை!'' என்று அசரீரி போலக் குரல் கொடுத்தான்.
திருடர்கள் அனைவரும் திடுக்கிட்டுப் போய்ச் சுற்றும், முற்றும் பார்த்தனர். யாரையும் காணவில்லை. அதனால் தாங்கள் கேட்டது உண்மையிலேயே ஆண்டவனின் குரல்தான் என்று நம்பி விட்டனர்.
திருடர்களில் ஒருவன், ""இந்தப் பொற்காசு எனக்கே கிடைக்கும். நானே அந்தப் பிணத்தின் தலையைக் கொய்து வருகிறேன்!'' என்று கூறி ஒரு குத்துவாளை எடுத்துக்கொண்டு கருமிப் பணக்காரனை நோக்கி நடந்தான்.
"தன்னை அவன் நிச்சயம் வெட்டிவிடுவான்' என்று அஞ்சி நடுங்கிய பணக்காரன் உடனடியாக எழுந்து நின்று, ""ஐயோ நான் சாக வில்லை. என்னை வெட்டாதே... வெட்டாதே!'' என்று கத்தினான்.
அவ்வளவுதான் திருடர்கள் அனைவரும், "ஐயோ! பிசாசு!'' என்று அலறியபடி எல்லாப் பொருள்களையும் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஏழையும், கருமியும் திருடர்களின் பொருள்களை சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.
""எனக்குத் தரவேண்டிய ஒரு காசை இப்போதுதாவது நீ தரலாம் அல்லவா?'' என்று கேட்டான் ஏழை.
""நான் என்ன தரமாட்டேன் என்றா சொல்கிறேன். இப்போது கூட எல்லாம் பொற்காசுகளாக உள்ளன. நீ சரியான சில்லறை கொடுத்து விட்டு ஒரு காசை வாங்கிக் கொண்டு போ,'' என்றான் கருமி.
"எப்படியோ கருமியால் தனக்கு ஏராளமான செல்வம் கிடைத்துவிட்டது. அவனிடமிருந்து கடனைத் திரும்ப வாங்க முடியாது விட்டு விடுவோம்' என்று நினைத்த ஏழை அங்கிருந்து புறப்பட்டான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.