April 30, 2016
தன்னம்பிக்கையில் துளிர்த்த வாழ்க்‘கை’ - மாளவிகா
ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாள்விகாவிற்கு ஏகப்பட்ட கனவுகள்...! கதகளி ஆட வேண்டும், மலை ஏற வேண்டும், ஓடி விளையாட வேண்டும் என கனவுகளில் மிதக்க, ஒரு வெடிவிபத்து மாள்விகாவின் கனவுகளையும், இரு கைகளையும் சிதைத்துவிட்டது. ஆனால் அடுத்தடுத்து துளிர்த்த நம்பிக்‘கை’கள், அவரை ஒரு சாதனை பெண்ணாக உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. ‘வாழ்வென்றால் போராடும் போர்க்களம்’ என்பதை புரிய வைக்கிறது, மாள்விகாவின் வேதனைகளும், சாதனைகளும்..!
ஆம், தன் மீது விழுந்த பரிதாபப் பார்வைகளுக்கெல்லாம் ‘படிப்பில் படு சுட்டி, சமூக சேவகர், தன்னம்பிக்கை பேச்சாளர், அழகான மாடலிங், ஆராய்ச்சியாளர்’... போன்ற சாதனைகளால் பதிலளிக்கிறார்.
சென்னை, தாம்பரம் பகுதியில் தாய் ஹேமா, கணவர் கணபதி ஸ்ரீநிவாஸுடன் வசிக்கும் மாள்விகாவை சந்தித்தோம்...
‘‘கும்பகோணம் தான் பூர்வீகம், என்றாலும் தந்தையின் பணிமாற்றம் என்னை ராஜஸ்தான் பிக்கானிர் உள்பட பல இடங்களுக்கு அழைத்து சென்றது. என்னுடைய 13 வயது வரை அங்குதான் வாழ்ந்தோம். நீச்சல், ஸ்கேட்டிங், கதகளி நடனம் என ரொம்பவும் சந்தோஷமாக நகர்ந்தது, என்னுடைய குழந்தைப் பருவம். 2002–ம் ஆண்டு மே 26–ம் நாள் என் வாழ்க்கையில் வராமலேயே போயிருக்கலாம்’’ என்று கடந்த காலத்துக்குள் நுழையும் போது அவரையும் அறியாமல் வார்த்தைகள் நடுங்குகின்றன.
‘‘அப்போது எனக்கு 13 வயது. எனக்கு நடந்த அந்த விபத்துக்கு சில மாதங்கள் முன்பாக தான், அருகில் இருந்த அரசாங்க வெடிகுண்டு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருந்தது. அங்கிருந்த கை வெடிகுண்டு உட்பட பலவிதமான வெடிப்பொருட்களும் வெடித்து, ஊர் முழுக்க சிதறி கிடந்தன. அதில் ஒரு துண்டு நாங்கள் தங்கியிருந்த பகுதியில் விழுந்திருக்கிறது. இது தெரியாமல் அதை விளையாட்டு பொருளாக நினைத்து எடுத்து விளையாட சில நொடிகளிலேயே அது வெடித்து சிதறியது.
அவ்வளவுதான்...!, என்னுடைய இரண்டு கைகளும் சிதறிப் போச்சு. கால்களும் செயலிழந்து போச்சு. கால்களில் ‘ஹைப்போ எஸ்தேசியா’ என்று சொல்லப்படும் உணர்வுகள் மரத்துப்போன நிலை. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் ரத்தம் போயிருந்தது. இருப்பினும் எப்படியோ உயிர் பிழைத்துவிட்டேன். இடது கால் மொத்தமும் உணர்வுகளையும், வடிவத்தையும் இழந்திருந்தது. விபத்தில் ஏற்பட்ட காயங்களை விட, பார்க்க வந்தவர்களின் பரிதாபம் என்னை அதிகமாக காயப்படுத்தியது. இருந்தாலும் அம்மாவின் நம்பிக்கை என்னை ஒன்றரை ஆண்டுகளில் எழுந்து நடமாட வைத்தது’’ என்று கூறும் மாள்விகா, உயர் சிகிச்சை பெறுவதற்காகவே சென்னை வந்திருக்கிறார்.
‘‘9–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படுக்கையிலேயே இருந்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போது செயற்கைக் கைகளை வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று நானும், அம்மாவும் இன்டர்நெட்டில் தேடினோம். அப்போது செயற்கைக் கைகளை தயாரிக்கும் நிறுவனத்தின் உதவியுடன் ‘மையோ எலக்ட்ரானிக்’ என்ற செயற்கைக் கைகளை பொருத்தி கொண்டேன். பேட்டரியில் இயங்கும் செயற்கைக் கைகள், நிஜக் கைகளைப் போல திறந்து மூடக்கூடியவை. அந்தக் கைகளில் பேனாவை வைத்து எழுதிப் பழகினேன். தேர்வுக்கு மூன்று மாதம் இருந்த நிலையில் படிப்பு, எழுத்து பயிற்சி என கடுமையாக உழைத்தேன். எந்நேரமும் படிப்பு, படிப்பு என கவனமாக இருந்ததால் தேர்வில் நல்ல மதிப்பெண்களும் கிடைத்தன. தனி தேர்வர்களில் நான் தான் டாப்பர்’’ என்று வெற்றி பாதையில் நடக்க ஆரம்பித்ததை விளக்கினார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500–க்கு 483 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாள்விகா, கணிதம், அறிவியல் என இரு பாடங்களில் சதங்களை ருசித்திருக்கிறார். மேலும் இந்தி பாடத்தில் 97 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித் திருக்கிறார்.
‘‘தேர்வில் கிடைத்த வெற்றி, என்னை மேன்மேலும் சாதிக்க தூண்டியது. என்னை பாராட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. மேலும் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் என்னை அழைத்து பாராட்டினார். இத்தகைய பாராட்டுகள் என்னை ஊக்கப் படுத்த பிளஸ்–2, பொருளாதாரம் பிரிவில் இளங்கலை பட்டம், சமூக சேவையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், ஆராய்ச்சி படிப்புகள் என நிறைய படித்தேன். சமூக சேவை படிப்பின்போது மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுடன் பழக வாய்ப்பு கிடைத்ததால், அவர்களின் நிலையில் இருந்து, அவர்களை புரிந்துகொள்ள முடிந்தது. உடல் குறைகளை நினைத்து துவண்டு கொண்டிருந்தவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேச ஆரம்பித்தேன். என்னுடைய கதைகளை கூறி அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டினேன். அந்த உத்வேகம் தான் என்னை தன்னம்பிக்கை பேச்சாளராக மாற்றியது. இப்போது ‘மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்’ என எனக்கு கிடைத் திருக்கும் அடையாளத்திற்கு அந்தப் பேச்சுதான் அஸ்திவாரம். இன்றைக்கும் நிறைய பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை சொற் பொழிவுகளை நிகழ்த்த அழைக்கிறார்கள்’’ என்று கூறும் மாள்விகா கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த சர்வதேச பெண்கள் மாநாட்டில் ‘உலகளவில் வளர்ந்து வரும் இளம் தலைவர்’ என்ற விருதையும் வென்றிருக்கிறார். மேலும் அவுட்ஸ்டாண்டிங் மாடல் ஸ்டூடென்ட் விருது, ரோலிங் கப் விருது, ஆர்.ஈ.எக்ஸ். கர்மவீரா சக்ரா விருது என குவிந்துகிடக்கும் விருதுகள் இவரின் சாதனை முயற்சிகளை தெளிவுப்படுத்துகின்றன.
படிப்பு, மேடை பேச்சு என பிசியாக இயங்கி வரும் மாள்விகாவிற்கு ஆடை அலங் காரத்தில் ஆர்வம் அதிகம்.தன்னை வித விதமாக அலங்கரித்துக்கொண்டு அடிக்கடி பேஷன் ஷோக்களிலும் பவனி வருகிறார்.
‘‘எபிலிட்டி பவுண்டேஷனும், என்.ஐ.எப்.டியும் சமீபத்தில் நடத்திய ஒரு பேஷன் ஷோவில் கலந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற ‘ராம்ப் வாக்’கில் நடைபோட ‘நிப்ட்’டை சேர்ந்த மாணவர்கள் அழகான கவுன் களை வடிவமைத்து கொடுத்தார்கள். அவை என்னுடைய செயற்கைக் கைகளை எளிதில் நுழைக்கிற மாதிரியில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்த கவுன்களை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்தேன். இந்த அனுபவம், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேக உடை வடிவமைத்தால் என்ன?’ என்று யோசிக்க வைத்தது. அதனால் செயற்கைக் கை, கால்களை எளிதில் நுழைக்கும் மாதிரியில் நவீன உடைகளை தயாரிக்கும், முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது அதை மையப்படுத்திய முனைவர் பட்டப்படிப்புகளையும் படித்து வருகிறேன். ஆராய்ச்சிகளும், படிப்புகளும் இறுதிகட்டத்தை நெருங்கி இருப்பதால் மிகவிரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன உடைகளை அறிமுகப்படுத்துவேன்’’ என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்க்கிறார்.
‘‘படிக்க வேண்டும்... படித்துக்கொண்டே இருக்கவேண்டும்’’ என்பதில் உறுதியாக இருக்கும் மாள்விகா, பேஷன் ஷோ, ராம்ப் வாக், உடை அலங்காரம், மாடலிங் என பேஷன் உலகிலும் ஜொலிக்கிறார்.
மாடலாக கேமராவிற்கு போஸ் கொடுப்பதுடன், சில மேடைகளில் நடனமும் ஆடுகிறார்.
‘‘சிறுவயதில் கற்றுக்கொண்ட கதகளி, இன்று வரைமுறை இல்லாத நடனமாக வெளிப்படுகிறது. விபத்தில் உண்டான உடல் குறைகளை, ஏற்று மகிழ்ச்சியோடு வாழ பழகிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி அமைந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதை நான் சரியாக புரிந்துகொண்டிருப்பதால் என்னுடைய வாழ்க்கை இனிக் கிறது’’ என சிரிக்கும் மாள்விகாவிற்கு இன்னும் சிகிச்சைகள் முழுமையடையவில்லை. விபத்து நடந்தது முதல் இதுவரைக்கும் 25–க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டிருந்தாலும், வெடித்து சிதறிய குண்டின் சிறு பாகம் இன்னும் அவரது உடலிலேயே இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
இறுதியாக ‘‘மாற்றுத்திறனாளிகள் என ஒதுக்கிவிடாமல், அவர்களிடமும் நட்பு பாராட்டினால் என்னை போன்று பல சாதனையாளர்கள் உருவாவதில் சந்தேகமே இல்லை’’ என்ற வலுவான கருத்துடன் விடைபெற்றார்.
தன்னம்பிக்கையில் துளிர்த்த வாழ்க்‘கை’ - மாளவிகா
Reviewed by மறத்தமிழன்
on
April 30, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.