Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

'விவசாயிகளைவிட, குடும்பப் பெண்களுக்கே அதிக பாதிப்பு!' -பதற வைக்கும் பிரிட்டன் ஆய்வு


இந்தியாவில் விவசாயிகள் தற்கொலையைவிட, தனியாக இருக்கும் குடும்பப் பெண்களே அதிகளவில் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள் என அதிர வைக்கிறது பிரிட்டன் ஆய்வு முடிவுகள். ' கூடவே, குடும்ப வன்முறைகளைத் திட்டமிட்டு மறைக்கிறது காவல்துறை' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்தியாவில், பெண்கள் மட்டும் தனியாக குடும்பத் தலைவிகளாக இருப்பதில் தமிழகம் பிரதான இடத்தில் இருக்கிறது. அதாவது, 8 லட்சத்து 11 ஆயிரம் பேர்(சுமார் 4.39 சதவீதம்) குடும்பத் தலைவியாக இருக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, பிரிட்டிஷ் மருத்துவ இதழான லேன்செட், வயர்டு (சங்கிலிப் பிணைப்பு) என்ற தலைப்பில், கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்தியாவில் பிரசவ காலத்தில் பெண்கள் இறப்பதைவிடவும், தற்கொலைகளால் இறப்பதே அதிகம்' என்கின்றனர். குறிப்பாக, 15 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகப்படியாக தற்கொலை செய்து கொள்கின்றனர் என விவரிக்கிறது அந்தக் கட்டுரை. குடும்பத்தில் ஆண்களால் நிகழ்த்தப்படும் வன்முறைகளால்தான் தற்கொலை விகிதம் அதிகமாகி வருகிறது என குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர்.புகழேந்தி, " இந்தியாவைப் பொறுத்தவரை தற்கொலைகள், 15 வயது முதல் 29 வயது வரையிலான மக்களிடம்தான் அதிகம் நடக்கின்றன. இதில், ஆண்கள் 40 சதவீதம், பெண்கள் 56 சதவீதம் என லேன்செட் பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும், படித்த இளவயதினர் தற்கொலை செய்து கொள்வது பொருளாதாரக் காரணங்களுக்காக அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. திருமணமான பெண்கள் தற்கொலையில் ஈடுபட்டால், வரதட்சனைக் கொடுமை என்ற ஒரு வார்த்தையில் வழக்கு முடிக்கப்பட்டுவிடுகிறது. இதில் முழுமையான உண்மை இல்லை. மனச்சோர்வு ஒரு காரணமாக இருந்தாலும், குடும்ப வன்முறை நடப்பது தொடர்ந்து மறைக்கப்படுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை 2006-ன்படி 31 சதவீத திருமணமான பெண்கள், குடும்ப வன்முறையால் உடல்ரீதியான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். 10 சதவீதம் பேர் மோசமான முறையில் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

இவற்றில் பெரும்பாலும் தீக்காயம், எலும்பு முறிவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகின்றனர். திருமணமான 14 சதவீதம் பெண்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். காவல்துறை வசம் புகார்கள் செல்லும்போது, குடும்ப வன்முறை என்பதை திட்டமிட்டு மறைத்துவிடுகின்றனர். குடும்பங்களால் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களுக்கான மறுவாழ்வு மையங்கள் முறையாகச் செயல்படுவது இல்லை. அரசின் மனநல ஆலோசனை மையங்களும், கணவனுடன் அனுசரித்து வாழுமாறு நிர்பந்திக்கின்றன. வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு கைத்தொழிலைக் கற்றுக் கொடுத்து, நிதி உதவி மூலம் அந்தப் பெண்களை முன்னேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என்பதுதான் தேசிய குடும்பநல ஆய்வறிக்கை சொல்லும் தகவல் ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரப்படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 16.4 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலக அளவில் அதிக தற்கொலை நிகழும் நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது என  சொல்கிறது. இதைவிடக் கொடுமை, 2014-ம் ஆண்டில் மட்டும் நமது நாட்டில் திருமணமான 20 ஆயிரம் பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். அதே வருடத்தில் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளைவிடவும், 250 சதவீதம் அளவுக்கு திருமணமான பெண்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றப் புலனாய்வு ஆவணங்களும், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதில், ஆண்களைவிட பெண்களே அதிகம் எனப் பதிவு செய்கிறது. பீட்டர் மேயர் எனும் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், இந்தியாவில் திருமணமான பெண்கள் மட்டும் ஏன்  அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர்? என ஆய்வு செய்தார்.

ஏனெனில், மேற்கத்திய சமூகங்களில் திருமணமான பெண்கள் தற்கொலை செய்து கொள்வது மிகக் குறைவு. அவரது ஆராய்ச்சியில், ' மேற்கத்திய நாடுகளில் குடும்பப் பெண்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு, இந்தியாவில் வழங்கப்படுவதில்லை' என குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவில் குடும்ப வன்முறை சட்டம் இருந்தாலும், அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. இந்தியாவில் பெண் தற்கொலைகளில் 71 சதவீதம் பேர், திருமணமானவர்கள் என்ற அதிர்ச்சிகர உண்மையை அரசு புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் உரிய சட்டங்கள் இருந்தாலும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் அவை செயல்படுத்தப்படுவதில்லை" என வேதனைப்பட்டார் மருத்துவர்.புகழேந்தி.

குடும்ப வன்முறைகளால் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படும் பெண்களுக்கு சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கினால் மட்டுமே, தற்கொலை விகிதங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.