Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

தூங்கு மூஞ்சி!-சிறுகதை


முன்னொரு காலத்தில் அரும்பூர் என்ற ஊரில் வேலம்மாள் என்பவள் இருந்தாள். அவளுக்கு, மாணிக்கம் என்ற மகன் இருந்தான். அவன் சோம்பேறியாகவும், முட்டாளாகவும் இருந்தான்.
வேலம்மாளின் கணவர் வாசு பள்ளி வாத்தியார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் அக்கரை எடுத்துக் கொள்வார். அவர்களது முன்னேற்றத்திற்காக மிகவும் பாடுபடுவார். 
அவரது மனைவியோ, "உங்கள் பிள்ளையை விட்டுவிட்டு ஊரில் உள்ள பிள்ளைகளை எல்லாம் பார்க்கிறீர்களே... இது நியாயமா?' என புலம்புவாள்.
"கவலைப்படாதே....நாம் நல்லதை செய்தால், நம் மகனை கடவுள் பொருட்பெடுத்துக் கொள்வார்... அவனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...'' என சொல்வார் வாசு.
ஒருநாள் திடீரென்று ஏற்பட்ட விஷக் காய்ச்சலால் இறந்து போனார் வாசு. இதனால் குடும்பம் வறுமையில் வாடியது. வேலம்மாள் வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தி வந்தாள். மாணிக்கம் வேலைக்கு செல்லாமல், எப்போதும் தூங்கியபடியே இருந்தான். 
அந்த ஊரில் இருந்தவர்கள் அனைவரும் அவனை, "சோம்பேறி மாணிக்கம்!' என்றே அழைத்தனர்.
"மகன் சோம்பேறியாக இருக்கிறானே...' என்று வருந்தினாள் வேலம்மாள். அவனை திருத்த என்ன செய்வது என்று சிந்தித்தாள்.
நல்ல வழி ஒன்று அவளுக்குத் தோன்றியது.
தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பினாள்.
"என்னம்மா,'' என்று சலிப்புடன் புரண்டு படுத்தான் மாணிக்கம்.
"மகனே! இவ்வளவு காலம் உழைத்து உன்னைக் காப்பாற்றினேன். எனக்கு வயதாகி விட்டது. என்னால், எந்த வேலையும் செய்ய முடியவில்லை. இன்றிரவு சாப்பிட வீட்டில் ஒன்றும் இல்லை. நீ எங்காவது சென்று, உழைத்துக் காசு கொண்டு வா. இல்லையேல், பட்டினி கிடக்க வேண்டும்,'' என்றாள்.
"சாப்பாடு இல்லை, பட்டினி கிடக்க வேண்டும்' என்பதைக் கேட்டதும், அவன் மெல்ல எழுந்தான்.
"அம்மா! நான் உழைத்துக் காசு கொண்டு வருகிறேன்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான்.
பண்ணை ஒன்றிற்குச் சென்ற அவன், அங்கே வேலை செய்தான். அவனுக்கு கூலியாக ஒரு காசு கிடைத்தது.
இதற்கு முன் அவன் காசைப் பார்த்தது இல்லை. அந்தக் காசை மேலே தூக்கி போட்டுப் பிடித்தப்படி வந்தான். வழியில் குளம் ஒன்று இருந்தது. தூக்கிப் போட்ட காசு அவன் கையில் இருந்து நழுவியது. உருண்டு ஓடிய அது, குளத்திற்குள் விழுந்தது. குளத்திற்குள் மூழ்கிக் காசைத் தேடினான் அவன். காசு கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய அவன், நடந்ததைத் தாயிடம் சொன்னான்.
"மகனே! யாராவது காசைத் தூக்கி எறிந்த படி வருவார்களா? இனி இப்படிச் செய்யாதே. செய்த வேலைக்குக் கூலி கிடைத்தால் பைக்குள் போட்டுப் பாதுகாப்பாக எடுத்து வா,'' என்றாள்.
"அப்படியே செய்கிறேன்,'' என்றான் மாணிக்கம்.
மறுநாள் அவன் உழவன் ஒருவனிடம் வேலை பார்த்தான். அவனுக்குக் கூலியாகப் பால் கிடைத்தது.
தாய் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. அந்தப் பாலைத் தன் சட்டைப்பையில் ஊற்றினான். அது அவன் பையில் இருந்து தரையில் ஒழுகியது. அப்படியே வீடு வந்து சேர்ந்தான்.
அவன் சட்டைப் பையில், பால் ஒழுகி ஈரமாக இருப்பதைப் பார்த்தாள் அவன் தாய்.
"மகனே! என்ன நடந்தது? ஏன் சட்டைப் பையில் பால் ஒழுகுகிறது?'' என்று கேட்டாள்.
"அம்மா! இன்று எனக்குக் கூலியாகப் பால் கொடுத்தனர். நீங்கள் சொன்னது போலச் சட்டைப் பைக்குள் ஊற்றிப் பாதுகாப்பாக எடுத்து வந்தேன்,'' என்றான்.
"மகனே! இப்படியா முட்டாள்த்தனமாக நடந்து கொள்வது? இனி யார் எது கொடுத்தாலும் தலையில் சுமந்து வா,'' என்றாள்.
அடுத்த நாள் பால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்தான் அவன். அவனுக்குக் கூலியாக வெண்ணெய் கிடைத்தது. அதை அப்படியே தலையில் எடுத்து வந்தான் அவன். வெண்ணெய் உருகி அவன் முகம் எங்கும் வழிந்தது. தரையிலும் ஒழுகியது.
வீடு வந்த அவன் தாயிடம் நடந்ததைச் சொன்னான்.
"எத்தனை முறை சொன்னாலும் உனக்கு அறிவே வராதா? இனி யார் எது கொடுத்தாலும் உன் இரண்டு கைகளாலும் அதைத் தூக்கி வா,'' என்றாள் அவள்.
நான்காம் நாள் அவனுக்கு ரொட்டிக் கடை ஒன்றில் வேலை கிடைத்தது. அவனுக்குக் கூலியாகப் பூனை ஒன்று கிடைத்தது.
தன் இரண்டு கைகளாலும் அதைத் தூக்கியவாறு வீடு நோக்கி நடந்தான்.
அந்தப் பூனை அவனிடம் இருந்து விடுபடப் போராடியது. அவனோ அதை விடவில்லை.
தன் கூர்மையான நகங்களால் அவன் முகத்திலும், மார்பிலும் பிராண்டியது. உடலெங்கும் காயம் ஏற்பட்டு ரத்தம் வரத் தொடங்கியது.
வலி தாங்க முடியாத அவன் அந்தப் பூனையைத் தூக்கி எறிந்தான்.
வீடு வந்த அவனைப் பார்த்தாள் தாய்.
"மகனே! என்ன நடந்தது? உடலெங்கும் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று பதற்றத்துடன் கேட்டாள்.
அவனும் நடந்ததைச் சொன்னான்.
"மகனே! இனி இப்படி நடந்து கொள்ளாதே... ஏதாவது கிடைத்தால், கயிற்றில் கட்டி இழுத்து வா,'' என்றாள்.
அடுத்த நாள் அவனுக்கு இறைச்சிக் கடை ஒன்றில் வேலை கிடைத்தது. அவனுக்குக் கூலியாக, ஆட்டுத் தொடை ஒன்று கிடைத்தது.
அந்த ஆட்டுத் தொடையை அவன் கயிற்றில் கட்டினான். அதைத் தெருவில் இழுத்து வந்தான். அவனைத் தொடர்ந்து வந்த நாய்கள் அந்தக் கறியைத் தின்றுவிட்டு சென்றன.
வெறுங்கயிற்றை இழுத்தபடி தன் மகன் வருவதைப் பார்த்தாள் தாய்.
"மகனே! என்ன நடந்தது?'' என்று கேட்டாள்.
அவனும் நடந்ததைச் சொன்னான்.
தலையில் அடித்துக் கொண்ட அவள், "இப்படியா முட்டாள்த்தனமாக நடந்து கொள்வது? இனி இப்படி ஏதாவது கிடைத்தால் உன் முதுகில் சுமந்து வர வேண்டும்,'' என்றாள்.
ஆறாம் நாள் அவனுக்கு இலாயத்தில் வேலை கிடைத்தது. கூலியாகக் கழுதை ஒன்று கிடைத்தது. தாய் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.
தன் முதுகோடு அந்தக் கழுதையின் முதுகைச் சேர்த்து வைத்தான். கைகளைப் பின்னால் நீட்டி, அதன் கழுத்தை பிடித்துக் கொண்டான். அப்படியே அதைத் தன் முதுகில் தூக்கினான்.
அதைச் சுமந்து புறப்பட்டான்.
கழுதையின் கால்கள் நான்கும் வானத்தைப் பார்த்தபடி இருந்தன. வால் தரையை நோக்கித் தொங்கியது. அதன் முகம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அவனுக்கு வால் இருப்பது போலத் தோன்றியது.
வேடிக்கையான கோலத்தில் அவன் வருவதைப் பார்த்து, எல்லாரும் சிரித்தனர். அதைப் பொருட்படுத்தாமல், அவன் சென்று கொண்டிருந்தான், அப்போது அந்நாட்டு இளவரசி அந்த வழியாக வந்தாள். அவள் ஊமையாகவும், செவிடாகவும் இருந்தாள். அவள் பிறந்த போது, ஜாதகத்தைக் கணித்த சோதிடர்கள், "இளவரசி ஊமையாகவும் செவிடாகவும் இருப்பாள். அவள் எப்போது சிரிக்கிறாளோ அப்போதே, இந்தக் குறைகள் நீங்கி விடும்,'' என்றனர்.
இளவரசியைச் சிரிக்க வைப்பவருக்கு, அவளைத் திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தான் அந்நாட்டு அரசன்.
பலரும் அவளைச் சிரிக்க வைக்க முயற்சி செய்தனர். யாரும் வெற்றி பெறவில்லை. கழுதையைச் சுமந்து வரும் மாணிக்கத்தின் வேடிக்கையான கோலத்தைப் பார்த்தாள். தன்னை மறந்து கலகலவென்று சிரித்தாள்.
கழுதையையும், அவனையும் நினைத்து அவள் சிரித்துக் கொண்டே இருந்தாள்.
செய்தி அறிந்த அரசன் அங்கே வந்தான். மகள் சிரிப்பதைப் பார்த்தான்.
"தந்தையே!'' என்று அவனிடம் ஓடினாள் இளவரசி.
மகள் பேசுவதை அறிந்து எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான் அரசன்.
தன் மகளை சிரிக்க வைத்த மாணிக்கத்திற்கும், தன் மகளுக்கும், திருமணம் செய்து வைத்தான். இவனது முட்டாள்தனங்களை ரசித்த இளவரசி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆசிரியரை வைத்து பாடம் புகட்டி படிப்படியாக அவனை மாற்றினாள். இளவரசியின் அன்பினாலும், ராஜா வாழ்க்கையும் மாணிக்கத்தை மிகச் சிறந்தவனாக மாற்றியது. இருவரும் இன்பமாக வாழ்ந்தனர். 
பெற்றோர் செய்த புண்ணியத்தால், மாணிக்கத்திற்கு சிறப்பான வாழ்வு கிடைத்தது.
பெற்றோர்களே.. நீங்கள் செய்யும் புண்ணிய காரியங்கள்தான் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதத்தை கொண்டுவரும். மாறாக, நீங்கள் செய்யும் பாவங்கள் அவர்களது வாழ்க்கைக்கு சாபமாக மாறிவிடும். எனவே, உங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறீர்ளோ இல்லையோ புண்ணியத்தை சேர்த்து வைக்க மறவாதீர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.