இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு போராட்டங்களைத் தொடர்ந்து விளைநிலத்தையும் நிலத்தடி நீரையும் காப்பாற்ற நெடுவாசலிலும் கதிராமங்கலத்தில் இடைவிடாத போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நெடுவாசலும் கதிராமங்கலமும் பதற்றத்தின் உக்கிரத்தில் இருந்தபோதும் தமிழக அரசும் மத்திய அரசும் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் ஒடுக்குவதிலேயே குறியாக இருப்பதால் பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, ஈழத் தமிழர் ஆதரவு போன்றவைகளுக்காகத்தான் தமிழகத்தில் பிரமாண்ட போராட்டங்கள், முழு அடைப்புகள் என நடந்தன. நீண்டகாலத்துக்குப் பின்னர் ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக்காக உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் புதிய புரட்சி அரங்கேறியது.
அலங்காநல்லூர் வாடிவாசலில் தொடங்கிய இந்த புரட்சி சென்னை மெரினாவில் இரவு பகல் பாராமல் பல லட்சம் பேரை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு உரிமை மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஹைட்ரோகார்பன், மீத்தேன் எரிவாயு திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நெடுவாசலில் தொடங்கிய இந்த போராட்டம் டெல்டா மாவட்டங்களில் விஸ்வரூபமெடுத்தது.
பதறிப் போன மத்திய அரசு நெடுவாசல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது மக்கள் விருப்பம் இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை திணிக்கமாட்டோம் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் வழக்கம்போல மத்திய அரசு உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டது. இதனால் நெடுவாசல் மக்கள் களத்துக்கு வந்தனர். கடந்த 2 மாதங்களாக நெடுவாசலில் நாள்தோறும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கதிராமங்கலம் கிராமத்திலும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக எண்ணெய் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டது. இந்த கசிவை முன்வைத்து போராட்டங்கள் வெடித்தன.
இப்போராட்டத்தை ஒடுக்குவதாக நினைத்து எண்ணெய் கசிவில் தீ வைத்தது போலீஸ். இதையே சாக்காக வைத்து மக்கள் மீது தடியடி நடத்தி ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ். இதைத் தொடர்ந்து போராட்டத்துக்கு தலைமை தாங்கும் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது தமிழக அரசு.
நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் தொடரும் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் இப்படி ஒடுக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிடுவதுதான் ஜனநாயகமா? இப்படியான ஒடுக்குமுறைகள் நீடித்தால் எத்தனை கிராமங்கள் போராட்ட களங்களாகுமோ? என அச்சம் தெரிவிக்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.