Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

பெல்ஜியம்- ஐஎஸ் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர் உயிரிழப்பு!


பெல்ஜியத்தில் எஸ்ஐ தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த குண்டுவெடிப்பு தாக்குதலில் காணாமல் போனதாக கூறப்பட்ட சென்னையைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் ‌‌உயிரிழந்துவிட்டதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகரில் கடந்த 22ம் தேதி விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் பலியானார்கள். 2 இந்தியர்கள் உள்பட 300–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
இந்த தாக்குதலை தொடர்ந்து, பிரசல்ஸ் நகரில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் (31) காணாமல் போய்விட்டார். மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், புராஜெக்ட் பணிக்காக 4 ஆண்டுகளுக்கு முன் பிரசெல்ஸ் சென்றார். ராகவேந்திரனின் மனைவி சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் ராகவேந்திரன் சென்னைக்கு வந்து இருந்தார். அவருடைய தாயார் அன்னபூரணி மும்பையில் வசித்து வருகிறார். குண்டு வெடிப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் ராகவேந்திரன் ‘ஸ்கைப்’ மூலம் தனது தாயாருடன் பேசி இருக்கிறார். அப்போது, தான் பணிக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார்.

ஆனால், குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு ராகவேந்திரனுடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால், அவர் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு குழுக்களை அனுப்பி அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரசெல்ஸ் உள்ள இந்திய தூதரகம் மும்முரமாக ஈடுபட்டது.

இந்த நிலையில், ராகவேந்திரன் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானதை பெல்ஜியம் அதிகாரிகள் உறுதி செய்து இருப்பதாக அங்குள்ள இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. தாக்குதலில் படுகாயம் அடைந்து இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்ட போது, ராகவேந்திரனின் உடலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று பெல்ஜியம் அதிகாரிகள் தெரிவித்ததாக தூதரக அதிகாரிகள் கூறினர். டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரும் இந்த தகவலை உறுதி செய்தார்.

ராகவேந்திரன் மாயமானதை தொடர்ந்து அவரது தந்தை கணேசன், தாயார் அன்னபூரணி, தம்பி சந்திரசேகர் ஆகியோர் பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் நகருக்கு சென்றனர். அவர்களிடம் ராகவேந்திரனின் உடல் ஒப்படைக்கப்படும் என்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறினர். அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் ராகவேந்திரனின் உடல் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.