Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் ஆதி தமிழர் முறை திருமணம்.... நாசருக்கு கிடைத்த பாராட்டு!


கால மாற்றத்தில் அழிந்து கொண்டிருக்கும் தமிழரின் பாரம்பர்ய கலைகளுக்கு உயிர்க்கொடுக்கும் முயற்சியில் முதற்கட்டமாக வெற்றியடைந்துள்ளார் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரான நடிகர் நாசர்.

சென்னையில் தனியார்  நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் திருச்சியைச் சேர்ந்த இளைஞரான லோகேந்திரன்  என்பவருக்கும், திருச்சி உறையூரைச் சேர்ந்த ஜெயலெட்சுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்  திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள பிரகாஷ்  திருமண மண்டபத்தில்  திருமணம் நடந்தது. வாத்தியங்கள் முழங்க, உறவுகள் புடை சூழ  தமிழகத்திலேயே முதல்முறையாக தெருக்கூத்து கலைஞர்களை வைத்து இந்த திருமணம்  நடத்தப்பட்டது.

இதற்காக திருமணத்துக்கு முதல்நாள் காஞ்சிபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட கலைஞர்களுக்கு முறையாக பயிற்சி கொடுத்த நாசர், " இந்த நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்துவிட்டால் கண்டிப்பாக பல கலைஞர்களுக்கு வாழ்வு கிடைக்கும்" என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட பழம்பெரும் கதைகளில் திருமணத்தைப்பற்றி என்னென்ன சொல்லியிருக்கிறார்கள், அவற்றை மேடையில் நடித்து  மணமக்களை வாழ்த்துவது என்றெல்லாம் திட்டமிட்டார்கள். கூடவே திருமணத்திற்கு வருபவர்களுக்கு முடக்கத்தான் தோசை, கேழ்வரகு கிச்சடி, நவதானிய சூப், கருப்பட்டி பனியாரம், கருவேப்பிலை சாதம் என உணவிலும் விதவிதமாக தமிழர் உணவைக்கொடுக்க, விருந்து களைகட்டியது.


வித்தியாசமான முயற்சி, மணமக்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டாலும், மணமக்களை வாழ்த்த வருகை தரும் உறவுகாரர்கள்  இதை எப்படி பார்ப்பார்கள் என்கிற படபடப்பு திருமணம் முடியும் வரை நாசர் மற்றும் மணமகன் லோகேந்திரன்  உள்ளிட்டோரின் முகத்தில் இருந்தது.

மேடையில் மணமக்களை வாழ்த்திய பலரும், " ஆதி தமிழர் திருமண முறை, கலையும் சடங்கும் கலந்த நிகழ்வாக இருந்தது. ஆனால் நாளடைவில் கலைகள் கைவிடப்பட்டு சடங்குகள் மட்டும் கொண்ட நிகழ்வாக மாறிப்போனது. இதனாலும் கலைகள் அழிந்து போகும் நிலை வந்தது. இப்போது  தமிழகத்தில் கலைகளை மீண்டும் திருமண முறையில் கொண்டுவரும் நிகழ்வாக இந்த திருமணம் அமைந்துள்ளது"  என வாழ்த்தினார்கள்.


நாமும் லோகேந்திரன்-ஜெயலெட்சுமி தம்பதியரை வாழ்த்திவிட்டு, பேசினோம்.



" எங்கள் திருமணம் சாதி மறுப்பு திருமணம் என்பதால் முதலில் எங்களை ஏற்றுக்கொள்ளவே நாங்கள் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. அடுத்து திருமண முறையில் எனக்கு பிடித்த ஒன்றை எல்லோருக்கும் முன் செய்வது கொஞ்சம் சவாலாக இருந்தது.


திருமணத்தில் தமிழர் முறை இருக்கவேண்டும், என்பதில் உறுதியாக இருந்தேன். தலைவர்கள் தாலி எடுத்துக்கொடுக்கும் திருமண முறையில் ஏனோ எனக்கு உடன்பாடில்லாமல் போனது. அடுத்து  எப்படி திருமணம் செய்யலாம், என நண்பர்கள், நெருக்கமானவர்களிடம் பேசிவந்தேன். அப்போது நாசர் சார்தான் திருமணம் கலைச் சார்ந்து நடந்தால் நல்லாயிருக்கும் என்றார்.


மிக நீண்ட முயற்சிக்கு பிறகு காஞ்சிபுரத்தில் இருந்து வாத்தியார் ஏழுமலை தலைமையில் கலைஞர்களை ஏற்பாடு செய்தோம். இந்த திருமண முறையை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற பயம் தாலிக்கட்டும் வரை  எங்களுக்குள் இருந்தது. எல்லாத்தையும் நாசர் சார் பார்த்துக்கொள்வார், என்கிற நம்பிக்கை இருந்தது. எல்லாம் நல்லபடியாக இருந்தது. மேடையில் என்னை வாழ்த்திய பலர், அந்த நாடக கலைஞர்களின் எண் கொடுங்கள் என வாங்கிக்கொண்டு போனார்கள். எங்கள் பிள்ளைகளுக்கும் இப்படித்தான் திருமணம் நடத்துவோம், என்றும் சொன்னார்கள். இப்படித்தான் பல விசயங்கள் சமூகத்தில் பரவலாகியுள்ளது. அந்த முயற்சி எடுத்தோம்" என்றார் லோகேந்திரன் புன்சிரிப்போடு


இந்த திருமண முறை குறித்து நாடக கலைஞர் துரை.ஏழுமலை நம்மிடம், ''சமீப காலமாக நாகரிக வளர்ச்சியில் எங்களைப்போன்ற கலைஞர்களை வாழ வைக்கும் தெருக்கூத்துக் கலை அழியும் தருவாயில் உள்ளது. கோயில் விழாக்களில் கூட தெருக்கூத்து நடத்தும் மன நிலையும் அதை ரசிக்கும் மக்களின் மனநிலையும் மாறிப்போனதால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையில்தான், அய்யா நாசர் மூலம், பண்டைய தமிழர் முறைப்படி, மீண்டும் கலையுடன் திருமணம் நடத்தும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண முறை தமிழகம் முழுக்க பரவலானால் எங்களைப்போன்ற கலைஞர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்" என்றார்.



கடைசியாக நடிகர் நாசர், " இதை  முதன்முதலில் செய்தோம் என்று சொல்லவில்லை. மீண்டும் முயற்சி செய்துள்ளோம். இதற்காக மிக சிரமப்பட்டோம்.  மணமக்கள் உறுதியாக இருந்தார்கள். எல்லாம் நல்லபடியாக முடிந்தது. சமீபகாலமாக நம்ம வீட்டு திருமணங்களில் மிருதங்கம், தவில் உள்ளிட்டவை குறைந்து கேரள செண்டைமேளம் அதிகமாக தென்படுவதை காணமுடிகிறது. அவையெல்லாம் ஏதோ விஷயங்களில் உந்தப்பட்டு இந்த திருமணங்களில் கலந்தவை. அதை மாற்றி புதிய வடிவில் பாரம்பர்ய கலைகளுக்கு உயிர்கொடுப்பதற்கான முயற்சியாக இதைப் பார்க்கிறேன்.  இந்த மண்ணில் மாற்றம் ஏற்படும், என நம்புகிறோம்" என்றார் நம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.