தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வை சேர்க்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
5 முனை போட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16-ந்தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீடு செய்து கொள்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க. அணி, தி.மு.க. அணி, தே.மு.தி.க. அணி உருவாகியுள்ளது. இது தவிர பாரதீய ஜனதா தலைமையில் ஒரு அணியும், பா.ம.க. தனித்தும் களம் காண்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது.
அ.தி.மு.க. அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தே.மு.தி.க. அணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாரதீய ஜனதா அணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க. தேர்தலை தனியாக சந்திக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.?
வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் உள்ளன.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளை கடந்த மாதமே தொடங்கி விட்டது. இருப்பினும் தொகுதிகளின் எண்ணிக்கை காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் இடம் பெறுவதில் சிக்கல் இருந்து வருகிறது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக தி.மு.க. கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை இணைக்க முயற்சி நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தலைமை 25 தொகுதியில் இருந்து 30 தொகுதி வரை தான் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக தெரிகிறது. ஆனால் 40 தொகுதிக்கு குறையாமல் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விடாப்பிடியாக செயல்பட்டு வருகிறது.
கூடுதல் தொகுதி
தி.மு.க. கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை சேர்த்தால் தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று தி.மு.க. கருதுகிறது. எனவே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரிடம் தி.மு.க. தலைமை பேசி வருவதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் தாங்கள் வர வேண்டும் என்றால், காங்கிரசை விட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தான் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால் தி.மு.க. கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் இணையக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கூட்டணி குறித்து தமிழ்மாநில காங்கிரஸ் எத்தகைய நிலைப்பாட்டில் இருக்கிறது என்று அக்கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘கூட்டணி குறித்து எங்கள் தலைவர் இந்த மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிப்பார். எல்லா கட்சிகளும் எங்களை மதிக்கிறார்கள். எங்கள் தலைவர் கூறியபடி நாங்கள் இருக்கும் கூட்டணி வெற்றிக்கூட்டணியாக, மக்கள் விரும்பும் அணியாக இருக்கும்’ என்றனர்.
தி.மு.க. திட்டம்
இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளன. இதுவரை தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைக்கு பிறகு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை விரைவில் ஒதுக்கீடு செய்து கொடுத்து தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள தி.மு.க. திட்டமிட்டு வருகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.