Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2016

கோடை காலப் பராமரிப்பு - குளிர்ச்சியைத் தரும் குளியல் முறைகள்


வெப்பம் தகிக்கும் போது, ஆறோ குளமோ இருந்தால் கொஞ்ச நேரம் குளிக்கலாம் எனத் தோன்றும்.

 இந்த நீர் நிலைகள் தரும் புத்துணர்வை வீட்டிலேயே மேற்கொள்ளும் குளியல்முறைகளும் தரும். தகிக்கும் கோடை வெப்பத்தால், நா வறண்டு போவது போல், உடலில் சருமமும் வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். தினமும் இரண்டு முறை குளிப்பது ஒன்றே, வறட்சியைப் போக்கும் வழி. கோடையை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான சிலவகைக் குளியல் முறைகளை சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா. ஆரோக்கியமான அனைவருக்கும் ஏற்ற குளியல் முறைகள் இவை...

குளிப்பதை ஒரு தியானம் போல செய்ய வேண்டும். குளியல் அறைக்குள் நுழைந்ததும், தண்ணீரை எடுத்து தலையில் விட்டுக் குளிக்கக்கூடாது. முதலில் கால் பகுதியில் தொடங்கவேண்டும். நீரை ஊற்றிக் குளிக்கும்போது, அந்த உணர்வு மூளைவரைப் பாயும். இதனால், கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாகத்துக்கும் தண்ணீரை ஏற்க உடல் தயார் ஆகும். இப்படிக் குளிப்பதால், உடலில் இருக்கும், அதிகப்படியான வெப்பம் சீராக வெளியேற்றப்பட்டு, உடல் குளிர்ச்சிபெறும். சளி, மூக்கடைப்பு வராது. ஐஸ்கட்டி போன்ற குளிர்ந்த நீரில் குளிப்பதோ, அதிக சூடான நீரில் குளிப்பதோ கூடாது. வெதுவெதுப்பான நீரே குளியலுக்கு ஏற்றது. ப்யூமிக் ஸ்டோன், நார் பயன்படுத்திக் குளித்தால், சரும அழுக்கை எளிதில் அகற்றலாம்.
உடலின் வெளிப் பகுதியை இப்படிக் குளிர்விக்கிறோம். அதேபோல், உடலின் உள்உறுப்புகளின் அதிக வெப்பத்தை வெளியேற்ற, எண்ணெய் குளியல், வெந்தயக் குளியல், மூலிகைக் குளியல், மண் குளியல் உதவியாக இருக்கும்.

வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவது நல்லது.
சுத்தப்படுத்தும் எண்ணெய் குளியல் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு, உடல் முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைத் தடவி, நன்றாக ஊறவைக்க வேண்டும். பிறகு, சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வீட்டிலேயே சீயக்காய் தயாரித்து, தேய்த்துக் குளிப்பதன் மூலம், சரும நோய்கள், முடி வளர்ச்சி, பேன் பொடுகு நீங்கும். நரை முடியைத் தடுக்கும்.

சோர்வைப் போக்கும் அருகம்புல் குளியல் நாட்டு மருந்துக் கடைகளில் அருகம் புல் தைலம் கிடைக்கும். வீட்டிலேயே தயாரிக்க, அருகம்புல் சாறு 100 கிராம், தேங்காய் எண்ணெய் 200 கிராம், அதிமதுரம் 10 கிராம் சேர்த்து, நன்றாக நீர் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்தத் தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இதனால், பூஞ்சைத் தொற்றுப் பிரச்னை சரியாகும். சருமம் பளபளப்பையும் மிருதுத் தன்மையையும் பெறும்.

செல்களைப் புதுப்பிக்கும் சூரணக் குளியல்
கார்போக அரிசி, ஆவாரம் பூ, கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கசகசா, பூலான் கிழங்கு, சந்தனத் தூள், ரோஜா மொக்கு, இவற்றைத் தலா 20 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம் எடுத்து, வெயிலில் நன்றாகக் காயவைத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த பவுடரை தினமும் தண்ணீரில் குழைத்துப் பூசி, குளித்துவர இறந்த செல்கள் உதிர்ந்து, புதிய செல்கள் உருவாகும். பூஞ்சைத் தொற்று உள்ளிட்ட, சரும நோய்கள் அண்டாது. குளிர்ச்சியாக இருக்கும்.
வியர்வை நாற்றத்தைப் போக்கும் நலங்கு மாவு வெட்டிவேர், விளாமிச்சை வேர், கிச்சலிக் கிழங்கு, எலுமிச்சைத் தோல், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், கார்போக அரிசி, பயத்தமாவு இவற்றை அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும், சோப்புக்குப் பதிலாக, இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கலாம். வியர்வை நாற்றத்தைப் போக்கும். மாசு, மரு இல்லாமல் சருமம் பொலிவு அடையும்.

பருமன் உள்ளவர்களுக்கான பளிச் குளியல்
பச்சைப் பயறு, கொள்ளு, கறுப்புக் கொத்துக் கடலையைச் சம அளவு எடுத்து, அதனுடன் வெந்தயம், துளசி தலா 100 கிராம் சேர்த்து, ஆரஞ்சுத் தோல், எலுமிச்சைத் தோல், கருஞ்சீரகம் சிறிது அளவு சேர்த்து, எல்லாவற்றையும் அரைத்து வைத்துக்கொண்டு, குளியல் போடலாம். சருமத்துக்கு நல்ல டோனிங் கிடைக்கும். தேவையற்ற தொங்கும் சதைகள் இறுகும். தொடைப் பகுதியில் அதிக வியர்வை வழிவது நிற்பதுடன், கொழுப்பும் கரையும்.
தேங்காய், நுங்கு, இளநீர் குளியல் இளநீர், சருமத்துக்கான போர்வையாக இருக்கிறது. பளிங்கு போன்ற பளபளப்பைத் தந்து, ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், இளமையோடு இருக்கவைக்கும். தேங்காய் வழுகலுடன், நுங்கு சேர்த்து, இளநீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். நன்றாகக் குளித்தவுடன், அரைத்த விழுதை, உடல் முழுவதும் பூசி, 10 நிமிடங்களுக்குப் பிறகு அலசலாம். சருமத்தினுள் குளிர்ச்சி ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தரும். வெயிலில் போனாலும், சூரியக் கதிர்கள் பாதிக்காத அளவுக்குச் சருமத்தில் குளிர்ச்சித் தேங்கி நிற்கும்.

சுத்தமாக்கும் உப்புக் குளியல்
உடல் சோர்வு, வலி, அதிக நீரிழப்பு இருந்தால், உப்புக் குளியல் உடனடி தீர்வைத் தரும். கடைகளில் கிடைக்கும் எப்சம் உப்பு, சாதாரண உப்பு, பேக்கிங் சோடா மூன்றையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து அந்த நீரில் குளிக்கலாம். சருமத்தில் உள்ள அழுக்கு, பூஞ்சைத் தொற்று நீங்கி, உடல் சுத்தமாகும். கடைசியாக, எலுமிச்சைச் சாற்றைத் தண்ணீரில் கலந்து, தலையில் விட்டுக்கொள்ளலாம்.

புத்துணர்ச்சித் தரும் மூலிகை குளியல்
கொதிக்கும் நீரில், புதினா, துளசி, சிறுநீற்றுப் பச்சிலை, வெட்டிவேர், ரோஜா மொட்டு, சம்பங்கி, மல்லிகை, ஆவாரம் பூ இவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடிவிடவும். இந்த நீரில் குளித்தால், உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைத்து, உடல் நறுமணம் வீசும். பூக்களைப் போட்டு குளிப்பது போல், திராட்சை, மாதுளம் பழம், சாத்துக்குடி போன்ற பழங்களின் சாற்றைப் பயன்படுத்திக் குளிப்பதும், சருமத்துக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

நெல்லிக் குளியல்
ஆறு நெல்லிக்காயை, விதை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன், இரண்டு டீஸ்பூன் வெந்தயம், கசகசா சேர்த்து, தயிரில் ஊறவைத்து, அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதைக் குளிக்கும்போது பயன்படுத்தலாம். ஏ.சி அறைக்குள் இருப்பது போன்று உடலை ஜில்லென்றுவைத்திருக்கும்.
ரத்த ஓட்டத்துக்குக் களிமண் குளியல் நாட்டு மருந்துக் கடைகளில் குளியலுக்கான களி மண் கிடைக்கும். அதை வாங்கி, தண்ணீர் சேர்த்து, உடலில் பூசி, குறைந்தது அரை மணி நேரம் ஊற வேண்டும். பிறகு குளிக்கலாம். இதனால், ரத்த ஓட்டம் சீராகும். செல்கள் புதுப்பிக்கப்படும்.
குளிர்ச்சியான பானகங்கள் கோடை வெப்பத்தினால் அடிக்கடி நா வறட்சி ஏற்படும். அடிக்கடித் தண்ணீர் குடிப்பதுடன், சில சத்தான பானகத்தைச் செய்து அருந்துவது, சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலுக்குத் தெம்பையும் கூட்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.