Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2016

வரிப்பாக்கியை வசூலித்தாலே போதும்!



மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசுகள் என்றாலும் சரி, அதன் வருமானத்துக்கு முக்கிய பங்காக இருப்பது பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும் வரிதான். வரி என்பது, மத்திய அரசாங்கத்தை பொருத்த அளவில், ஆங்கிலத்தில் ‘டேக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இதில், நேர்முக வரிகளும் உண்டு, மறைமுக வரிகளும் உண்டு. ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் மக்கள் முதலில் பார்ப்பது புதிய வரிகள் இருக்கிறதா?, வரி உயர்வு இருக்கிறதா? என்பதுதான். அதிலும், இப்போது சமீபகாலங்களாக மத்திய அரசாங்கத்திற்கு பிடித்தது ‘செஸ்’ என்று சொல்லப்படும் வரிமேல் வரிதான். ஏனெனில், தனிநபர் வருமானவரி, கலால்வரி, சுங்கவரி போன்ற வரிகள் அரசாங்கத்தால் வசூலிக்கப்பட்டால் ஒருங்கிணைந்த நிதிக்குத்தான் அந்த தொகை சென்றுவிடும். அதிலிருந்துதான் அரசாங்கத்தின் ஒவ்வொரு துறை செலவுகளுக்கும், திட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படும். ஆனால், இந்தவழியில் செல்லாமல், குறுக்குவழியில் செல்ல பயன்படுத்தப்படும் வரிதான் ‘செஸ்’ என்று சொல்லப்படும் வரிமேல் வரியாகும்.

இது ஒரு குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே விதிக்கப்படும் மேல் வரியாகும். இந்த மேல்வரியில் கிடைக்கும் வருமானம் அந்த திட்டத்திற்காக மட்டுமே செலவழிக்கப்படும். எடுத்துக்காட்டாக, வருமானவரி மீது பள்ளிக்கூட மற்றும் உயர்கல்வி ‘செஸ்’ வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வழக்கமான வருமானவரியின் மீது 3 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதுபோல, சேவைவரி 14 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதற்குமேல் ‘தூய்மை இந்தியா செஸ்’ .5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் மேலும் .5 சதவீத செஸ் வரியை விவசாய வரியாக வசூலிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல, உள்கட்டமைப்பு ‘செஸ்’ வாகனங்கள் வாங்கும்போது விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படி அரசின் வருமானத்தை பெருக்க, புதுப்புது வரிகளை வசூலித்து மக்களை கசக்கிக்கொண்டிருக்கும் நிலையில், 2014–15–ம் நிதியாண்டில் மட்டும் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் கோடி வரி வசூலிக்கப்படாமல் இருக்கிறது என்று கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறியிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இதில், ரூ.7 லட்சம் கோடி வருமானவரி போன்ற நேர்முக வரியில்தான் பாக்கி இருக்கிறது. இதில், பெரிய வியப்பு என்னவென்றால், வருமானவரித்துறையே இந்த தொகையில் 96 சதவீத தொகையான ரூ.6 லட்சத்து 73 ஆயிரம் கோடியை வசூலிப்பது கஷ்டம். ஏனென்றால், பாக்கி வைத்திருப்பவர்களுக்கு போதிய சொத்து வசதிகள் இல்லை, வழக்குகள் இருக்கிறது என்று பல காரணங்களை கூறுகிறார்கள்.

வருமானவரி பாக்கி என்பது மட்டுமல்லாமல், சேவைவரி பாக்கி, சுங்கவரி பாக்கி, மத்திய கலால்வரி பாக்கி என்று இந்த அளவிற்கு பெரிய பாக்கியாக வளர்ந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல், வங்கிகளின் வராக்கடன் ரூ.4 லட்சம் கோடியை எட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி வராக்கடன்கள், வரி பாக்கிகளை சம்பந்தப்பட்ட துறைகள் வசூலித்தாலே, புதிய வரிகள் போடவேண்டிய தேவை இருக்காது, வரியை உயர்த்தவேண்டிய தேவையும் இருக்காது. அந்த வகையில், சம்பந்தப்பட்ட துறைகளை வலுப்படுத்த வேண்டும். இதற்காக வழக்குபோடும்போது அத்தகைய வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் அமைக்கப்படவேண்டும். மாதச்சம்பளம் வாங்கி எந்த வரியையும் ஏய்க்க முடியாத வகையில் எல்லா வரிகளையும் கட்டிக்கொண்டிருப்பவர்கள் உள்பட ஏறத்தாழ 4 கோடி பேர் வருமானவரி கட்டுகிறார்கள். 6 லட்சத்து 75 ஆயிரம் நிறுவனங்கள் வருமானவரி கணக்குதாரர்கள். இந்த நிலையில், மற்றொரு
பக்கத்தில் இவ்வளவு வரிபாக்கி இருக்கிறது என்ற தகவல்கள் தொடர்ந்து வெளிவந்தால், முறையாக வரி கட்டுபவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்படும். அவர்கள் பார்வையும் வரி ஏய்ப்பு பக்கம் சென்றுவிடும். மொத்தத்தில், வரி வசூலில் தாவாக்கள், வழக்குகள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில், வரி நிர்ணயம் செய்தால் எந்த பிரச்சினையும் இருக்காது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.