அம்பத்தூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 7–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
7–ம் வகுப்பு மாணவர்கள்
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் காசிநாதன். வக்கீல். இவருடைய மனைவி கவுரி. இவர்களது மகன்கள் அஜய்குமார் (வயது 13), குரு (6). இவர்களில் அஜய்குமார், கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகன்கள் காந்திராஜன் (15), திருமுருகன் (13). இவர்களில் திருமுருகன், மற்றொரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
அஜய்குமார், திருமுருகன் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தாலும் இருவரின் வீடுகளும் அருகருகே இருப்பதால் நண்பர்களாக பழகி வந்தனர்.
குளத்தில் மூழ்கி பலி
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் இருவரும் காலையில் நடைபயிற்சி சென்று விட்டு வருவதாக தங்கள் வீட்டில் கூறி விட்டு ஏரிக்கரை ஓரமாக உள்ள சியாத்தம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள குளத்தின் கரையை சுற்றியவாறு இருவரும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர் குளத்தில் இறங்கி கால்களை கழுவி கொண்டிருந்த அஜய்குமார், திருமுருகன் இருவரும் எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.
பிணமாக மிதந்தான்
இதற்கிடையில் காலையில் நடைபயிற்சி செல்வதாக கூறிச்சென்ற தங்கள் மகன்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர், பல்வேறு இடங்களில் சென்று தேடினர். ஆனால் எங்கேயும் அவர்களை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் சியாத்தம்மன் கோவிலுக்கு சென்ற ஒருவர் குளத்தின் அருகில் சென்று பார்த்த போது குளத்தில் திருமுருகன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் அந்த பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பெற்றோர் கதறல்
பொதுமக்களே குளத்தில் மிதந்த திருமுருகன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிநாதன் மற்றும் சுரேஷ் குடும்பத்தினரும் அங்கு ஓடி வந்தனர். சுரேஷின் மனைவி முத்துலட்சுமி தனது மகன் திருமுருகன் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் இருந்து அஜய்குமாரையும் பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் இருவரும் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், பலியான மாணவர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதேபோல் வில்லிவாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் இந்த கோவில் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். எனவே அந்த குளத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து உயிர் பலி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.