Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற ரூ.50 கோடி சிலைகள் பறிமுதல்; 3 பேர் கைது; தொழில் அதிபருக்கு வலைவீச்சு


சென்னை ஆழ்வார்பேட்டை, முர்ரேஸ்கேட் சாலையில் உள்ள பங்களா வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஜனார்த்தனம் மற்றும் 15 போலீசார் அடங்கிய சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு தனிப்படையினர் நேற்று காலை 8 மணி அளவில் குறிப்பிட்ட பங்களா வீட்டில் அதிரடியாக நுழைந்தனர்.

அந்த பங்களா வீடு, சிலைகள் செய்யும் சிற்பக்கூடம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான புத்தம் புது சிலைகள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

பழங்கால சிலைகள் கண்டுபிடிப்பு

வீட்டுக்குள் நுழைந்து போலீசார் சோதனை போட்டனர். வீட்டில் உள்ள அறைகளில் ஏராளமான சாக்கு மூட்டைகள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்த சாக்கு மூட்டைக்குள் பல நூறு ஆண்டுகள் பழமையான ஏராளமான கற்சிலைகள் இருந்தன. முருகன், விநாயகர், சிவன், அம்மன் போன்ற சாமிகளின் சிலைகள் மற்றும் யானை போன்ற விலங்குகளின் சிலைகள் ஏராளமாக இருந்தன. கற்களால் ஆன மொத்தம் 55 சிலைகளை போலீசார் கைப்பற்றினார்கள். அத்தனை சிலைகளும், கோவில்களில் திருடப்பட்டு, கடத்தி பதுக்கி வைக்கப்பட்டவை ஆகும்.

தீனதயாளன்

சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பங்களா வீடு, தொழில் அதிபர் தீனதயாளன் (வயது 78) என்பவருக்கு சொந்தமானது. சிலைகளை அவர்தான் பதுக்கி வைத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் சோதனைபோட வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட தீனதயாளன் பெங்களூருவில் வசிக்கும் தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. போலீசார் சோதனை போட்டபோது, தீனதயாளன் வீட்டில் இல்லை.

தீனதயாளன் மீது ஏற்கனவே சிலைகள் திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் சோதனைபோட்ட போலீசார், கைப்பற்றிய சிலைகள் அனைத்தையும் மூட்டைகட்டி அள்ளிச்சென்றனர்.

முன்னதாக தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் வந்து சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

3 பேர் கைது

தீனதயாளன் வீட்டில் இருந்த ஊழியர்கள் குமார் (58), மான்சிங் (58), ராஜாமணி (60) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிலைகள் கோர்ட்டு பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டன. கைதான 3 பேரும், சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 14-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில், அவர்கள்3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரூ.50 கோடி வரை

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை விலை மதிப்பிட முடியாது. வெளிநாடுகளுக்கு இந்த சிலைகளை கடத்திச்செல்ல தீனதயாளன் திட்டமிட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இந்த சிலைகள் ரூ.50 கோடி வரை விலைபோகும் என்று கருதப்படுகிறது. கற்சிலைகளாக இருந்தாலும், அத்தனையும் கலைநயத்தோடு உருவாக்கப்பட்டவை ஆகும். தீனதயாளனை பிடித்து விசாரணை நடத்தினால்தான், இந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரியவரும்.

சுபாஷ்கபூரின் கூட்டாளி

தீனதயாளன் கடந்த 1965-ம் ஆண்டிலிருந்து சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திவருவதாக தெரியவந்துள்ளது. ஒருமுறை மட்டும் போலீசார் அவர் மீது வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கில்கூட அவர் முன்ஜாமீன் பெற்றுவிட்டார். சிறைக்கு போகவில்லை. பல போலீஸ் அதிகாரிகள் அவருடைய கடத்தல் தொழிலுக்கு துணைபோய் இருக்கிறார்கள்.

பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர், தீனதயாளனுக்கு நெருக்கமானவர். தீனதயாளன் கடத்திய சிலைகள் சுபாஷ்கபூர் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவற்றில் 2 சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில், தனது மனைவி பெயரில் கலைப்பொருட்கள் விற்பனை கூடம் ஒன்றை தீனதயாளன் நடத்திவந்தார். தற்போது அதை ஆந்திர மாநிலத்துக்கு மாற்றி விட்டார். சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பங்களா வீட்டின் மேல் தளத்தில்தான் தீனதயாளன் வசித்து வந்தார். அமெரிக்காவில் வசிக்கும் அவரது மகனும், சிலை கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கடத்தல் சிலைகளை மும்பை கொண்டு சென்று அங்கிருந்து, கடல் மார்க்கமாக கப்பலில் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது. தீனதயாளனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.