Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

போலீஸ் அவசர உதவி எண் 100 ஒரு நீதிபதிக்கே உதவாத அவலம்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்


டெல்லியில் நீதிபதி ஒருவர் போலீஸ் அவசர உதவி எண் 100-ஐ அழைத்த போது ஒரு பதிலும் கிடைக்காதது குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு விளக்கம் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கி அவர் சமீபத்தில் போக்குவரத்து நெரிசல் ஒன்றில் சிக்கித் தவித்த போது போலீஸ் அவசர உதவி எண் 100-ஐ அழைத்துள்ளார், ஆனால் அங்கிருந்து எந்தவித பதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தை விவரித்து நீதிபதி விபின் சாங்கி டெல்லி போலீஸ் கமிஷனருக்கும் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை கோர்ட் தாமாகவே முன் வந்து பொது நலவழக்காகப் பாவித்து விசாரணை மேற்கொண்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜி.ரோகிணி, ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீதிபதியின் அழைப்பிற்கே இந்த கதி என்றால் ஒரு சாமானிய மனிதன் அவசரமாக 100-ஐ அழைக்கும் போது அவருக்கு என்ன பயன் ஏற்படும்?

இது ஒரு சீரியசான விவகாரம். அவசர உதவி எண் 100 என்பது அவசரகாலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரு அவசியமான தொலைபேசி எண். இதற்கு பதில் இல்லை என்றால் நாங்கள் வேறு எதைத்தான் எதிர்பார்ப்பது?

நீதிபதி விபின் சாங்கியின் 100 தொலைபேசி எண் அழைப்புக்கு பதில் அளிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டறியுங்கள். இது மிகவும் சீரியசான விஷயம் இதனை மத்திய அரசும் போலீஸும் கூர்ந்து நோக்க வேண்டும். இந்தச் சேவையை திறமையுடன் செயல்படுத்த வேண்டும்” என்று கூறி ஜூலை 18-ம் தேதிக்குள் டெல்லி போலீஸும் மத்திய அரசும் இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிபதி விபின் சாங்கி தனது கடிதத்தில், “வசந்த் கஞ்ச் பகுதியில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நான் 40 நிமிடங்களாக அங்கிருந்து நகர முடியவில்லை. அங்கு டிராபிக் போலீஸ் ஒருவரும் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த இல்லை. இதனையடுத்து 10.12 மணிக்கு நான் 100-ஐ அழைத்து போக்குவரத்து நெரிசல் பற்றி தகவல் அளிக்க முயற்சி செய்தேன். ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர ஒரு பதிலும் இல்லை” என்று கூறியிருந்தார்.

100-ஐ தொடர்ந்து டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக் குமார் வர்மாவையும் அவர் தொலைபேசியில் அழைத்துள்ளார், ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை. கடிதத்தில் இதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மத்திய அரசு, டெல்லி போலீஸ் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.