Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பிடிவாதத்தால் பொதுமக்கள் அதிருப்தி படுகாயம் அடைந்தவரை ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்


விபத்தில் படுகாயம் அடைந்தவரின் உயிரைவிட விதிமுறைகள்தான் எங்களுக்கு முக்கியம் என்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பிடிவாத செயல், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியது. 

படுகாயம்

சென்னை சர்மா நகரை சேர்ந்தவர் பிலோமின் (வயது 21). பெரம்பூரை சேர்ந்தவர் சாலமோன் (21). இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று காலையில் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் கல்லூரி சென்றனர்.

எழும்பூர் பாந்தியன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பிலோமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காது வழியாக ரத்தம் கொட்டியது. சாலமோனுக்கு சிறு காயம் மட்டும் ஏற்பட்டிருந்தது.

நர்சின் மனிதாபிமானம் 

சாலையில் விழுந்து கிடந்த பிலோமினை பொதுமக்கள் தூக்கி வந்து, சாலையோரம் கிடத்தினர். ஒருவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். காது வழியாக ரத்தம் கொட்டிக்கொண்டிருப்பதை கண்டு பயந்துபோன பொதுமக்கள் சிலர், பிலோமினை 15 அடி தூரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர்.

ஆஸ்பத்திரி வாசலில் வைத்து அந்த மாணவரை பரிசோதித்த டாக்டர், தலையில் அடிப்பட்டுள்ளது. சீக்கிரமாக அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்செல்லுங்கள் என்று கூறினார். ரத்தம் கொட்டுவதை நிறுத்துவதற்காக அங்கிருந்த ஒரு நர்சு, மனிதாபிமானத்துடன் அந்த மாணவரின் காதில் பஞ்சை வைத்தார். அங்கு ஒரு நாற்காலியை போட்டு, அதில் அந்த மாணவர் உட்கார வைக்கப்பட்டார். ஆம்புலன்சுக்காக அனைவரும் காத்திருந்தனர். 

முதலுதவி 

கிட்டத்தட்ட 20 நிமிடம் கழித்து ஆம்புலன்ஸ் வந்தது. அதில் இருந்து இறங்கிய டாக்டர், நர்சு ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து எப்படி அழைத்துச்செல்ல முடியும்?, அந்த ஆஸ்பத்திரியில் எந்த வகையான முதலுதவி வழங்கப்பட்டது?, அதன் விவரம் என்ன? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தொடங்கிவிட்டார்கள். 

அதற்கு முதலுதவி சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் கூறியும், யார் அந்த மாணவரின் காதில் பஞ்சை வைத்தது?, அந்த டாக்டர் எங்களிடம் பேசினால்தான், இந்த மாணவரை தூக்கிச்செல்ல முடியும் என்று நிபந்தனை விதித்தனர். 

பிடிவாதம் 

அந்த தனியார் ஆஸ்பத்திரி நர்சுகள் ஓடிவந்து, ‘அந்த பையனின் நிலைமை மோசமாக உள்ளது. முதலுதவி எதுவும் செய்யவில்லை. உடனே அழைத்து செல்லுங்கள்’ என்று கூறினார்கள். பொதுமக்களும் அதேபோல, ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் கெஞ்சிக்கேட்டனர். 

ஆனால், கொஞ்சம் கூட மனம் இறங்கி வராமல், ‘எங்களுக்கு என்று விதிமுறைகள் உள்ளது. அதைத்தான் நாங்கள் பின்பற்றவேண்டும். இல்லையென்றால் எங்களது உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டும். ஆஸ்பத்திரி டாக்டரை வர சொல்லுங்கள்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

சுயநினைவு இல்லாமல் காதில் ரத்தம் வடிந்தபடி உட்கார்ந்திருந்த அந்த மாணவரின் நிலையை கண்டு பயந்த நிலையில் இருந்த பொதுமக்கள், ‘முதலில் மாணவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுங்கள். அவரது உயிருக்கு பிரச்சினை வந்துவிடக்கூடாது’ என்று கூறினார்கள். 

ஆட்டோ டிரைவர் 

ஆனால், ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள், எங்களுக்கு விதிமுறைகள்தான் முக்கியம். அதைதான் நாங்கள் பின்பற்ற முடியும் என்று உறுதியாக கூறிவிட்டனர். 

இதைக் கேட்டு ஆத்திரமடைந்து கூட்டத்தில் இருந்த ஒரு ஆட்டோ டிரைவர், ‘விடுங்க சார். நான் கூட்டிக்கொண்டு போகிறேன்’ என்று மனிதாபிமானத்துடன் அந்த வாலிபரை தன் ஆட்டோவில் படுக்க வைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.

பிடிவாதமாக இருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு, பின்னர் ஆம்புலன்சை எடுத்து சென்றனர். இவர்களது நடவடிக்கையை பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிருப்தியுடனும், மனவேதனையுடனும் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.