Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2017

லாலு பிரசாத் இல்லாத ஒரு இரவில் காய் நகர்த்தி ஆட்சியில் அமர்ந்த பாஜக !


பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) - ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கூட்டணி ஆட்சியில் இருந்தது. ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் முதல்வராகவும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

கடந்த 26-ம் தேதி இரவு நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அன்றிரவே பாஜக ஆதரவுடன் புதிய அரசு அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அடுத்த நாள் காலையில் நிதிஷ் முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி துணை முதல்வராகவும் பதவியேற்றனர். 28-ம் தேதி சட்டப்பேரவையில் நிதிஷ் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். எல்லாமே 40 மணி நேரத்துக்குள் நடந்து முடிந்தது.

இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது புதன்கிழமை இரவு. அன்றிரவு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாட்னாவில் இல்லை. இந்த வாய்ப்பை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தி பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. சிறிது பிசகியிருந்தாலும் லாலு ஆட்சியைக் கைப்பற்றியிருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

லாலு பிரசாத் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கு ராஞ்சி நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை லாலு நேரில் ஆஜராக வேண்டும். அதற்காக அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டதால் வேறு வழியின்றி காரில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு செல்ல 8 மணி நேரம் ஆகும். இதற்காக புதன்கிழமை இரவு 9 மணிக்கு லாலு காரில் புறப்பட திட்டமிட்டிருந்தார். இந்த நாளுக்காக காத்திருந்த நிதிஷ் அன்றிரவு 7 மணிக்கு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்கு விசாரணையில் கட்டாயம் ஆஜராக வேண்டிய லாலு பாட்னாவில் இருந்து இரவு 9 மணிக்கு காரில் புறப்பட்டார். அடுத்த சில நிமிடங்களில் பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் நிதிஷ் வீட்டுக்குச் சென்று அவரை புதிய தலைவராகத் தேர்வு செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஆளுநர் கேசரி நாத் திரிபாதியை, நிதிஷ் குமாரும், சுஷிலும் சந்தித்து 131 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினர். அடுத்த நாள் பதவியேற்பு விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது.


நிதிஷ்குமாரும் பாஜக தலைவர்களும் இவ்வளவு விரைவாக செயல்படுவார்கள் என்று லாலு கருதவில்லை. ராஞ்சியில் இருந்து பாட்னா திரும்பிய பிறகு ஆட்சியை மீண்டும் கைப்பற்றிவிடலாம் என்றே லாலு திட்டமிட்டிருந்தார்.

ஆர்ஜேடி 80, காங்கிரஸ் 27, சிபிஐஎம்எல்-3 என லாலு அணிக்கு 110 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. ஆட்சியமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் ஜேடியு எம்எல்ஏக்களில் சிலருக்கு அதிருப்தி இருந்தது. அதை பயன்படுத்தி யாதவர் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 16 ஜேடியு எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்க லாலு வியூகம் வகுத்திருந்தார்.

ஆனால் நிதிஷும் பாஜக தலைவர்களும் லாலு இல்லாத ஒருநாள் இரவைப் பயன்படுத்தி அடுத்தடுத்து நேர்த்தியாக காய்களை நகர்த்தினர். அவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அறிந்த லாலு, தனது மகன் தேஜஸ்வி யாதவுக்கு செல்போனில் உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதன்படி தேஜஸ்வி யாதவ் நள்ளிரவு 2 மணி அளவில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது அவருடன் 4 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.

தேஜஸ்வி கூற்றில் ஆளுநருக்கு திருப்தி இல்லை. மேலும் பதவி ஏற்பு நிகழ்ச்சியை மாற்ற வாய்ப்பில்லை என்பதையும், 48 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க நிதிஷுக்கு கெடு விதித்திருப்பதையும் தேஜஸ்வியிடம் ஆளுநர் திரிபாதி சுட்டிக்காட்டினார். இதனால் லாலுவின் வியூகம் தோல்வி அடைந்தது. அதேநேரம் காரில் சென்றபோதே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தொடர்புகொண்டு பாட்னா நிலவரத்தை லாலு விவரித்தார்.

பிஹார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி அப்போது டெல்லியில் முகாமிட்டிருந்தார். இதை பயன்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை நிதிஷ் தன்பக்கம் ஈர்க்கக்கூடும் என்று லாலு எச்சரித்தார். இதைத் தொடர்ந்து அசோக் சவுத்ரி உடனடியாக பாட்னா திரும்பி னார்.

ஆளுநரை, தேஜஸ்வி சந்தித்தபோது லாலு உடன் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாகும். மேலும் 48 மணி நேர அவகாசம் வரை காத்திருக்காமல் வெள்ளிக்கிழமையே நிதிஷ் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

புதன்கிழமை நள்ளிரவில் ஜேடியு எம்எல்ஏக்களை ஈர்க்க ஆர்ஜேடி கடுமையாக போராடியபோது லாலு பிரசாத் காரில் ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார். தேஜஸ்வி தனிஆளாக களம் இறங்கினார்.

அன்றிரவு ஜேடியு எம்எல்ஏக்கள் முழுமையாக நிதிஷின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. எவ்வளவு முயன்றும் பாஜக, நிதிஷின் வியூகத்தை தேஜஸ்வியால் உடைக்க முடியவில்லை. வியாழக்கிழமை மாலை லாலு பாட்னா திரும்பியபோது ஆட்டம் முடிந்துபோயிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.