Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2016

ஸ்மார்ட் பேனா மற்றும் நோட் புக்



நவீன கணினி யுகத்தில் மனிதனின் அறிவுத்திறனுடன் பல ஸ்மார்ட் கருவிகளும் இணைந்து மனித செயல்திறனை பன்மடங்கு உயர்த்தி செயற்கரிய பல சாதனைகளை செய்ய உதவுகின்றது. உதாரணமாக, மனிதர்களின் கல்வி கற்றலின் பாரம்பரிய அங்கமாக இருந்துவந்த தாள்களைக் கொண்ட நோட்டு புத்தகங்களில் (குறிப்பேடுகள்) எழுதும் பழக்கம் தற்போதைய காலகட்டத்தில் முற்றிலும் குறைந்து எல்லாம் தொடுதிரை மயமாகிவிட்டது. தற்போதுள்ள தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களில் தொடங்கி மிகவும் நவீனமான தொடுதிரை கணினிகள், பேனா பென்சில்களை பரண்மேல் ஏற்றி கற்றல் அனைத்தையும் இணைய மயமாக்கி விட்டது என்றே சொல்லலாம்.

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ எனும் குறள் மூலம் கற்கத் தகுந்த நூல்களைப் பிழை இல்லாமல் கற்று, பின்பு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ வேண்டும் என்றார் திருவள்ளுவர். அதுபோல ஒரு குறிப்பேட்டில் எழுதிய, கிறுக்கிய, வரைந்த மற்றும் கற்றலின்போது ஏற்படும் பிழைகளை அழிப்பான் கொண்டு அழித்து திருத்திய சுகமான அனுபவமே தனிதான்.

ஆனாலும் அத்தகைய குறிப்பேடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் கிழிந்து, மக்கி சிதைந்துபோய்விடும் என்பதால் அதன்பிறகு அவற்றை பயன்படுத்த முடியாது என்பதே எதார்த்தம். ஆக, விலைமதிக்க முடியாத பாடங்கள், வரைபடங்கள், ஓவியங்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் அழிந்துவிடுவதை தவிர்க்க இயலாது. ஆனால் தற்போதைய ஸ்மார்ட் தொடுதிரை கருவிகள் மூலம் கல்வி தொடர்பான அனைத்தையும், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இணையம் மூலம் பாதுகாக்க முடியும்.

மாறாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி, கிறுக்கி, அடித்து திருத்தி எழுதிய சுகமான அனுபவமும் கிடைத்து, அதனை இணையத்தில் தரவேற்றி பாதுகாத்தும் வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று தோன்றுகிறதா?

அதனாலென்ன, இதோ இந்த ‘ஸ்மார்ட் பேனா மற்றும் நோட்புக்’கை பயன்படுத்தி அப்படியே செய்து விடலாமே என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் அமெரிக்காவைச் சேர்ந்த மோல்ஸ்கின் நிறுவனத்தினர்.

ஸ்மார்ட் பேனாவுடன் இணைந்த ஒரு நோட்புக் மூலம், நாம் எழுதும் எழுத்துகள் மற்றும் ஓவியம் அல்லது வரைபடங்கள் என அனைத்தும் நிகழ்நேரத்தில் டிஜிட்டல் மயமாகி இணையத்தில் திருத்தி எழுதும் அமைப்புக்கு மாற்றப்படுகிறது.

ஸ்மார்ட் பேனாவுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் காமெராவானது நோட்புக்கின் பக்கங்கள் மீது நகரும் பேனாவின் முனையின் நகர்வுகளை படம்பிடித்து பதிவு செய்கிறது. பின்னர் புளூடூத் மூலம் ஸ்மார்ட் பேனாவை இணையத்துடன் இணைப்பதன் மூலம் நோட்புக்கில் எழுதப்படும் அனைத்தும் நிகழ்நேரத்தில் இணையம் வழி மின்னஞ்சல் செய்யப்படும் வசதியும் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் பேனா மற்றும் நோட்புக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் ஸ்மார்ட் பேனாவை பயன்படுத்த நேர்ந்தால், சுமார் 1000 பக்கங்கள் அளவுள்ள நம் குறிப்புகள் அனைத்தையும் சேமித்து வைத்து பின்னர் பயன்படுத்திக் கொள்ள சேமிக்கும் வசதியும் ஸ்மார்ட் பேனாவில் உண்டு என்பது கவனிக்கத்தக்கது. ஆக, தாள்களைக் கொண்ட ஒரு ஸ்மார்ட் குறிப்பேடு, ஸ்மார்ட் பேனா மற்றும் ஒரு செயலி மூலம் சாதாரண ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதும் சுகமும், பின்பு நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு இணையத்தில் அதனைத் திருத்திக்கொள்ளும் அதி நவீன வசதியையும் கொடுக்கிறது மோல்ஸ்கின் நிறுவனத்தின் அட்டகாசமான் இந்த ஸ்மார்ட் பேனா மற்றும் நோட்புக் இணை.

வருங்காலத்தில் இனி நம் குழந்தைகள் புத்தகம் மற்றும் நோட்டுகள் கொண்ட சுமையை முதுகில் சுமந்து செல்லும் நிலை வராது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.