Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2016

செலவுகளை குறைக்கும் நவீன செங்கல்


கட்டுமானத்துறையில் அவ்வப்போது புதுப்புது பொருட்கள் அறிமுகமாகி சந்தையில் உலா வருகின்றன. அந்த வகையில் சுட்ட செங்கலுக்கு மாற்றாக ‘பிளைஆஷ்’ கற்கள், ‘சி.எல்.சி’ எனப்படும் ‘செல்லுலர் லைட் வெயிட் கான்கிரீட் கற்கள் போன்றவை தற்போது உபயோகத்தில் இருந்து வருகின்றன. 

கட்டுமானப் பொருட்களில் புதிய வரவு என்ற வரிசையில்  ஏ.ஏ.சி என்று சொல்லப்படும்  ஆட்டோகிளேவ்டு ஏரேட்டடு கான்கிரீட் கற்கள் பிரபலமாகி வருகின்றன. பழைய செங்கல்லுக்கு மாற்று தொழில்நுட்பமாக இதை கருதலாம். காரணம் சுற்றுப்புற சூழலை பாதிக்காத வகையில் இவ்வகை கற்கள் தயாராகின்றன. செங்கற்களை காட்டிலும் பல விதங்களில் தொழில்நுட்ப மேம்பாடு பெற்று இருப்பதால், இவற்றை பயன்படுத்துவதில் பல நன்மைகள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

விலை குறைவு

 செங்கற்களை காட்டிலும்  ஏ.ஏ.சி. வகை கற்கள் உபயோகிக்கும்போது 25 சதவிகித அளவுக்கு செலவு குறைவாக இருக்கும். காரணம் கற்களை இணைப்பதற்கு சிமெண்டு கலவை வேண்டியதில்லை. இவ்வகை கற்களுக்கான ‘ஸ்பெஷல் பிளாஸ்டர்’ தனியாக விலை குறைவாக கிடைக்கிறது. அதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானது. மேலும் கற்களுக்கிடையில் இருக்கும் ‘ஸ்பெஷல் பிளாஸ்டர்’’ விரைவில் இறுகி ‘வலு
வானதாக மாறிவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

எடை  குறைவு

செங்கலுடன் ஒப்பிடும்போது இந்த கற்கள் 70 சதவிகித அளவுக்கு எடை குறைந்தவை. சுவர்கள் மட்டுமல்லாமல் தரைகள், பீம்கள், தூண்கள் அமைக்கவும் இவை பயன்படுகின்றன. அதன் காரணமாக இரும்புக்கம்பிகளின் பயன்பாடுகள் மற்றும் காங்கிரீட் அமைப்புகள் குறைவதால் கட்டிட அமைப்பில் சுமை குறைகிறது.

கட்டிடத்தின் உறுதி

‘சிலிக்கா’ எனப்படும் சுத்தமான மணல், சுண்ணாம்புக்கல், சிமெண்டு, அலுமினிய கலவை, தண்ணீர் ஆகிய மூலப்பொருட்கள் இணைப்பில் உருவான இந்தக் கற்கள் உறுதியான தன்மை பெற்றவை. கட்டிட அமைப்பில் மொத்த எடையை இவை வெகுவாக குறைத்து விடுவதால் நில அதிர்வுகள் ஏற்பட்டாலும் கட்டிடங்களுக்கு  பெரிய அளவில் பாதிப்புகளோ விரிசல்களோ வராமல் தவிர்க்கப்படும்.

ஈரம் மற்றும் வெப்ப தடுப்பு

இந்த வகை கற்களுக்குள் சிறிய காற்றறைகள் இருப்பதால், அவை வெப்பத் தடுப்பாக செயல்படுகின்றன. அதனால், வெளிப்புறத்தில் சுட்டெரிக்கும் வெயில் கட்டிடத்திற்குள் வராமல் தடுக்கப்படுகிறது. மழையின் காரணமாக உண்டாகும் ஈரமும் உட்புறமாக கடத்தப்படுவதில்லை. மேலும் ஒலி மாசு எனப்படும் சத்தங்களால் உண்டாகும் அதிர்வுகளும் கட்டிடத்திற்குள் வருவதில்லை.

விரைவான செயல்திறன்

கட்டுமான வேலைகள் விரைந்து முடிப்பதற்கேற்ப அளவிலும், அமைப்பிலும் இவ்வகை கற்கள் தயாராவதால் வேலைகளை சுலபமாக முடிக்க ஏதுவாக இருக்கும். மேலும், இந்த கற்கள் மின்சார ஒயர்கள், மற்றவகை கேபிள்கள் பதிப்பதற்கேற்ற துளைகள், வெட்டும் வேலைகள் ஆகியவற்றை செய்வதற்கு ஏற்றவாறும் இருக்கக் கூடியவை. தேவைக்கேற்ற அளவுகளில் கிடைப்பதால் அதற்கேற்ப கட்டுமான வேலைகளை திட்டமிட்டு குறித்த காலத்தில் செய்து முடிக்கவும் இயலும். கற்கள் நல்ல சீரான தோற்றத்துடனும், நேர்த்தியான வடிவமைப்புடனும் இருப்பதால் சுவர்களுக்கு வெளிப்பூச்சும் தேவைப்படாது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.