Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’: பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திருச்சியில் மாதிரி கழிப்பறை பார்வைக்கு வைப்பு


ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’ பொருத்தப்பட்டுள்ளது குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் மாதிரி கழிப்பறை பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு
பசுமை நகரம் திட்டத்தின் கீழ் ரெயில்களில் சாதாரண கழிப்பறை பயன்படுத்துவதற்கு பதிலாக பயோ கழிப்பறையை பயன்படுத்த இந்தியன் ரெயில்வே முடிவு செய்தது. ரெயில்களில் கழிப்பறையில் இருந்து மனித கழிவுகள் தண்டவாளங்களில் விழுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ‘பயோ கழிப்பறை’ பெட்டிகள் பொருத்த திட்டமிடப்பட்டன.

‘பயோ கழிப்பறை’யில் வெளியேற்றப்படும் மனித கழிவுகள் கழிப்பறையின் அடியில் உள்ள பயோ செரிமான தொட்டிக்கு செல்கிறது. அங்கு ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள பாக்டீரியாக்களால் மனித கழிவுகள் வாயு மற்றும் தண்ணீராக மாற்றப்பட்டு, முடிவில் தூய நீராக தண்டவாளங்களுக்கு இடையில் விழும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை. கடந்த 2013–ம் ஆண்டு முதல் ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’ பொருத்தும் பணி தொடங்கியது. சாதாரண கழிப்பறைகளை அகற்றிவிட்டு பெட்டிகளில் ‘பயோகழிப்பறைகள்’ பொருத்தப்பட்டன. மேலும் புதிதாக தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகளும் ‘பயோ கழிப்பறை’ பொருத்தும் அமைப்பில் உருவாக்கப்பட்டன.

மாதிரி கழிப்பறை
நாடு முழுவதும் ஒவ்வொரு மண்டலங்களிலும் அந்தந்த கோட்டங்களில் பராமரிக்கப்படும் ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’ பொருத்தப்பட்டு வருகின்றன. திருச்சி கோட்டத்தை பொறுத்தவரை தற்போது வரை 100 ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’ பொருத்தப்பட்டுள்ளது. இதில் திருச்சி–ஹவுரா எக்ஸ்பிரஸ், மன்னார்குடி–ஜோத்பூர் எக்ஸ்பிரஸ், திருச்சி–ராமேசுவரம் பயணிகள் ரெயில், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட ரெயில்களில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில ரெயில்களில் ‘பயோ கழிப்பறை’ பொருத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் பயணிகளிடம் ‘பயோ கழிப்பறை’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி கழிப்பறை ஒன்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பறையின் மாதிரியும், கழிப்பறையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பலகையும் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் இதனை பார்த்து படித்து விட்டு, மாதிரி கழிப்பறையை பார்த்து செல்கின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி கழிப்பறை வைக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.