March 29, 2016
அமைதியானவள்; படுபயங்கரமானவளும் கூட!
ஐரோப்பாவின் தென் பகுதியில் உள்ள மிக முக்கியமான நதி, "டான்யூப்' தான். கருங்காடு என்று படித்திருப்பீர்களே பிளாக் பாராஸ்ட்டு. இது ஜெர்மனியிலுள்ளது. இக் கானகத்தில், "டானஸ்சிங்கன்' என்று ஒரு மலை. கடல் மட்டத்திலிருந்து 2ஆயிரத்து 187 அடி உயரம். இந்த மலையில் தான் டான்யூப் நதி உற்பத்தியாகிறது. ஆயிரத்து 800 மைல்கள் ஓடி, கருங்கடலில் சங்கமமாகிறது. இம்மலையி லிருந்து ஒரு தனி நதியாக இது தோன்றவில்லை. மூன்று ஓடைகளாக உற்பத்தியாகிப் பிறகு ஒன்றாக இணைந்து டான்யூப் நதியாகிறது. இம்மூன்று ஓடைகளும் முறையே பிரிகி, பிரிசாச், மூன்றாவது ஒரு குட்டி ஓடை. டான்யூப் நதி படகுப் போக்குவரத்துக்கு ஏற்றதில்லை. தென் மேற்கு ஜெர்மனியிலுள்ள "உலம்' நகர் வரும் வரை.
இந்த உலம் நகரைத் தாண்டியதும் ஏராள மான உபநதிகள் டான்யூப்போடு கலக்கின்றன. இவற்றுள் சில பெரிய நதிகள். மொத்தம் 300 உப நதிகள் டான்யூப்போடு இணைகின்றன. ஜெர்மனியின் அழகும்,சாகசங்களும் நிறைந்த பகுதி கருங்காடு. 900 சதுர மைலுக்கு இக்கருங்காட்டுப் பகுதி வியாபித்துள்ளது. இக்கானகத்தினூடே டான்யூப் நதி ஊடுருவிப் பாயும் பகுதிகள் கொள்ளை அழகுடையவை. இக்கம்பீரமான நதிக்கரையில், பல பெரிய கவர்ச்சி மிக்க நகரங்கள் உள்ளன. பாஸா, லின்ஸ் வியன்னா, புடாபெஸ்ட், பெல்கிரேட் ஆகியவை இவற்றில் சில. பிரசித்தி பெற்ற பழங்காலக் கோட்டைகள் பல டான்யூப் நதிக் கரையில் உள்ளன.
பெல்கிரேட் நகருக்கு அருகே டிஸ்ஸா, டிராவா, ஸாவா என்னும் மூன்று பெரிய நதிகள் டான்யூப் நதியோடு இணைகின்றன. செம்லின் வழியே டான்யூப் நதி ஓடும்போது, இதன் அகலம் கிட்டத்தட்ட ஒரு மைல். 40 அடி ஆழம். இந்த இடத்தில் கொஞ்ச தூரம் போனதும் காஸான் மலை இடுக்கு வழியே போகிறது டான்யூப். இங்கு, இதன் அகலம் 160 கெஜங்கள். ஆனால், ஆழம் படு பயங்கர பாதாளம். சில இடங்களில் 150 அடிகள் வரை கூட இருக்கும்.
டான்யூப் நதியின் வழியில் மிகவும் மனதில் பதியும் படியான பகுதி இரும்பு வாயில் எனப்படும் "அயர்ன் கேட்' பகுதிகள். சுமார் இரண்டு மைல் நீளம். இங்கு பதினாறு அடி உயரத்திலிருந்து நீர் வீழ்ச்சியாக விழுகிறது டான்யூப். ஸெம்லின் என்னு மிடத்திலிருந்து கவர்ச்சி மிகு காட்சிகள் ஆரம்பமாகின்றன. இப்பகுதியில் இதன் வேகம் படுபயங்கரம். ஏராளமான சுழல்களும் உண்டு. இந்த நீர் வீழ்ச்சிக்குப் பிறகு டான்யூப் மீண்டும் அகலமாகி அமைதியான சம வெளியில் ஓடுகிறது.
சங்கமமாகும் போது டான்யூப்போடு "புருட்' என்னும் நதி சேர்கிறது. பிறகு, இது மூன்றாகக் கிளை பிரிந்து போகிறது. நடுவிலுள்ள கலினா என்னும் நதியே படகுப் போக்கு வரத்துக்கு ஏற்றதாக உள்ளது.
அமைதியானவள்; படுபயங்கரமானவளும் கூட!
Reviewed by Priya Anand
on
March 29, 2016
Rating: 5
Reviewed by Priya Anand
on
March 29, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.