Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 30, 2016

தியானம்!-சிறுகதை


ஆற்றங்கரையில் கழுதையானது அமைதியுடன் தியானம் செய்து வந்தது. கழுதையின் இந்தச் செயலை குரங்கு ஒன்று கவனித்தது. அந்தக் குரங்கு ஆற்றங்கரையை ஒட்டிய ஆலமரத்தில் வசித்து வந்தது.
கழுதை தினமும் ஆற்றங்கரையில் தியானம் செய்வதை கண்டு, அந்தக் குரங்கு பொறாமையடைந்தது.
"நம்மால் செய்ய முடியாத ஒரு செயலை இந்தக் கழுதையானது செய்து கொண்டிருக்கிறது. எனவே, நாம் இச்செயலில் இந்தக் கழுதையை நீடிக்க விடக் கூடாது. எப்படியாவது நாம் இந்தக் கழுதையின் தவத்தினைக் கலைக்க வேண்டும்' என்று முடிவு செய்தது குரங்கு.
உடனே அந்தக் குரங்கு தக்க நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் கழுதையானது அமைதியுடன் ஆற்றங்கரையில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் குரங்கு ஒரே பாய்ச்சலாக கழுதையின் முன்னே வந்து நின்றது.
கழுதையின் முன்னே வந்த குரங்கு தரையே குலுங்கும்படியாக குட்டிக்கர்ணம் போட்டது. பின்னர் கீச்...கீச்...கீச்... என்று கத்தியபடி, கழுதையின் மிக அருகில் சென்றது.
""கழுதையே! என்னைப் பார்! நான் எப்படியெல்லாமோ துள்ளிக் குதித்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறேன். நீயும் என்னைப் போன்று துள்ளிக் குதித்தபடி விளையாடலாமே. அதனை விட்டுவிட்டு எதற்காக இப்படித் தியானம் என்ற பெயரில் உன்னை நீயே வருத்திக் கொண்டிருக்கிறாய்?'' என்று சப்தமாகக் கேட்டது குரங்கு.
கழுதை மெல்ல தன் கண்களைத் திறந்தது.
""குரங்கே... நீ சொல்வதும் சரிதான். எனக்கும் உன்னைப் போன்று துள்ளிக் குதித்து விளையாட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நான் இப்போது துள்ளிக் குதித்தபடி உன்னோடு விளையாடுகிறேன். என் தியானத்தை விட்டு விடுகிறேன்,'' என்றது.
கழுதை தன் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் உடனே மனம் மாறும் என்று குரங்கு எதிர்பார்க்கவில்லை. அது மிகவும் மகிழ்ச்சியுடன் கழுதையை நோக்கியது. தான் எளிதாகக் கழுதையின் மனதை மாற்றியதாகத் தனக்குள் கர்வப்பட்டபடி நின்றது.
அதே நேரத்தில் கழுதையானது, ""குரங்கே, இதோ நான் துள்ளிக் குதித்த படி விளையாடுகிறேன். என்னுடைய விளையாட்டை நீ பார்,'' என்று கூறிய படி தன் பின்னங்கால்களையும், முன்னங்கால்களையும் மேலே தூக்கிய படி துள்ளிக் குதித்தது.
கழுதை துள்ளிய வேகத்தில் அதன் பின்னங்கால்கள் இரண்டும் குரங்கின் முகத்தில் பலமாக உதைத்தன. அந்த அதிரடி உதையை குரங்கு எதிர்பார்க்கவில்லை. அதன் வாயில் இருந்து ரத்தம் வடிய, பற்கள் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.
வலி தாங்க முடியாமல் அதிர்ச்சியுடன் ஆய்...ஊய்... என்று ஓட்டமெடுத்தபடியே சென்றது குரங்கு.
"இனிமேல் அந்தக் குரங்கானது இந்த இடத்திற்கு வராது. நாம் அமைதியுடன் தியானம் செய்யலாம்' என்று மகிழ்ச்சியடைந்தது கழுதை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.