Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

நான் தான் பெஸ்ட்!-சிறுகதை


ஒரு பெரியமரத்தில் வசித்து வந்த பறவைகளிடையே ஒருநாள் வாக்குவாதம் எழுந்தது. அதற்கு அடிப்படை என்னவென்றால், மனிதர்கள் கொடுக்கும் முதல் மரியாதை யாருக்கு என்பதுதான்!
அந்தமரத்தில் வாழ்ந்து வந்த காகம் தேனீயைப் பார்த்து, ''என்ன தேனீயாரே, சவுக்கியமா இருக்கிறீரா?'' என்று கேட்டது.
''எனக்கும், எங்கள் இனத்துக்கும் என்ன குறைச்சல்? நாங்கள் சுறுசுறுப்பாகவும், கடுமையாகவும் உழைக் கிறோம். அதனால் தேன் சேகரிப்பு மலைபோல் குவிகின்றது. மனிதர்கள் அதைப் பயன்படுத்தி மகிழ்ச்சி யும், உடல்நலமும் பெற்று, எங்களுக்கு முதல் மரியாதை கொடுப்பார்கள் இல்லையா? ஏனெனில், சுறுசுறுப்புக்கும், கடின உழைப் புக்கும் எங்களைத் தானே அவர்கள் முன்னுதாரணம் காட்டுகின்றனர்,'' என்று பெருமையாக கூறியது தேனீ.
தேனீ கூறியதைக் கேட்ட காகத்திற்குக் கோபம் வந்துவிட்டது.
''அற்பத் தேனீக்களே! நீங்கள் ஏதோ தேன் சேகரித்து, அதனை மனிதர்களுக்குக் கொடுப்பதாகப் பீற்றிக் கொள்கிறீர்களே... உண்மை என்ன தெரியுமா? அந்த மனிதர்கள் உங்கள் எல்லாரையும் கொன்று விட்டுத் தாங்களே எல்லாத் தேனையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். எஞ்சி உயிரோடு இருக்கும் உங்களில் யாருக்காவது ஒரு சொட்டுத் தேன் கொடுக்கிறார்களா? இல்லையே! இந்த லட்சணத்தில் அந்த மனிதர்களிடமிருந்து நீங்கள் மரியாதையை எதிர்பார்க்கிறீர்களே, இப்படியும் முட்டாள் தனமாக இருக்கிறீர்களே! ஆனால், ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். மனிதர்களிடம் எங்களுக்குத் தான் முதல் மரியாதை தெரியுமா?'' என்று கூறியது காகம்.
''அப்படியா? உங்களால் மனிதர்களுக்கு எதனைக் கொடுக்க முடியும். கரைந்து கொண்டே இருப்பதுதானே உங்களது இயல்பு! அப்படியிருக்க உங்களுக்கு எப்படி முதல் மரியாதை கிடைக்கும்?'' என்று கேட்டது தேனீ.
''தேனீக்களே! உங்களுக்கு ஓடி, ஓடி உழைக்கத் தெரியும். உங்கள் கூட்டத்தின் மீது யாராவது கை வைத்தால் அவர்களைக் கொட்டத் தெரியும். உங்களால் கடிபட்ட மனிதர்கள் சும்மா இருந்துவிடுவார்களா? நெருப்பு மூட்டி, உங்களது கூட்டத்தைேய அழித்து விடுகிறார்கள் இல்லையா? முன்னோர்களுக்கு திதி செய்யும் மனிதர்கள் எங்களைத்தானே கூவி அழைத்துச் சாப்பாடு வைக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டால் தான் புண்ணியம் கிடைக்கும் என்று கருது கின்றனர்.
''எங்களின் வாழ்க்கை முறையும், தன்மையும் உங்களுக்குத் தெரியுமா? எங்களுக்குச் சிறிது உணவு கிடைத்தாலும், உடனே எங்களது சுற்றத்தாரையெல்லாம் கூவி அழைப்போம். பின்னர் அனைவரும் பங்கிட்டு உண்போம். எங்களைப் பார்த்துதான் மனிதர் கள் ஒற்றுமையாக இருக்கவும், உணவைப் பகிர்ந்து உண்ணவும் கற்றுக் கொண்டனர். இந்தத் தன்மை பிற பறவைகளிடமோ, மிருகங்களிடமோ உண்டா சொல்!'' என்று கூறியது காகம்.
''தேனீயும், காகமும் இவ்வாறு தங்க ளுக்குள் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்ததை மரத்தின் கீழே படுத்திருந்த நாய் ஒன்று கேட்டது. அவைகளுக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று நாய் எண்ணியது. அதனால் தன் பெருமையை, சிறப்பைக் கூறத் தொடங்கியது நாய்.
''அட அறிவற்றவர்களே! நாங்கள்தான் நன்றி உணர்ச்சியோடு நடந்து கொள்கிறோம். நன்றிக்கு எடுத்துக்காட்டாக, மனிதர்கள் எங்களைத்தான் கூறுகின்றனர். அதனால், உங்களை விட எங்களுக்குத்தான் மதிப்பும், மரியாதையும் தருகின்றனர். அதுவும் முதல் மரியாதை தெரியுமா?'' என்று மிகவும் பெருமையுடன் கூறியது நாய்.
இப்படி மூன்றும் தங்களுக்குள்ளே மனிதர்களிடமிருந்து முதல் மரியாதை பெறுவது யார்? என்பது பற்றிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவைகள் போட்டக் கூச்சலால், மரத்தின் பொந்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆந்தை ஒன்று தூக்கம் கலைந்து விழித்துக் கொண்டது.
''நீங்கள் மூவரும் எனக்கு நண்பர்கள். அப்படியிருக்க, நீங்கள் உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து என் மனம் வேதனை அடைகிறது,'' என்று கூறிய ஆந்தை, பிறகு தேனீயைப் பார்த்துப் பேசத் தொடங்கியது.
''தேனீக்களே! நீங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்து திரிந்து தேனைச் சேகரிக்கிறீர் கள். உங்களது கடின உழைப்பை எல்லாரும் பாராட்டத்தான் வேண்டும். மனிதர்கள் உங்களது உழைப்பைப் பெரிதும் பாராட்டு வதாக, நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர் கள். ஆனால், மனிதர்கள் உங்கள் விஷயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் தெரியுமா?'' என்று கூறி, தனது பேச்சை சில நொடி நேரம் நிறுத்தியது ஆந்தை.
''என்ன சொல்கிறீர்கள்? விவரமாகச் சொல்லுங்கள்,'' என்று கேட்டு கொண்டன தேனீக்கள்.
''மனிதர்கள் தேனை எடுப்பதற்காக உங்கள் இனத்தில் எத்தனை பேரை அழிக் கின்றனர் என்று எண்ணிப் பாருங்கள். உங்களை அழிப்பதோடு மட்டுமின்றி, உங்களது வீட்டையுமல்லவா அழித்து விடு கின்றனர். உங்களைப் பாதுகாப்பதற்காக உங்களில் ஒருவர் ஒரு மனிதனைக் கொட்டி விட்டால் போதும். உங்களது கடியைத் தாங்கிக் கொண்டு மனிதர்கள் பொறுமையாக இருந்து விடுவார்களா என்ன?
''எரிச்சலும், கோபமும் கொண்டு உங்கள் இனத்தையே தீயிட்டுக் கொளுத்தி விடு கின்றனர். அந்த இடத்தில் அவர்களது சுய நலம் தானே அவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. அவர்களுக்கு நீங்கள் தேன் சேகரித்துக் கொடுக்கிறீர்கள் என்பதைக் கூட மறந்து நன்றியில்லாமல் நடந்து கொள் கின்றனர். உங்கள் விஷயத்தில் மனிதர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்களே, அப்படி யிருக்க அவர்களிடமிருந்து உங்களுக்கு முதல் மரியாதை எப்படிக் கிடைக்கும்?'' என்றது ஆந்தை.
ஆந்தையின் கூற்றைக் கேட்ட தேனீக்கள் மவுனமாகி, யோசிக்கத் தொடங்கின.
பின்னர் ஆந்தையார் காக்கைகளைப் பார்த்துப் பேசத் தொடங்கியது.
''காக்கையாரே! மனிதர்களிடையே ஒற்றுமை இல்லாதது போலவும் அந்த ஒற்றுமையை நீங்கள்தான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தது போலவும் பெரிதாகப் பீற்றிக் கொள்கிறீர்களே! ஆனால், மனிதர்கள் உங்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள் கின்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள். மனிதர்கள் தானியங்களைக் காய வைக்கும் போது நீங்கள் பறந்து வந்து தானிய மணிகள் சிலவற்றைக் கொத்தி எடுத்துச் செல்வது உங்களது வழக்கம். அது போலவே சிறுவர்கள் தங்கள் கையில் தின்பண்டம் வைத்திருந்தால் அதனையும் 'லபக்' என்று கொத்திக் கொண்டு போய் விடுகிறீர்கள். மேலும், சில சமயங்களில் மனிதர்கள் மீது நீங்கள் உங்களது எச்சத்தைப் போட்டு விடுகிறீர்கள். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மனிதர்கள் உங்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கின்றனர் தெரியுமா? உங்களைக் கல்லால் அடித்துத் துரத்தி விடுகின்றனர். அப்படிப்பட்ட மனிதர்களிடமிருந்து உங்க ளுக்கு எப்படி முதல் மரியாதை கிடைக்கும்?'' என்று கூறியது ஆந்தை.
ஆந்தையின் பேச்சைக் கேட்ட காகங்கள், மவுனமாகி, யோசிக்கவும் செய்தன.
பின்னர் ஆந்தை நண்பனான நாயை பார்த்து, ''நாய் நண்பரே! நீ நன்றியுள்ளவன் தான் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், உன் விஷயத்தில் மனிதர்கள் நீ காட்டும் நன்றிக்கு மரியாதை தருகிறார்களா என்று எண்ணிப் பார்! திருடனிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றபடி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மனிதர்கள் உன்னைச் சங்கிலியால் கட்டிப் போட்டு உணவு கொடுத்து வருகின்றனர். காட்டில் வசித்து வரும் நாய்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் உனக்கு உண்டா? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டாலோ அல்லது நீ யாரையாவது கடித்துவிட்டாலோ மனிதர்கள் உன்னைச் சும்மா விட்டு விடுவார்களா? அப்போது உன்னை இந்த மனிதர்கள் என்ன பாடுபடுத்துவார்கள் என்பதை நீ நன்கு அறிவாய்! உனது விஷயத்தில் மனிதர்கள் உன்னை மதிக்கவா செய்கின்றனர்? இல்லையே! சுயநலமாகத்தானே நடந்து கொள்கிறார்கள்? ஆனால், நீயோ அவர்கள் உனக்கு முதல் மரியாதை தருவதாக நினைத்துக் கொண்டு, உன்னை நீயே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறாய்!'' என்று தெளிவாகக் கூறியது ஆந்தை.
ஆந்தை கூறியதைக் கேட்ட நாயும் மவுனமாகி, யோசனையில் ஆழ்ந்தது.
''சரி... சரி... ஆந்தையாரே! இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டன தேனீயும், காகமும், நாயும்.
''நண்பர்களே! மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காக, சுறுசுறுப்புக்கு தேனீயையும், ஒற்றுமைக்கு காகத்தையும், நன்றிக்கு நாயையும் உதாரண மாகக் கூறுகின்றனர். இதுபோல இன்னும் சில விலங்குகளையும், பறவைகளையும் உதாரணமாக அவர்கள் காலங்காலமாக கூறி வருகின்றனர். எனவே, நம்மில் ஒவ்வொரு வரிடமும் ஒரு விதமான திறமையும் பண்பும் உள்ளதை மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆகவே, நம்மைப் பற்றி மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் சில சமயங்களில் அவர்கள் நம்மிடம் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதும் போல, நமது கடமைகளைச் செய்து வர வேண்டும். அதுவே நமக்குள்ள சிறப்பாகும்,'' என்று கூறிவிட்டு, தன்னுடைய வேலையைக் கவனிக்கச் சென்று விட்டது ஆந்தை.
அதனைத் தொடர்ந்து தேனீ, காகம், நாய் ஆகிய இம்மூன்றும் தங்கள் வேலையைக் கவனிக்கத் தொடங்கின. இதன் பின்னர் அவைகளுக்கிடையே வாதமோ, சச்சரவு களோ, எழவில்லை. ஒற்றுமைக்கு உதாரணமாக, அவை வாழத் தொடங்கின.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.