Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

பிசாசு கொடுத்த பரிசு ! - சிறுகதை



முன்னொரு காலத்தில், மேட்டூர் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் வாசு, சோமு என்ற இரண்டு கூனர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் நண்பர்கள்.
இருவர் முதுகிலும் தேங்காய் அளவு தசை உருண்டை இருந்தது. இதனால், அவர்களால் நிமிர்ந்து நடக்க முடியாது. முதுகை வளைத்துக் குனிந்தபடியே நடந்தனர்.

அப்படி அவர்கள் நடந்து செல்வது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் நடப்பதைப் பார்த்தால் போதும், சிறுவர்கள் அவர்களைச் சூழ்ந்து நின்று, கேலி செய்து விளையாடுவர். அவர்களின் கேலிக்கு அஞ்சிய இருவரும், அந்த ஊரில் எந்த வேலையும் செய்வது இல்லை. காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடத்தி வந்தனர்.

அவர்கள் இருவரில் வாசு நல்லவனாகவும், உழைப்பாளியாகவும் இருந்தான். சோமுவோ சோம்பேறியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருந்தான்.
அடிக்கடி சோமு விறகு வெட்டக் காட்டிற்குச் செல்ல மாட்டான். வாசுவை ஏமாற்றி, அவன் உழைப்பில், தன் பசியைப் போக்கிக் கொள்வான்.
அன்றும் வழக்கம் போல வாசு விறகு வெட்டக் காட்டிற்குப் புறப்பட்டான்.
அவனிடம் சோமு, ""எனக்கு காய்ச்சல் அடிக்கிறது. என்னால் விறகு வெட்ட வர முடியாது,'' என்றான்.

விறகு வெட்ட நல்ல மரம் தேடிக் காட்டிற்குள் வெகு தொலைவு சென்றான் வாசு. ஒரு மரத்தைத் தேர்ந்து எடுத்து வெட்டினான். வெட்டிய விறகைப் பெரிய கட்டாகக் கட்டினான். அதற்குள், இருட்டிவிட்டது. இரவில் செல்ல வேண்டாம் என்று, அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் படுத்தான். நன்றாகத் தூங்கி விட்டான்.

நள்ளிரவில், யாரோ பாடும் குரல் கேட்டு, அவனுக்கு விழிப்பு வந்தது. "இந்த நேரத்தில் யார் பாடுகிறார்கள்' என்று நாலா பக்கமும் பார்த்தான்.
ஒரு மரத்தடியில் தேவதைகள் கூட்டமாகப் பாடிக் கொண்டிருந்தது நிலவொளியில் அவனுக்குத் தெரிந்தது.

""ஒன்றும் ஒன்றும் இரண்டு,

இரண்டும் ஒன்றும் மூன்று''

இப்படியே அவை திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தன.

இதைக் கேட்ட அவன், "தேவதைகளுக்கு இதற்கு மேல் பாடத் தெரியவில்லை. அந்தப் பாட்டை முழுமையாகச் சொல்லித் தருவோம்' என்று நினைத்தான்.
அவற்றின் அருகே சென்றான். அவனைப் பார்த்ததும் தேவதைகள் பாட்டை நிறுத்தின.

""உங்கள் குரல் இனிமையாக உள்ளது. இந்தப் பாட்டை முழுமையாகப் பாடினால், இன்னும் நன்றாக இருக்கும்,'' என்றான் வாசு.

""இந்தப் பாட்டில் இதற்கு மேல் எங்களுக்குத் தெரியாது. அதனால், தெரிந்த வரை பாடிக் கொண்டு இருக்கிறோம்,'' என்றது தேவதைகளின் தலைவி.
""நான் அந்தப் பாட்டை முழுமையாகச் சொல்லித் தரவா?'' என்று கேட்டான்.
""சொல்லித் தா,'' என்று எல்லாத் தேவதைகளும் குரல் கொடுத்தன.

""ஒன்றும் ஒன்றும் இரண்டு,

இரண்டும் ஒன்றும் மூன்று,

மூன்றும் ஒன்றும் நான்கு,

நான்கும் ஒன்றும் ஐந்து,'' என்று இனிமையாகப் பாடினான் அவன்.
அந்தப் பாட்டை அவனுடன் சேர்ந்து தேவதைகளும் மகிழ்ச்சியாகப் பாடின.
தேவதைகளின் தலைவி அவனிடம், ""நீ எங்களுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்தாய். எங்களுடன் சேர்ந்து இனிமையாகப் பாடினாய். உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன். உன் முதுகில் உள்ள கூனை எடுத்து விடுகிறேன். இனி நீ நேராக நிற்பாய். நடப்பாய்,'' என்றது.

என்ன வியப்பு! அவன் முதுகில் இருந்த கூனை காணவில்லை. மற்றவர்களைப் போல நிமிர்ந்து நின்றான் வாசு.

மகிழ்ச்சியில் திளைத்த அவன், தேவதைகளுக்கு நன்றி சொன்னான்.
அப்போது திடீரென்று பூமி ஆடியது.

""ஆ! ஊ! என்று பயங்கரமான கூச்சல் கேட்டது.

""ஐயோ! பிசாசுகள் வருகின்றன. இந்த மரத்தில் ஏறி நன்றாக ஒளிந்துக் கொள். அவற்றின் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்று விடும்,'' என்று பதற்றத்துடன் சொன்னது தேவதை தலைவி.

பிறகு அவை அங்கிருந்து மறைந்தன.

அந்த மரத்தில் ஏறினான் அவன். அங்கிருந்த இலைகளுக்குள் ஒளிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்று கீழே பார்த்தான்.

பெரிய பிசாசு ஒன்றும், குட்டிப் பிசாசுகள் மூன்றும் அங்கே வந்தன. பார்ப்பதற்கு, அவை பயங்கரமாக இருந்தன.

மரத்து வேரில் அமர்ந்தது பெரிய பிசாசு. குட்டிப் பிசாசுகள் மூன்றும் அதன் எதிரில் நின்றன.

""குட்டிப் பிசாசுகளே... நீங்கள் இன்று என்னென்ன கொடிய செயல் செய்தீர்கள்? சொல்லுங்கள், உங்கள் திறமையைப் பார்க்கிறேன்,'' என்றது பெரிய பிசாசு.

முதலாவது குட்டிப் பிசாசு, ""நான் நல்லூரில் உள்ள எல்லோர் கண்களையும் குருடாக்கி விட்டேன். அவர்களால் இனிமேல் எதையும் பார்க்க முடியாது. இனி அங்கே அழுகையும் ஒப்பாரியும்தான் கேட்கும்,'" என்று பெருமையுடன் சொன்னது.

""அருமையான செயல் செய்தாய். உன்னைப் பாராட்டுகிறேன்,'' என்றது.

இரண்டாவது குட்டிப் பிசாசைப் பார்த்து, ""நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டது.
""புத்தூரில் உள்ள எல்லோரையும் ஊமைகளாக்கி விட்டேன். இனி அவர்களால் பேச முடியாது. பச்சிளம் குழந்தைகள் அழவும் முடியாமல் தவிக்கின்றனர். கண் கொள்ளாக் காட்சியாக உள்ளது,'' என்றது இரண்டாவது குட்டிப் பிசாசு.

""நீயும் அருமையான செயல் செய்தாய். உன்னையும் பாராட்டுகிறேன்,'' என்றது அது.

மூன்றாவது குட்டிப் பிசாசைப் பார்த்து, ""நீ என்ன செய்தாய்?'' என்று கேட்டது.
""அரசூரில் உள்ள எல்லோரையும் செவிடாக்கி விட்டேன். இனி அவர்களால் எதையும் கேட்க முடியாது,'' என்றது மூன்றாவது குட்டிப் பிசாசு.

""உன்னையும் பாராட்டுகிறேன். இப்படித் தான் மக்களுக்கு நாம் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் துன்பம் தாங்காமல் அழுது புலம்ப வேண்டும். அவர்களின் அழுகுரலைக் கேட்டு நாம் மகிழ வேண்டும்,'' என்றது அது.

அந்தப் பிசாசுகள் ஒன்றை, ஒன்று கட்டிப் பிடித்து ஆட்டம் போட்டன.
""இப்படியே மக்களுக்குத் துன்பம் தருவோம்,'' என்று ஆரவாரம் செய்தன.
மரத்தின் மேலிருந்த வாசு இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். "இந்தப் பிசாசுகள் இப்படி மக்களுக்குத் துன்பம் தருகின்றனவே' என்று வருந்தினான்.
மீண்டும் அந்தப் பிசாசுகள் பேசத் தொடங்கின.

""என்னால் பார்வை இழந்தவர்கள் மீண்டும் பார்வை பெறப் போவதும் இல்லை. அவர்கள் அழுகுரல் நிற்கப் போவதும் இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னது முதலாவது குட்டிப் பிசாசு.

""எந்த நோய்க்கும் மருந்து இருக்க வேண்டுமே அவர்கள் திரும்பப் பார்வை பெற ஏதேனும் வழி உள்ளதா?'' என்று கேட்டது பெரிய பிசாசு.

""விடிகாலையில் செடிகளில் படிந்துள்ள பனித்துளிகளை அவர்கள் கண்களில் தடவி னால் போதும், அவர்கள் பார்வை பெறுவர். இந்த மருந்து நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்கள் பார்வை பெறுவர் என்று அஞ்ச வேண்டாம்,'' என்றது முதலாவது குட்டிப் பிசாசு.

""இரண்டாவது குட்டிப் பிசாசே! உன்னால் ஊமையானவர்களுக்கும் இதே போல் மருந்து உள்ளதா?'' என்று கேட்டது பெரிய பிசாசு.

""புன்னை மலர்களைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் கொடுத்தால் போதும், அவர்கள் பேசத் தொடங்குவர்,'' என்றது இரண்டாவது குட்டிப் பிசாசு.

""மூன்றாவது குட்டிப் பிசாசே! உன்னால் செவிடானவர்கள் மீண்டும் கேட்க மருந்து உள்ளதா?'' என்று கேட்டது.

""அரசூருக்கு நடுவே கோவில் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரிய பாறை ஒன்று கிடக்கிறது. அந்தப் பாறையில் அவர்கள் காதை வைத்தால், கேட்கும் ஆற்றல் வந்து விடும்,'' என்றது மூன்றாவது குட்டிப் பிசாசு.

""ம்ம்ம்.... இந்த ரகசியம் நம்முடனே இருக்கட்டும். யாருக்கும் தெரிய வேண்டாம்; அவர்கள் எல்லாரும் துன்பம் தாங்காமல் அழுது புலம்பி துன்பப்படட்டும். இதே போல, புதுப்புதுத் துன்பங்களை அவர்களுக்குத் தாருங்கள்,'' என்று பூரிப்புடன் சொன்னது பெரிய பிசாசு.

பிறகு அவை அங்கிருந்து சென்றன.

பொழுது விடிந்தது. இனி ஆபத்து இல்லை என்பதை அறிந்த அவன், மரத்தில் இருந்து இறங்கினான்.

நல்லவனான அவன், பிசாசுகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்க நினைத்தான்.அங்கிருந்து நடந்த அவன் முதலில் நல்லூரை அடைந்தான். அங்கே எல்லாரும், பார்வை இழந்து துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இலைகளின் மேல் கிடந்த பனித்துளி களை ஒரு பாத்திரத்தில் திரட்டினான் வாசு.

அவர்களை ஒவ்வொருவராக அழைத்தான். அவர்கள் கண்களில் பனித்துளியைத் தடவினான். எல்லாரும் பார்வை பெற்றனர்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள், அவனிடம் ஏராளமான பொன்னையும், மணிகளையும் தந்தனர்.

அவற்றை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டான். அடுத்ததாக, அரசூரை அடைந்தான். அந்த ஊர் மக்கள் எல்லாரையும் கோவில் பாறை அருகே அழைத்துச் சென்றான். பாறையில் காதை வைக்கும் படி சைகை செய்தான்.
அவர்களும் அந்தப் பாறையில் காதை வைத்தனர். அந்தப் பாறையில் சுத்தியால் அடித்து, ஓசை எழுப்பினான். அந்த ஓசை கேட்டதும், அவர்கள் எல்லாருக்கும் காது கேட்கத் தொடங்கியது.

மகிழ்ச்சி அடைந்த அவர்கள் அவனிடம் பொற்காசு மூட்டையைத் தந்தனர்.
""உங்களால் கேட்கும் ஆற்றலைப் பெற்றோம். எங்கள் காணிக்கையாக இதை வைத்துக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினர்.

அந்தப் பொற்காசு மூட்டையையும் தூக்கிக் கொண்டான் அவன். அடுத்ததாக, புத்தூரை அடைந்தான்.

அங்கே நிறைய புன்னை மலர்கள் பூத்திருந்தன. அவற்றை காய்ச்சி, அந்த ஊர் மக்கள் அருந்தக் கொடுத்தான் அவன். எல்லாரும் பேசும் ஆற்றலைப் பெற்றனர்.

அவர்களும் அவனுக்கு ஏராளமான பொற்காசுகளைக் காணிக்கையாகத் தந்தனர்.

எல்லாவற்றையும் தூக்கிக் கொண்டு, தன் ஊர் திரும்பினான்.
கூன் நீங்கி ஏராளமான செல்வத்துடன் அவன் திரும்பியதைப் பார்த்தான் சோமு.

பொறாமையால் துடித்த சோமு, ""உனக்கு எப்படி இவ்வளவு செல்வம் கிடைத்தது?'' என்று கேட்டான்.

நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொன்னான் அவன்.

""தேவதைகள் பாடிக் கொண்டிருந்த அந்த மரம் எங்கே உள்ளது? எனக்குக் காட்டு,'' என்று கேட்டான் சோமு.

""அங்கே செல்லும் எண்ணத்தை விட்டுவிடு. சென்றால், பிசாசுகளால் உனக்கு ஆபத்து வரும் என்னிடம் ஏராளமான செல்வம் உள்ளது. உனக்கு தேவையானதை எடுத்துக் கொள்,'' என்றான் வாசு.

""அந்த மரத்தைப் பார்க்க ஆசையாக உள்ளது. அதைக் காட்டு. நான் தனியாக அங்கே செல்ல மாட்டேன். என்னை நம்பு,'' என்றான் சோமு.

காட்டிற்கு அழைத்துச் சென்று அவன் அந்த மரத்தைக் காட்டினான்.

அன்று மாலையே அவனிடம் சொல்லாமல் புறப்பட்டான் சோமு. அந்த மரத்தை அடைந்த அவன் அதன் மேல் ஏறினான். கிளைகளுக்கு இடையே நன்றாக ஒளிந்துக் கொண்டான்.

சிறிது நேரம் சென்றது.

""ஆ! ஊ!'' என்று பயங்கரமான ஓசை கேட்டது. பூமி ஆடத் தொடங்கியது. நடுங்கிய அவன் கிளைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.
பிசாசுகள் நான்கும், அந்த மரத்தின் கீழ் வந்து நின்றன. வழக்கம் போலப் பெரிய பிசாசு மரத்தின் வேரில் அமர்ந்தது.

""நம்மிடையே கருங்காலி ஒருவன் இருக்கிறான். அவன்தான் ரகசியத்தை வெளிப் படுத்தி இருக்கிறான். இல்லாவிட்டால், நல்லூர் மக்கள் எப்படிப் பார்வை பெற்று இருப்பர்? புத்தூர் மக்கள் எப்படிப் பேசி இருப்பர்? அரசூர் மக்கள் எப்படிக் கேட்கத் தொடங்கி இருப்பர்? யார் அந்தக் கருங்காலி?'' என்று கோபத்துடன் கத்தியது பெரிய பிசாசு.

""நாங்கள் அப்படிச் செய்வோமா? எங்கள் மீது ஐயப்படலாமா?'' என்று மூன்று குட்டிப் பிசாசுகளும் கேட்டன.

""நீங்கள் செய்திருக்க மாட்டீர்கள். அப்படியானால் யார் செய்து இருப்பர்?'' என்ற அது சிந்தனையில் ஆழ்ந்தது.

""இந்த ரகசியங்களை நாம் இங்கேதான் பேசினோம். இங்கேதான் ஏதோ நடந்து உள்ளது. நாம் பேசியதை யாரோ கேட்டிருக்க வேண்டும். நாம் ஒளிந்து இருந்து பார்த்தால், உண்மை தெரிந்து விடும்,'' என்றது.

அருகில் இருந்த புதரில் அந்த நான்கு பிசாசுகளும் நன்றாக ஒளிந்துக் கொண்டன.

மரத்தில் இருந்த சோமு அவற்றின் பேச்சைக் கேட்டு நடுங்கினான்.
சிறிது நேரம் சென்றது. கலகலவென்று சிரித்தபடி தேவதைகள் அங்கே வந்தன. பிசாசுகள் ஒளிந்து இருந்ததை அவை அறியவில்லை.

வழக்கம் போல அவை,

""ஒன்றும் ஒன்றும் இரண்டு,

இரண்டும் ஒன்றும் மூன்று,

மூன்றும் ஒன்றும் நான்கு,

நான்கும் ஒன்றும் ஐந்து,'' என்று பாடத் தொடங்கின.

இந்த தேவதைகள் தன் கூனைச் சரியாக்கி விடும் என்று நினைத்தான் அவன். அவை பாடி முடிக்கும்வரை அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

""ஐந்தும் ஒன்றும் ஆறு,

ஆறும் ஒன்றும் ஏழு,'' என்று பாடியபடியே கீழே குதித்தான்.

அவன் குதித்ததைப்பார்த்த தேவதை கள் பாடுவதை நிறுத்தின. அவனைக் கோபத்துடன் பார்த்தன.

""நாங்கள் எல்லாரும் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தோம். குறுக்கிட்டுக் கெடுத்து விட்டாயே,'' என்றது தேவதைகளின் தலைவி.

புதரில் மறைந்து இருந்த பிசாசுகள் அங்கே நடந்த எல்லாவற்றையும் பார்த்தன.

""இவன்தான் ஒளிந்து இருந்து எல்லாவற்றையும் கேட்டு இருக்கிறான். நம் முயற்சியை எல்லாம் பாழாக்கி விட்டான். இவனைப் பிடியுங்கள்,'' என்று கோபத்துடன் குரல் கொடுத்தது பெரிய பிசாசு.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் அங்கே ஓடி வந்தன.

பிசாசுகள் வருவதைப் பார்த்ததும் தேவதைகள், அங்கிருந்து ஓட்டம் பிடித்தன.
மூன்று பிசாசுகளும் சோமுவைப் பிடித்துக் கொண்டன. பெரிய பிசாசு அங்கே வந்தது.

""நான் இப்போதுதான், முதன் முறையாக இங்கே வந்தேன். உங்கள் ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னவன் என் நண்பன் வாசுதான். என்னை விட்டுவிடுங்கள். இனிமேல், இந்தப் பக்கம் வர மாட்டேன்,'' என்று கெஞ்சினான்.

அவனை முறைத்துப் பார்த்த பெரிய பிசாசு, ""உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது. நீ சொல்லவில்லை என்பதை நம்ப முடியாது. உனக்குக் கொடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,'' என்றது.
""இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?'' என்று மற்ற பிசாசுகளைக் கேட்டது.

குட்டிப் பிசாசுகள் மூன்றும் அவனை நன்றாகப் பார்த்தன.

அவற்றில் ஒன்று, ""இவன் முதுகில் தேங்காய் அளவு கூன் உள்ளது. இன்னொரு தேங்காய் அளவு கூனை வைத்தால் பூசணிக்காய் அளவாகிவிடும். அவ்வளவு பெரிய கூனைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் துன்பப்படுவான். இவனுக்கு ஏற்ற தண்டனை இதுதான்,'' என்றது.

இதைக் கேட்ட அவன், ""என்னைக் கொன்று போடுங்கள். இன்னொரு கூன் வேண்டாம்,'' என்று அலறினான்.

அவன் அலறலை அவை பொருட்படுத்தவில்லை. இன்னொரு கூனை அவன் முதுகில் வைத்துவிட்டு, அங்கிருந்து மறைந்தன.

இப்போது, அவன் முதுகில் பூசணிக்காய் அளவு பெரிய கூன் இருந்தது. அந்தக் கூனைத் தூக்கிக் கொண்டு, அவனால் நடக்க முடியவில்லை.
எப்படியோ, மெல்ல நடந்து ஊர் வந்து சேர்ந்தான்.

அவன் நிலையைப் பார்த்து இரக்கப்பட்ட வாசு அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான்.

தனது நிலைமையை எண்ணி அழுது புலம்பினான் சோமு.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.