Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

யார் மாண்டால் என்ன?-சிறுகதை


அக்பர் சக்கரவர்த்தி ஒருநாள் தம்மைப் பற்றி மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இதைப்பற்றி பீர்பலிடம் கூறினார்.
அதற்கு பீர்பல், "மாறு வேடமணிந்து சென்றால் மக்கள் உங்களைப் பற்றியும், உங்கள் ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளலாம்,'' என்று கூறினார்.
சக்கரவர்த்தியும், பீர்பல் கூறிய யோசனைப்படி பீர்பலுடன் மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்றார்.
இருவரும் மாறு வேடத்தில் இருந்ததால் ஒருவராலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
அப்போது கடும் வெயில். ஒரு விறகு வெட்டி சுமக்க முடியாத அளவுக்கு பாரத்தை சுமந்தவாறு வந்தான். அவனைப் பார்த்ததும் சக்கரவர்த்திக்கு இரக்கம் ஏற்பட்டது.
"ஐயோ பாவம், சாண் வயிற்றுக்காக இந்தக் கடும் வெயிலில் இவ்வாறு துன்பப்படுகிறானே!' என்று நினைத்தார்.
அவன் அருகே வந்ததும், "ஐயா பெரியவரே, சுமையை இறக்கி வைத்து விட்டு, சற்று இளைப்பாறிக் கொள்ளுங்கள்,'' என்றார் அக்பர்.
"இறக்கி வைப்பதற்கு ஆள் கிடைக்காததால்தான் இடுப்பொடிய சுமந்து செல்கிறேன்,'' என்றான் விறகுவெட்டி.
"நான் கை கொடுக்கிறேன். சுமையை இறக்கி விட்டு சிறிது நேரம் இளைப்பாறுங்கள்,'' என்று கூறிய அக்பர், விறகு வெட்டி தலைச்சுமையை இறக்குவதற்கு உதவி செய்தார்.
சுமையை இறக்கி வைத்து விட்டு இளைப்பாறிய விறகு வெட்டியிடம், பீர்பல் மெல்ல பேச்சுக் கொடுத்தார்.
"ஐயா, பெரியவரே! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரே, உமக்குச் சேதி தெரியுமா?'' என்றார்.
இதைக் கேட்டதும் விறகு வெட்டி, "ஐயோ! நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாரா? ஏழைகளுக்கு உதவி செய்யும் உத்தமப்பிரபுவாயிற்றே! அப்படிப்பட்ட நல்ல மனிதரையா எமன் வாயில் போட்டுக் கொண்டான்?'' என்று கதறிக் கண்ணீர் வடித்தான்.
"என்ன செய்வது? என்றாவது ஒருநாள் அனைவரும் இறக்க வேண்டியதுதானே!'' என்று விறகு வெட்டியிடம் கூறினார் பீர்பல்.
"என்னைப் போன்ற பிறவிகள் வாழ்வதால் உலகத்துக்கு என்ன பிரயோசனம்? நம் அரசரைப் போன்றவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும். இனி யார் ஆட்சிக்கு வருவார்களோ? எப்படி பரிபாலனம் நடக்குமோ! கடவுள்தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று விறகுவெட்டி மீண்டும் சுமையை எடுத்து தலைமேல் வைத்தபடி செல்லலானான்.
"என்ன பீர்பல், உயிருடன் இருக்கும் போதே நான் இறந்து விட்டதாகக் கூறி விட்டாயே! இது என்ன விளையாட்டு?'' என்றார் அக்பர்.
"அப்படிக் கூறியதால்தானே உங்களைப் பற்றி அந்த விறகுவெட்டி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரியவந்தது,'' என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, தயிர் விற்கும் பெண்ணொருத்தி தலைமேல் தயிர் பானையுடன் வந்து கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த அக்பர், "என்ன இப்படி நடந்து செல்கிறாளே! கொஞ்சமாவது அடக்க, ஒடுக்கம் இருக்க வேண்டாமோ! கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவளாயிருக்கிறாளே!'' என்று கேலியாகக் கூறினார் அக்பர்.
அவள் நெருங்கி வந்ததும் பீர்பல் அவளிடம், "நமது சக்கரவர்த்தி இறந்து விட்டாராமே... உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.
"இறந்து போனால் என்ன குடியா முழுகிப் போய்விட்டது? எல்லாரும் ஒருநாள் சாக வேண்டியது தானே!'' என்றாள் அந்தப் பெண்.
"அவர் இறந்துவிட்டால் அரசாட்சி எப்படி நடக்குமோ! யார் பட்டத்துக்கு வருவார்களோ?'' என்றார் பீர்பல்.
"இவருடைய தகப்பனார் செத்தார். இவர் பட்டத்துக்கு வந்தார். இவர் செத்தால் இவருடைய மகன் பட்டத்திற்கு வருவான். இந்த ஆக்ராவில் எத்தனையோ அரசர்கள் ஆட்சி புரிந்து மறைந்து விட்டார்கள். இவர்கள் எம்மாத்திரம்?'' என்றாள்.
"அப்படியானால் சக்கரவர்த்தி இறந்து விட்டதற்காக நீ மகிழ்ச்சியா கொள்கிறாய்?'' என்றார் பீர்பல்.
"ஆமாம். பேரரசர் இறந்துவிட்டால் அவரது ஈமச் சடங்குகள் விமரிசையாக நடக்கும். நிறையப் பேர் வெளி நாடுகளிலிருந்தெல்லாம் வருவர். தயிர், பால், வெண்ணெய், நெய் முதலியவை ஏராளமாகச் செலவாகும். அதனால் எங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும்,'' என்று கூறிவிட்டுச் சென்றாள்.
இதைக் கேட்டதும் அக்பருக்கு அந்தப் பெண்ணின் மேல் மிகுந்த கோபம் ஏற்பட்டது. அதனைக் கண்ட பீர்பல், "அரசே, முதலில் வந்த விறகுவெட்டியிடம் அன்பாக நடந்து கொண்டீர்கள். அதற்குத் தக்கவாறு உங்கள் மனம் மகிழத்தக்க வகையில் பதில் கிடைத்தது. இந்தப் பெண்ணை கேலி பேசினீர்கள். அதற்குத் தகுந்தவாறு தான் பதிலும் இருக்கும்.
இதற்காக ஆத்திரப்பட்டு பயன் இல்லை. மேலும், எல்லாரும் ஒரே மாதிரியாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் புத்திசாலித்தனம் அல்ல. அவரவர் மனப் போக்குக்குத் தக்கவகையில் தான் எண்ணங்களும் இருக்கும். அந்தப் பெண்ணுக்கு பேரரசரை விட தனக்கு நடைபெறப்போகும் வியாபாரத்தில் தான் அதிக அக்கறை. எனவே, அவளுக்கு யார் இருந்தால் என்ன? யார் மாண்டால் என்ன? இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது,'' என்று கூறினார் பீர்பல்.
பீர்பல் சொல்வதும் சரிதான் என்று எண்ணிய அக்பர், அத்துடன் தங்கள் நகர் சோதனையை முடித்துவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.