Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 1, 2017

பட்ஜெட் 2017: பண ஒழிப்பின் பலனை தொழிலதிபர்களுக்குத் தாரை வார்க்கப் போகும் வங்கிகள்!


பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெரும் பணக்காரர்களின் பணம் வங்கிகளுக்குப் போனதோ இல்லையோ... ஏழைகள், நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களின் மொத்த சேமிப்பும் வங்கிகளுக்குப் போய்விட்டது.

வங்கிகளில் பணத்தை போட மட்டுமே முடியும். எடுக்க முடியாது அல்லது மிக மிகக் குறைவாகவே எடுக்க முடியும் என்ற நிலை கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்தது. இப்போதுதான் ஓரளவு பணம் எடுக்க முடிகிறது.

வங்கிகள் பணத்தை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அனைத்து வங்கிகளின் ரொக்க இருப்பும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட்டியில்லாத டெபாசிட்டுகளாக மாறியுள்ளது மக்களின் பெருமளவு ரொக்கப் பணம். இன்னொரு பக்கம் ரொக்கப் பரிமாற்றம் ஓரளவு குறைந்து டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டனர்

20 சதவீத மக்கள்.தங்களிடம் குவிந்துள்ள பணத்தை என்ன செய்யப் போகின்றன வங்கிகள்? அதற்கான விடையை இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது சொல்லிவிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
'வங்கிகளிடம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பெரும் அளவு ரொக்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மூலம வங்கிகளின் கடன் அளிப்பு சக்தி பெருகியுள்ளது. பெரும் அளவில் கடன்கள் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார் அருண் ஜெட்லி.

கடன் கொடுப்பது என்றால் யாருக்குத் தருவார்கள்? சாதாரண குடிமகனுக்கோ, விவசாயிகளுக்கோ அல்ல. வங்கிகளில் இவர்கள் கடன் பெற வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். ஆனால் பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்களுக்குத்தான் இந்த வங்கிகளின் மக்களின் பணத்தை கடன்களாகத் தரவிருக்கிறார்கள். ஆனால் இப்படி தரப்படும் கடன்கள் முழுவதுமாக வசூலிக்கப்படுகிறதா? இல்லை என்பதை கடந்த ஆண்டு வெட்டவெளிச்சமானது.
கடந்த ஆண்டு மட்டும் 8000 கோடி ரூபாய் வரை வராக்கடன்களாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகையை கட்டத் தவறியவர்கள் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்கள்.

இன்னொரு பக்கம் விஜய் மல்லையா மாதிரி பெரும் பணக்காரர்கள் ரூ 7000 கோடிக்கு மேல் கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர்.
அம்பானிகள், அதானிகள் போன்ற பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ள வங்கிக் கடன் தொகை மட்டும் ரூ 1,24,000 கோடிகள்.
இதெல்லாம் வங்கிகளிடம் குறைவான ரொக்க இருப்பு இருந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள்.

இப்போதோ வரலாறு காணாத ரொக்க இருப்பை வைத்துள்ளன வங்கிகள். பணத்தை அப்படியே வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லைதான். அதை சுழற்சியில் விட்டால்தான் வங்கிகளுக்கு வருவாய் கிடைக்கும். நாட்டின் தொழில்களும் நடக்கும்.
இவையெல்லாம் உண்மைதான் என்றாலும், பெரும் தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு தரப்படும் கடன்களை மட்டும் வங்கிகள் வசூலிக்கத் தவறுகின்றன. அரசியல்வாதிகள், ஆட்சியில் உள்ளவர்களின் செல்வாக்குடன், வராக்கடன் கடன் தள்ளுபடி என்ற பலனை பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.

சில ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனைக் கட்டமுடியாத விவசாயிகளும் சாதாரண மக்களும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது மக்கள் பணத்தை பொறுப்புடன் மீட்குமா வங்கிகள்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.