Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் கழிவுகள் தேக்கம் `குப்பை சிட்டி’யானது நெல்லை!


நெல்லை மாநகராட்சி நாளுக்கு நாள் விரிவடைந்துவரும் அதே நேரத்தில் சுகாதார மேம்பாட்டில் பின்தங்கி வருகிறது. மாநகரப்பகுதியில் நாள்தோறும்  சேகரமாகும் குப்பைகளை முழுமையாக அகற்றப்படாத நிலை நீடிக்கிறது. மேலும் மாநகர எல்லைக்குள்ளும் புதியதாக தோன்றிய புறநகர் பகுதியிலும்  குப்பை அகற்ற போதிய பணியாளர்கள் கிடையாது.  அப்பகுதிகளில் குப்பைத்ெதாட்டிகளும் வைக்கப்படவில்லை. மேலும் தினமும் வந்து குப்பை  சேகரித்து செல்லும் பணியாளர்களும் இவ்வாறு பல பகுதிகளுக்கு செல்வதில்லை. இதனால் இந்தப்பகுதிகளில் சேரும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு  ஏற்பட்டு வருகிறது. மேலும் மாநகரின் பிரதான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளிலும் முழுமையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை.
 சில பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்குப் பதில் தீவைத்து கொளுத்திவிடுகின்றனர். இதனால் தொட்டியில் குவிந்திருக்கும் கிருமிகள் நிறைந்த  குப்பைகளிலிருந்து நச்சுப்புகை வெளியேறி அப்பகுதி முழுவதிலும் நோய் பரப்புகிறது. புகையை சுவாசிக்கும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும்  பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர். 

மாநகரில் குப்பை அகற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க சுய உதவிக்குழுக்களின் உதவியுடன் அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.  அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என்ற புகார் உள்ளதால் அவர்களும் ஆர்வமாக இப்பணியை செய்வதில்லை  எனக்கூறப்படுகிறது. இதனிடையே மாநகரில் சேரும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் மலைபோல் குவிக்கப்பட்டு  வருகிறது. மாநகரப்பகுதியில் மட்டும் நாள்தோறும் சுமார் 180 டன் அளவிற்கும் மேலாக குப்பைகள் சேருகின்றன. சில திருவிழா, பண்டிகை நாட்களில்  இதன் அளவு மேலும் அதிகரிக்கிறது. ஆனால் அனைத்து குப்பைகளையும் முழுமையாக எடுத்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. 
பல அசைவ உணவகங்களிலிருந்து நள்ளிரவில் நைசாக கொட்டப்படும் மாமிச கழிவுகளால் கொடிய நோய் பரவும் மையமாக குப்பை தொட்டிகளும்  அதை சுற்றியுள்ள பகுதிகளும் மாறிவருகிறது. 

குப்பைகளால் மாநகர் ஏற்கனவே இருந்த பொலிவை இழந்துவருகிறது. கிளீன் சிட்டி, கிரீன் சிட்டி, ஸ்மார்ட் சிட்டி என்ற அறிவிப்புகளெல்லாம் பல  ஆண்டுகளாக வெறும் அறிவிப்பாகவே உள்ளது. எனவே இத்திட்டங்கள் எல்லாம் நெல்லை மாநகர மக்களுக்கு பகல் கனவாகவும் கானல் நீராகவும்  காட்சி அளிக்கிறது. ராமையன்பட்டியில் சேரும் குப்பையும் நாளுக்கு நாள் குன்று போல் மாறி வருகிறது. 118 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த கிடங்கில்  சுமார் 38 ஏக்கர் பரப்பளவில் குப்பை குன்று தோன்றியுள்ளது. இதில் கோடைகாலங்களில் வெப்பம் தாங்காமல் குப்பைகள் தானாக பற்றி எரிவதும்  அதில் இருந்து ஏற்படும் புகை மண்டலம் மாநகரில் பல கிலோ மீட்டர் தூரம் பரவி நோய்பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. தற்போது மீண்டும்  வெயில் கொளுத்த தொடங்கியுள்ளதால் இந்த குப்பை கிடங்கை சுற்றி உள்ள பகுதி மக்கள் கவலையில் உள்ளனர். 

இந்த குப்பைக்கிடங்கில் இருந்து முதலில் உரம் தயாரிக்கும் திட்டம் தீட்டப்பட்டு அது கைவிடப்பட்டது. பின்னர் குப்பையில் இருந்து மின்சாரம்  தயாரிக்கும் திட்டம் போடப்பட்டது. இதுவும் வருடங்கள் கழிந்தும் கனவாகவே உள்ளது. இதுபோன்ற திட்டத்தை மாநகராட்சி விரைந்து  அமல்படுத்தினால் குப்பைக்கழிவுகள் பயனுள்ளதாக பயன்படுத்தப்பட்டு அழிக்க வாய்ப்புள்ளது. மநாகரில் குப்பையால்  கொசுக்கள் அதிக அளவில்  தோன்றி அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தேவையான சுகாதாரப்பணியாளர்களை நியமித்து விடுபடும் அனைத்துப்பகுதிகளிலும்  குப்பைகளை அகற்றவும், அகற்றிய குப்பகைளை அழிக்க பயனுள்ள குப்பை மின்சார திட்டத்தை அமல்படுத்தவும் மாநகராட்சி முன்வரவேண்டும் என  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.