Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 4, 2016

டியர் நெட்டிசன்ஸ்...உங்கள் புத்தகங்களை நீங்களே பிரசுரிக்கலாம்!


சமூகவலைதளங்கள் வாயிலாக நாள்தோறும் உருவாகிக் கொண்டே இருக்கும் புத்தம்புது எழுத்தாளர்களுக்கு இந்தச் செய்தி கங்காரு பாய்ச்சலாக உற்சாகம் அளிக்கும்!

ரூபி கவுர்... கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர். இவர் எழுதிய மில்க் அண்ட் ஹனி என்கிற கவிதைத் தொகுப்பு காதல், இழப்பு, வலி, வேதனை, பெண்ணியம் பற்றிப் பேசுகிறது. வழக்கமான கவிதைகளைப் போல அல்லாமல், ஒவ்வொன்றும் இனிப்பு தடவிய கசப்பு மாத்திரை போல மறைமுகமாக வலியை உணர்த்துவதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. ரூபியின் முதல் தொகுப்பான இது, 5 லட்சம்  பிரதிகளுக்கு மேல் விற்று நியூயார்க் டைம்ஸின் பெஸ்ட் செல்லர் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.பெண்களின் கவிதைப் புத்தகங்கள் என்கிற வரிசையில் அமேசானிலும் இதுவே விற்பனையில் நம்பர் ஒன்!

பெரிய பதிப்பகத்தின் வெளியீடு என்றால் விற்பனையில் சாதனை படைப்பது சாதாரணமாக இருக்கலாம். ரூபியோ தனது முதல் படைப்பையே செல்ஃப் பப்ளிஷிங் முறையில் தானே வெளியிட்டதுதான் இங்கே ஹைலைட்!

அதென்ன செல்ஃப் பப்ளிஷிங்?
''எல்லாருக்கும் புத்தகம் எழுத ஆசை. என்ன எழுதறது... அதை புத்தகமா கொண்டு வர யாரை, எப்படி அணுகறதுனு நிறைய கேள்விகள். ஒரு பதிப்பாளரை அணுகி புத்தகம் போட வைக்கிறது அவ்வளவு ஈஸியில்லை. புத்தகத்துக்கான பதிப்புரிமை பதிப்பாளர்கிட்ட இருக்கும். ராயல்டியும் அதிகபட்சமா 10 சதவிகிதம்தான் கிடைக்கும்.  நாம புத்தகமா போட நினைக்கிற சப்ஜெக்ட் பதிப்பாளருக்குப் பிடிக்கணும். இப்படி எந்தப் பிரச்னைகளும் இல்லாமப் பண்றதுதான் செல்ஃப் பப்ளிஷிங். நாம புத்தகமா பார்க்க நினைக்கிற விஷயங்களை நாமளே கொண்டு வரலாம். நம்ம புத்தகம் நல்லாருக்கு, நல்லா இல்லைனு யாரும் சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டாம். இதுல லாபம் 70 சதவிகிதம்...'' என்கிறார் ஜோத்ஸ்னா ராமச்சந்திரன்.  சொந்தமாக புத்தகம் வெளியிட நினைப்போருக்கென்றே ஹேப்பி செல்ஃப் பப்ளிஷிங் என்றொரு நிறுவனத்தை நடத்துபவர்.

எம்.பி.ஏ. ரீட்டெயில் மேனேஜ்மென்ட் முடித்திருக்கிற ஜோத்ஸ்னா, வேறு வேறு வேலைகளைப் பார்த்த அனுபவங்களுக்குப் பிறகு, செல்ஃப் பப்ளிஷிங் பற்றித் தெரிந்து, அதற்கான படிப்புகளை முடித்திருக்கிறார். சுயமாக புத்தகம் போட விரும்புகிற யாருக்கும் புத்தகம் வெளியிட உதவுவதே இவரது இப்போதைய முழுநேர வேலை.

தனது புத்தகத்தை தானே வெளியிட்டதில் கிடைத்த பெருமகிழ்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை எழுத்தாளர் கிராபியென் பிளாக்.
''இன்றைய நவீன இலக்கிய சூழலில் நிலவுகிற அரசியல்களைத் தாண்டி, ஒரு படைப்பாளி தன் புத்தகத்தைக் கொண்டு வருவதென்பது மிகவும் சிரமமானது. தன்னுடைய படைப்பை ஒரு பதிப்பாளரிடம் கொடுக்கும்போது, அவர்கள் அதை மாற்றி எழுதலாம்... வேறொரு எழுத்தாளரிடம் கொடுத்துத் திருத்தச் சொல்லலாம்... பொருளாதார நிலைமையைக் காரணம் காட்டி, புத்தக வெளியீட்டைத் தள்ளிப் போடலாம். இப்படியான நிலையில்தான் பேராசிரியர் சண்முகசுந்தரம் மூலம் பிரிண்ட் ஆன் டிமாண்ட் பற்றித் தெரிந்து கொண்டேன். என்னுடைய 'மாயப் பெருங்கூதன்' புத்தகத்தை அப்படித்தான் வெளியிட்டேன்...'' என்கிறவர், செல்ஃப் பப்ளிஷிங் முறை ஏன் சிறந்தது என்பதையும் விளக்குகிறார்.

''என்னுடைய புத்தகத்தை ஒரு பதிப்பகம் வெளியிடுகிறது என வைத்துக் கொள்வோம். 500 அல்லது 1000 பிரதிகள் அடித்துக் கொடுக்கிறார்கள். அதை என் வீட்டு அறையில் அடுக்கி வைத்தாலே பாதி இடம் நிரம்பிவிடும். செல்ஃப் பப்ளிஷிங்கில் பிரிண்ட் ஆன் டிமான்ட் முறையில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சடித்துக் கொள்ள முடியும். இடமும் அடையாது. புத்தம் புதிதாக புத்தகங்களை கொடுக்க முடியும்.

பல பதிப்பகங்களும் இன்று புத்தகம் எழுதுகிறவர்களுக்கு முறையான ராயல்டி கொடுப்பதில்லை. நட்சத்திர அந்தஸ்து உள்ள எழுத்தாளர்களுக்குமே இந்த நிலைமைதான். அந்த வகையில் செல்ஃப் பப்ளிஷிங் முறையில் என்னுடைய புத்தகத்தை நானே வெளியிட்ட போது முதல் பதிப்பு மொத்தமும் விற்று, முறைப்படி காசோலை வந்து சேர்ந்தது. அது எனக்கு மிகப் பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது. இப்போது என்னுடைய நாவலின் அடுத்த பதிப்பு விற்றுக் கொண்டிருக்கிறது. இணையதள விற்பனையும் எனக்கு திருப்தியாகவே இருக்கிறது. திரையுலகில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு நிறைய புதுமுகங்கள் வெளிச்சத்துக்கு வந்தார்கள். பதிப்பகத்துறையிலும் இன்று பிரபலமாகி வருகிற டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, திறமையான நிறைய அறிமுக எழுத்தாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்...'' - நம்பிக்கையுடன் நல்ல வார்த்தைகள் சொல்கிறார் கிராபியென் பிளாக்.
செல்ஃப் பப்ளிஷிங் என்கிற விஷயம் தமிழ்நாட்டில் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ச்சியடைவதற்கு முன்பிலிருந்தே இருப்பதுதான். பலரும் தங்களது கவிதைத் தொகுப்புகளை செல்ஃப் பப்ளிஷிங் முறையில்தான் வெளியிட்டிருக்கிறார்கள்.  சில பதிப்பகங்கள் இதை ஒரு திட்டமாகவே கொண்டு வந்து, 'உங்களுக்கு புத்தகம் வெளியிட வேண்டுமா? அதற்கு இவ்வளவு செலவாகும். உங்களுக்கு இத்தனை பிரதிகள் கொடுப்போம். நாங்கள் இத்தனை பிரதிகளை வைத்துக் கொள்வோம். நாங்கள் வைத்துக் கொள்கிற பிரதிகளை நூலக ஆணைக்குக் கொடுப்போம் அல்லது யாராவது கேட்டால் விற்றுக் கொள்வோம்... உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரதிகளை நீங்கள் விற்றுக் கொள்ளலாம்'  என்ற அறிவிப்புடன் செய்கிறார்கள்.

டைப் செட்டிங், பிரிண்ட்டிங் என எந்த அடிப்படைத் தொழில்நுட்பமும் தெரியாத சாதாரண நபர்கள், சில பதிப்பாளர்களை நாடுகிறார்கள். சென்னையைத் தவிர, பல ஊர்களில் பெரிய பதிப்பகங்கள் இல்லை. பதிப்பகங்களே இல்லாத சிற்றூர்களில் புத்தகம் அச்சிட விரும்புகிற ஒரு நபர், கல்யாணப் பத்திரிகையை அச்சிட்டுத் தருகிற மாதிரியான நபர்களைக்கூட அணுகி, தனது புத்தகத்தைக் கொடுத்து அச்சிட்டு வெளியில் கொண்டு வருவதாகத் தகவல்களைக் கேள்விப்படுகிறேன்.

 2 வருடங்களுக்கு முன்பு வரை இது வெளிப்படையான தொழிலாக இல்லை. தொழில்முறை பதிப்பங்களும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் புத்தகங்கள் அச்சிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன. மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு பிரிண்ட் ஆன் டிமாண்ட் மற்றும் டிஜிட்டல் பப்ளிஷிங் தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும் வரை நிலைமையே வேறு.

பெரும்பாலும் புத்தகங்களை ஆஃப்செட்டில்தான் அச்சடிப்பார்கள். 500 அலலது 1000 பிரதிகள்தான் அச்சடித்துக் கொடுப்பார்கள். 200 பிரதிகள் போதும் என்றாலும் 500 பிரதிகளுக்கான செலவை ஏற்றுத்தானாக வேண்டும்.  அந்த 200 புத்தகங்களையே விற்க வழி தெரியாது.
'யாருக்காவது புத்தகம் வெளியிட வேண்டுமா... நான் செய்து தருகிறேன்' என முன்வர ஆளில்லாத நிலை. இத்தனையையும் உடைத்து ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடுவதில்தான் முதல் மாற்றம் வந்தது. மின் புத்தகங்கள் பிரபலமாக ஆரம்பித்தன. செல்ஃப் பப்ளிஷிங் என்பது பலருக்கும் வாய்ப்பளிக்கிற ஒரு பெரிய தளமாக மாறியிருக்கிறது. 150 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் ஒரு பிரதியை வெறும் 75 முதல் 100 ரூபாய் செலவுக்குள் அச்சடித்துக் கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான பிரதிகளை நீங்கள் முடிவு செய்யலாம். ஆன்லைன் ஷாப்பிங்கில் விற்றும் காசு பார்க்கலாம். அவற்றை மின் புத்தகங்களாகவும் விற்கலாம்.

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் செல்ஃப் பப்ளிஷிங் முறை ரொம்பவே முன்னேறியிருக்கிறது. நம் நாட்டில் இது ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. குறிப்பாக தமிழ்புத்தகங்களை செல்ஃப் பப்ளிஷிங் முறையில் சந்தைப்படுத்த இன்னும் கொஞ்சம் முயற்சிகள் தேவை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆன்லைன் விற்பனை, பெரிய புத்தகக் கடை நெட்வொர்க், புத்தகக் கண்காட்சி என மூன்று வகையான சந்தைகள் இருக்கின்றன. நான்காவது சந்தையான கிண்டில் வெர்ஷனில் தமிழில் புத்தகங்கங்கள் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த வருட இறுதிக்குள் வரும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. புத்தகக் கடைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் சந்தைப்படுத்துதல் என்பது அத்தனை எளிதாக இல்லை.

பதிப்பாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இணையத்தில் பெரிய அளவில் பிசினஸ் நடப்பதில்லை. கடை, கண்காட்சி மற்றும் நூலக ஆணை மூலம்தான் அவர்களுக்கு வருமானமே... இந்த வருமானம் பதிப்பாளருக்குத் தொடர்ந்து கிடைக்கும். செல்ஃப் பப்ளிஷிங் முறையில் புத்தகம் வெளியிட்டு, வெற்றி பெற்றாலுமே, அதை ஏற்கனவே உள்ள பதிப்பாளர்கள் யாரையாவது அணுகி விற்றுத் தரச் சொல்லிதான் கேட்க வேண்டும்.

அதே நேரம் இன்னும் 5, 6 வருடங்களுக்குப் பிறகு இணைய சந்தையும், மின் புத்தகச் சந்தையும் 50 முதல் 60 சதவிகித புத்தக விற்பனையை ஆக்கிரமிக்கலாம்.

பெரும்பாலான எழுத்தாளர்கள் தாமே தமது புத்தகங்களை வெளியிட்டுக் கொள்வதாகச் சொல்வதில்லை. அப்படிச் செய்கிற ஒருசிலரும் விநியோகஸ்தர்களுடன் விற்பனை உரிமை என ஒரு ஒப்பந்தம் போட்டுத்தான் செய்கிறார்கள். இதை தனிநபரால் செய்ய முடியாது. எதிர்காலத்தில் இந்த நிலை மாறலாம்.

வருங்காலத்தில் புத்தகக் கடைகள் என்னவாகும்? யூகிக்க முடியவில்லை. ஆனாலும், அடுத்த 5 வருடங்களில் அச்சுப் பதிப்புத் துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப் போவது மட்டும் நிச்சயம்!''

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.