சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி, மத்திய ஆயுத படையினர் 7 பேர் பலியாகினர்.
மத்திய ஆயுத படையினர்
நமது நாட்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிற மாநிலங்களில் ஒன்று, சத்தீஷ்கார். அங்கு அடர்ந்த காடுகளில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகள் அவ்வப்போது சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, அரசுக்கு தலைவலியாக விளங்குகின்றனர்.
இந்த நிலையில் அங்கு தண்டேவாடா மாவட்டத்தில் மேலவாடா என்ற கிராமத்தில் மத்திய ஆயுத படையினர் 7 பேர் நேற்று மாலை சுமார் 4 மணிக்கு ஒரு மினி லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
கண்ணிவெடி தாக்குதல்
அப்போது நக்சலைட்டுகள் சாலையில் சக்தி வாய்ந்த கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். அது தெரியாமல், அவற்றின்மீது மத்திய ஆயுத படையினரின் மினி லாரி ஏறி சென்றபோது, கண்ணி வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. மினி லாரியும் சுக்கு நூறாக வெடித்து சிதறியது.
இதில் மத்திய ஆயுத படையினர் 7 பேரும் உடல் சிதறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த அணிவகுப்பு வாகனங்களில் இருந்த படையினர் சிலர் காயம் அடைந்தனர். அந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
மீட்பு பணி
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பலியானவர்களின் உடல்களை சேகரித்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த தாக்குதலில் பலியான மத்திய ஆயுத படையினர் அனைவரும், அந்த படையின் 230–வது பிரிவை சேர்ந்தவர்கள். அவர்கள் தெற்கு பஸ்தார் பகுதியில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
தீவிர தேடுதல் வேட்டை
ஒரு சப்–இன்ஸ்பெக்டர் தலைமையிலான அந்த அணியினர், சீருடை அணியாமல் நிர்வாக பணியின் நிமித்தம் சென்று கொண்டிருந்தபோதுதான், இந்த கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அவர்களின் ஆயுதங்களையும் நக்சலைட்டுகள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கமல் லோச்சன் காஷ்யப் விரைந்தார்.
அங்கு நக்சலைட்டுகளை தீவிரமாக தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.