பா.ஜனதா கட்சி 180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குகிறது.
முதல் தேர்தல்
பா.ஜனதா கட்சி முன்பு ஜன சங்கம் என்ற பெயரில் இருந்தது. பல கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவாக உருவானது. அப்போது முதன் முதலில் 1980-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை பா.ஜனதா சந்தித்தது. அந்த தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட பா.ஜனதா, 10 இடங்களிலும் டெபாசிட் இழந்து மொத்தம் 13 ஆயிரத்து 177 வாக்குகளை பெற்றது.
1984-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா 15 இடங்களில் போட்டியிட்டு, 14 இடங்களில் டெபாசிட் இழந்து 54 ஆயிரத்து 390 வாக்குகளை பெற்றது. டெபாசிட் பெற்ற ஒரு தொகுதி குளச்சல் ஆகும். அங்கு பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 32 ஆயிரத்து 996 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். 559 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜரத்தினத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
முதல் எம்.எல்.ஏ.
1989-ம் ஆண்டு தேர்தலில் 31 இடங்களில் போட்டியிட்டு 30 இடங்களில் டெபாசிட் இழந்து 84 ஆயிரத்து 865 வாக்குகளை பெற்றது. 1991-ம் ஆண்டு தேர்தலில் 99 இடங்களில் போட்டியிட்டு 95 இடங்களில் டெபாசிட் இழந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 229 வாக்குகளை பெற்றது.
1996-ம் ஆண்டு தேர்தலின் போது தான் பா.ஜனதா முதல் எம்.எல்.ஏ.வை பெற்றது. 143 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 137 இடங்களில் டெபாசிட் இழந்து மொத்தம் 4 லட்சத்து 90 ஆயிரத்து 953 வாக்குகளை பெற்றது.
பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேலாயுதம் 27 ஆயிரத்து 443 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்தப்படியாக அந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 22 ஆயிரத்து 903 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
4 தொகுதிகளில் வெற்றி
இதுவரை பெரிய கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட பா.ஜனதா 2001-ம் ஆண்டு தேர்தலில் முதன் முதலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 21 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் டெபாசிட் பெற்று 8 லட்சத்து 95 ஆயிரத்து 352 வாக்குகளை பெற்றது. மயிலாப்பூர், மயிலாடுதுறை, காரைக்குடி, தளி என 4 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது.
2006-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா மீண்டும் தனித்து போட்டியிட்டது. 225 தொகுதிகளில் போட்டியிட்டு 221 இடங்களில் டெபாசிட் இழந்தது. மொத்தம் 6 லட்சத்து 66 ஆயிரத்து 823 வாக்குகளை பெற்றது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 204 தொகுதிகளில் போட்டியிட்டு 198 இடங்களில் டெபாசிட் இழந்தது. 8 லட்சத்து 19 ஆயிரத்து 577 வாக்குகளை பெற்றது.
உறுப்பினர் சேர்க்கை
தற்போது பா.ஜனதா மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும், ஊழலற்ற மோடி ஆட்சி என்ற பலத்துடனும் தமிழக சட்டசபை தேர்தலில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த தேர்தலை கவனத்தில் கொண்டே பா.ஜனதா தீவிர உறுப்பினர் சேர்க்கையை நடத்தியது.
அந்த கட்சி தகவலின்படி தற்போது 55 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்போது பா.ஜனதாவில் உறுப்பினராக உள்ளனர். மேலும் புதிய வாக்காளர்கள் சுமார் 1 கோடி பேர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று அந்த கட்சி நம்புகிறது.
எனவே கூட்டணி அமையாவிட்டாலும், தனித்து போட்டியிட்டு சாதிப்போம் என்ற நிலையில் அந்த கட்சியினர் உள்ளனர். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைக்கலாம் என்றும் முடிவு செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டணி கட்சிகள்
அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 180 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுவது எனவும், மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளனர்.
தற்போது பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் கட்சிகளான இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதியையும், புதிய நீதிக்கட்சி 25, தேவநாதனின் கல்வி கழகம் 40, தேவர் அமைப்புகள் 30, அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம் 20 தொகுதிகளையும் கேட்கின்றன.
அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்ற பா.ஜனதா ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இது குறித்த மாநில குழு நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்தது. மத்திய மந்திரி ஜவடேகர் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பார்வையாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, துணை தலைவர் வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மோகன் ராஜூலு உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும், எவ்வளவு ஒதுக்கலாம். எந்த தொகுதியை ஒதுக்குவது என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். இன்னும் 2 தினங்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.
வாக்கு வங்கி
இது குறித்து அந்த கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, ‘‘கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை வைத்து பா.ஜனதாவை யாரும் எளிதாக நினைத்து விட வேண்டும். வரும் சட்டசபை தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவின் பலத்தை பறைசாற்றும். தனித்து போட்டி என்பதன் மூலம் எங்களது உண்மையான வாக்குவங்கி என்ன என்பது மற்ற கட்சிகளுக்கு இனி புரியும். எனவே இந்த முறை 180 தொகுதிகளில் நிச்சயம் போட்டியிடுவோம். ஆனால் 234 தொகுதிகளிலும் களப்பணி ஆற்றுவோம்’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.