Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

டூ இன் ஒன்! ஸ்டோரி


கஞ்சப் பிரபு!

அரியலூரில் வைத்யநாதன் என்பவன் இருந்தான். பெருஞ்செல்வந்தனாக இருந்த அவன் கஞ்சக் கருமியாக இருந்தான்.
"இவ்வளவு செல்வத்தை வைத்து இவன் என்ன செய்யப் போகிறான்? இவனுக்குக் குழந்தை, குட்டியா உள்ளது? ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் என்ன?'' என்று அவன் காதில் விழும்படி மற்றவர்கள் பேசினர்.
"தன்னைப் பற்றி இப்படிப் பேசுகிறார்களே' என்று வருந்தினான் வைத்யநாதன்.
அவன் ஊருக்குத் துறவி ஒருவர் வந்தார்.
அவரை வணங்கிய அவன் தன்னைப் பற்றி அவரிடம் சொன்னான்.
"இந்த ஊரில் நான் செல்வந்தனாக இருக்கிறேன். எனக்குக் குழந்தைகள் இல்லை. நான் இறந்த பிறகு, என் செல்வம் அனைத்தையும் ஊரார் எடுத்துக் கொள்ளப் போகின்றனர். நல்ல செயல்களுக்கு அந்தச் செல்வத்தைப் பயன்படுத்தப் போகின்றனர். இது ஊரில் உள்ளவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் என் காதுபட, என்னைக் கருமி என்று திட்டுகின்றனர். என்னால் தாங்க முடியவில்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னான்.
இதைக் கேட்ட துறவி, "நான் ஒரு கதை சொல்கிறேன். அப்போது மக்கள் ஏன் உன்னைக் குறை சொல்கின்றனர் என்பது புரியும்,'' என்றார்.
"சொல்லுங்கள்,'' என்றான் வைத்யநாதன்.
"பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே பன்றி ஒன்று வந்தது. "பசுவே! உன்னை எல்லாரும் புகழ்ந்து பேசுகின்றனர். நீ நாள்தோறும் அவர்களுக்குப் பால் தருகிறாயாம். என்னால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று இகழ்ந்து பேசுகின்றனர். இப்போது அவர்களுக்கு என்னால் நன்மை இல்லாமல் இருக்கலாம். இறந்த பிறகு உன்னை விட நான் அவர்களுக்கு அதிகம் பயன் படுவேன்.
என் உடலின் எல்லாப் பகுதிகளையும் அவர்கள் சாப்பிடப் போகின்றனர். இப்படிப் பயன்படும் என்னை இகழ்கிறார்களே. என்னால் தாங்க முடியவில்லை, என்று வருத்தத்துடன் சொன்னது பன்றி.
அதற்குப் பசு, "நான் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்குப் பயன் படுகிறேன். அதனால் என்னைப் புகழ்கின்றனர். இறந்த பிறகு பயன்பட்டால் என்ன பயன்படா விட்டால் என்ன?'' என்று பதில் சொன்னது பசு.
"இந்த கதையில் இருந்து உனக்கு ஏதாவது புரிகிறதா?'' என்று கேட்டார் துறவி.
"துறவியாரே! என் தவறு எனக்குப் புரிகிறது. இனி நான் உயிரோடு இருக்கும் போதே என்னாலான உதவியைப் பிறருக்குச் செய்வேன்,'' என்றான் அவன்.
அவனை வாழ்த்தி அனுப்பி வைத்தார் துறவி.

படிப்பது ராமாயணம் இடிப்பது...
ஒரு காட்டில் நரி ஒன்றும் பூனை ஒன்றும் நண்பர்களாக இருந்தன. அவை இரண்டும் பேசிக் கொண்டே நடந்தன.
"நற்பண்புகளில் சிறந்தது அன்புதான். அன்பினால்தான் இந்த உலகம் இயங்குகிறது. அன்பு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பிற உயிர்களிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். நம்மாலான உதவியை அவற்றிற்குச் செய்ய வேண்டும். பிற உயிர்களுக்கு அறிந்தோ, அறியாமலோ தீங்கு செய்யக் கூடாது. என் வாழ்க்கையின் குறிக்கோளாக இவற்றைப் பின்பற்றி வருகிறேன். மற்றவர்களிடம் அன்பு காட்டுவதை விட இனிமையானது ஏதாவது உள்ளதா?'' என்று உணர்ச்சி பொங்கச் சொன்னது நரி.
"நரியே! நீ சொல்வது அனைத்தும் உண்மை. அன்பிற்கு ஈடு இணை எதுவும் இல்லை. இந்தக் காட்டில் கொடிய விலங்குகள் சில எளிய விலங்குகளைக் கொன்று உயிர் வாழ்கின்றன. ஏன்தான் அப்படி ஒரு இழிவான வாழ்க்கை வாழ்கின்றவோ தெரியவில்லை.
அன்பு வாழ்க்கைதான் உயர்ந்தது; சிறந்தது. எப்போதும் நான் அன்பு வாழ்க்கையே வாழ்வேன். எந்த உயிருக்கும் சிறு தீங்கும் செய்ய மாட்டேன்,'' என்று அன்பின் பெருமையைப் பேசியது பூனை.
அவை இரண்டும் ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைக் கொன்று தின்பதைப் பார்த்தன.
"ஐயோ! ஆட்டுக் குட்டி கதறக் கதற அதை ஓநாய் கொன்று தின்கிறதே. இந்தக் கொடுமையைப் பார்க்க நேர்ந்ததே. அன்பின் அருமையை அறியாத இந்த ஓநாய் அழிந்து போகட்டும்,'' என்று புலம்பியபடியே இரண்டும் அங்கிருந்து நடந்தன.
அவை இரண்டும் ஓர் ஊரை அடைந்தன.
அங்கே குப்பை மேட்டில் சேவல் ஒன்று, "கொக்கரக்கோ' என்று கூவியது.
இதைக் கேட்ட நரி அன்பைப் பற்றிப் பேசியதை மறந்தது. ஒரே பாய்ச்சலில் அந்தச் சேவலைக் கொன்றது.
அங்கே எலி ஒன்று ஓடுவதைப் பார்த்தது பூனை. ஓட்டமாக ஓடி எந்த எலியைப் பிடித்து கொன்று தின்றது.
அட்வைஸ் எல்லாம் மற்றவர்களுக்குதான் நமக்கில்லை...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.