Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

வளைந்துகொடுக்காத ஐ.பி.எஸ். அதிகாரிகள் அரிதிலும் அரிது: ஆட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு !


===பசந்த் ராத்===

ஸ்ரெஸ்தா தாகூர் என்னும் ஐபிஎஸ் அதிகாரி, உத்தரப்பிரதேச காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தவர், பாஜகவினரின் அடாவடித்தனங்களை வலுவாக எதிர்த்துநின்றதும், அது சமூக ஆர்வலர்களால் காட்சியாக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வெகுவேகமாகப் பரவியதும், பின்னர் அவர் நேபாளத்தின் எல்லைப்பகுதிக்கு மாற்றல் செய்யப்பட்டதும், நாம் அனைவரும் அறிவோம்.

இதுபோல் முதுகெலும்புடன் செயல்படக்கூடிய ஐபிஎஸ் அதிகாரிகள் நாட்டில் அரிதிலும் அரிதாகும். நாட்டில் இன்றையதினம் உள்ள அரசியல் நிலைமைகளில் ஐபிஎஸ் அதிகாரிகளில் பலர் முதுகெலும்பற்றவர்களாக மாறிப் போய்விட்டார்கள். அவர்களை யாரும் எதுவும் கேட்கக்கூடாது. கேட்டாலும் அவர்களிடம் இருந்து எவ்விதமான பதிலும் வராது.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் உலகம் ஒரு தனி உலகம். ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியானவுடனேயே எல்லாவிதமான சுகபோகங்களும் தனக்குக் கிடைத்துவிட்டதுபோன்ற உணர்வும், எவருக்கும் எதற்கும் பதில்சொல்ல வேண்டிய தேவையில்லை என்ற எண்ணமும் ஏற்பட்டுவிடுகிறது.
நாட்டில் வன்முறை தலைவிரித்தாடுகிறதே, நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், நாட்டின் மக்கள் தொகை 130 கோடி.

நாங்களோ வெறும் 4 ஆயிரம். என்ன செய்ய முடியும் என்று சமாளிக்கும் விதத்தில் பதில் சொல்கிறார்கள். இவ்வாறு கூறி சட்டத்தின் ஆட்சியை நாட்டில் நிலைநாட்ட முடியாமல் போவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பது போல் கூறி தப்பித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். மேலும், மதரீதியான வன்முறை வெறியாட்டங்கள் என்பது நாட்டில் புதிதான ஒன்றுமல்ல என்றும் கூறித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.

மேலும் அவர்கள் மதரீதியான வன்முறை வெறியாட்டங்கள் திட்டமிடப்பட்ட ஒன்று என்றோ, முன்னதாக உணரக்கூடியவை என்றோ அல்லது முழுமையாகத் தடுக்கக்கூடியவை அல்ல என்றோ கூறுகிறார்கள். மேலும் நடைபெறும் வெறியாட்டங்களுக்கு காவல்துறை உட்கையாகவோ, உடந்தையாக இருப்பது கிடையாது என்றும் சொல்லி அவர்கள் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் கையாலாகாதவையாக இருக்கலாம், ஆனால் வெறியர்களுக்கு உடந்தையாக இருக்காது என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

இவ்வாறு இவர்கள் கூறும் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது. இவர்கள் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் கூற்றை நான் மறுக்கிறேன். நானும் ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் தனிப்பட்டமுறையில் எவர்மீதும் எவ்விதமான காய்தல் உவத்தலுமின்றி இதனை நான் கூறுகிறேன்.

நாட்டில் காவல்துறை கட்டமைப்பு என்பது உயர்மட்ட அளவில் அதிக அளவிலான அதிகாரிகளின் எண்ணிக்கையுடன் சமாளிக்கமுடியாத அளவிலான ஒன்றாக மாறிப் போயிருக்கிறது. இது மாற்றி அமைக்கப்பட வேண்டியது.

இன்றைய அவசியத் தேவையாகும். நாடுமுழுதும் எடுத்துக்கொண்டோமானால், காவல் தலைமையகங்கள் நூற்றுக்கணக்கான மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உருப்படியான பணி எதையும் தர முடியாத நிலையிலேயே இருக்கின்றன. டைரக்டர் ஜெனரல், கூடுதல் டைரக்டர் ஜெனரல், இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலைகளில் எவ்வித வேலையுமின்றி இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏகப்பட்ட ஜெனரல்கள்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் அரசியல் எஜமானர்களுக்கு சேவகம் செய்தால் போதும், அவர்களுக்கு சேவகம் செய்வதே தங்களின் சிறப்புப்பணி என்பது போன்ற மனநிலைக்குத் தயாராகி இருக்கிறார்கள். இவர்களின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான நேர்மையான இளம் போலீஸ் அதிகாரிகளிலும் பலருக்கு உருப்படியாக பணி எதுவும் தரப்படவில்லை.

காரணம், அவர்களை முக்கியமான பணிகளில் அமர்த்திவிட்டு, அரசியல் எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக உயர் போலீஸ் அதிகாரிகள் தயாராக இல்லை. அவர்களை எதிர்த்துநிற்கக் கூடிய அளவிற்கு அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. எனவே நாங்கள் வெறுமனே 4 ஆயிரம் பேர்கள், நாட்டு மக்களோ 130 கோடி பேர் என்பதெல்லாம் நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றும் வாதமாகும்.

சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தத் தவறியது யார் பொறுப்பு?

1984ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்கள் படுகொலைசெய்யப்பட்டபோது, அவர்களைப் பாதுகாக்கத் தவறியதற்கு யார் பொறுப்பு? அப்போது அதிகாரப்பூர்வமாகவே இறந்தவர்களின் எண்ணிக்கை 2,733 ஆகும். குருத்வாராவில் தங்கியிருந்த சீக்கியர்களை அங்கிருந்து விரட்டி அடித்து அவர்களை, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் தலைமையில் செயல்பட்ட கும்பல் மூலம் படுகொலைக்கு உள்ளாக்குவதற்கு காவல்துறையே வசதி செய்து கொடுத்தது.

பல இடங்களில் காவல்துறையினர் சீக்கியர்களை நிராயுதபாணியாக்கியதற்குப் பின்னர், கலகக் கும்பலால் அவர்கள் தாக்குதல்களுக்கு ஆளாயினர். அப்போது தில்லியின் அனைத்து காவல்துறை அதிகாரிகளுமே ஐபிஎஸ் அதிகாரிகள்தான். இவர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான், மாக்ஸ்வெல் பெரைரா என்பவர்மட்டும்தான் சீக்கியர்களுக்காக உறுதியுடன் நின்று, காவல்துறை அதிகாரிகளிலேயே ஒரு தலைவராக தலைநிமிர்ந்து நின்றார். மற்ற அனைத்து அதிகாரிகளுமே ஆட்சியிலிருந்தவர்களுக்கு அடிபணிந்து, போலீஸ் நிர்வாக எந்திரத்தையே செயல்படவிடாது ஸ்தம்பிக்க வைத்திருந்தார்கள்.

2002இல் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் படுகொலை நடைபெற்றபோது அவர்களைக் காக்கத் தவறியதற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? 790 முஸ்லிம்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். 2,500க்கும் மேற்பட்டோர் கொடுங்காயம் அடைந்தார்கள். 223 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு அக்கிரமங்கள் நடைபெற்ற சமயத்தில், இரண்டே இரண்டு அதிகாரிகள் – ராகுல் சர்மா மற்றும் ஆர்.பி. ஸ்ரீகுமார் தவிர – மற்ற அனைவரும் ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு தங்கள் கைகளிலிருந்த பேப்பர்வெயிட்டுடன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

ராகுல் சர்மாவும், ஆர்.பி. ஸ்ரீகுமாரும் மட்டும்தான் தாங்கள் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளும்போது உறுதிஎடுத்துக்கொண்டபடி அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளுக்குச் சற்றும் நழுவாது சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடவும் துணிந்து செயல்பட்டார்கள். நெருக்கடி சமயத்தில் கலகத்தில் ஈடுபடும் கயவர்களை காவல்துறையினர் எப்படிச் சமாளிக்க முடியும் என்பதற்கு ராகுல் சர்மா ஒரு முன் உதாரணமாகத் திகழ்ந்தார்.

கலகம் புரிந்துவந்த இந்துமத வெறியர்கள் பவநகரில் ஒரு மதராசா மீது தாக்குதல் தொடுக்க முனைந்தபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம் தனக்கு மூத்த அதிகாரிகளை கதிகலங்க வைத்தார். அதேபோன்று ஆர்.பி. ஸ்ரீகுமார் அவர்கள் உளவுத்துறையின் காவல்துறைத் தலைவராக இருந்தபோது, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த முதல் நபராகத் திகழ்ந்தார். இவரை ஆட்சியாளர்கள் டிஸ்மிஸ் செய்யும் அளவிற்குச் சென்றார்கள். எனினும் இவர் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு, ஓய்வூதியரானார்.

காவல்துறை அதிகாரிகளின் கண்முன்னாலேயே படுகொலைகள்

• 1968 டிசம்பரில் தமிழ்நாட்டில், கீழத்தஞ்சை மாவட்டத்தில், கீழவெண்மணியில் 44 பேர் குடிசைக்குள் அடைக்கப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்பட்டு, கொல்லப்பட்டார்கள்.

• 1980இல் உத்தரப்பிரதேசம், மொராதாபாத்தில் 400 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 1984 மே மாதத்தில் மகாராஷ்ட்ரா, பிவந்தியில் 278 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 1987 மே மாதத்தில் உத்தரப்பிரதேசம், ஹசிம்புராவில் 42 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 1989 அக்டோபரில் பீகார், பகல்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள்.

• 1991இல் ஆந்திரப்பிரதேசம், குண்டூரில் 13 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 1996 ஜூலையில் பீகார், போஜ்பூர், பதானி தோலாவில் 21 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 1997 டிசம்பரில் பீகார், லக்ஷ்மண்பூர் பதேயில் 58 பேர் கொல்லப்பட்டார்கள்.

• 2006 செப்டம்பரில் மகாராஷ்டிரா கயல்லாஞ்சியில் மகர் இனத்தைச் சேர்ந்த பூட்மாங்கே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் வீதியில் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, பின்னர் வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்டார்கள்.

• 2013 செப்டம்பரில் உத்தரப்பிரதேசம் முசாபர்நகரில் 62 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த அக்கிரமங்கள் நடைபெற்ற சமயங்களில் காவல்துறைத் தலைமை அதிகாரிகளாக, ஐபிஎஸ் அதிகாரிகள்தான் இருந்தார்கள். இவர்கள் கையாலாகாதவர்களாக இருந்தது மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடிக்க இலாயக்கற்றவர்கள் என்பதையும் மெய்ப்பித்தார்கள். எனினும் இவ்வாறு தங்கள் கடமையைச் செய்யத்தவறிய இவர்களுக்கு எதிராக எவ்விதமான தண்டனையும் கிடையாது. இவ்வாறுதான் இன்றைய ஐபிஎஸ் உலகம் உல்லாசமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாட்டின் பல மாநிலங்களிலும் மதரீதியாக, இனரீதியாக, சாதி ரீதியாக

நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்படுகிறார்கள். இத்தகைய அட்டூழியங்களைப்புரிந்திடும் கலகக் கும்பல்கள், காவல்துறைத் தலைமையின் கள்ளத்தனமான ஒத்துழைப்பு இல்லாமல் இவற்றைச் செய்திட முடியாது. 1984இல் தில்லியில் நடைபெற்ற வன்முறையாக இருந்தாலும் சரி, குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களானாலும் சரி இதற்கு விதிவிலக்கல்ல. இங்கே ஒரு மாக்ஸ்வெல் பெரைரா, அங்கே ஒரு ராகுல் சர்மா விதிவிலக்காகும். அநேகமாக மற்ற அனைவருமே கலகக் காலிகளுக்குத் துணை போனவர்கள்தான்.

சுதந்திர இந்தியாவில் தங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியாமல் தலைநிமிர்ந்து நேர்மையாகச் செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் அநேகமாகக் கிடையாது. தாங்கள் ஓய்வு பெற்றபின் தங்களுக்கு ஆட்சியாளர்களிடமிருந்து கிடைக்கும் சுகபோகங்களைத் துச்சமெனத் தூக்கிஎறிந்த அதிகாரிகள் அநேகமாக எவரும் இல்லை. கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவுவது எளிது. ஆனால் நேர்மையாக நடந்துகொண்ட தன்கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளை, அரசியல் கொடுங்கோலர்களிடமிருந்து காப்பாற்றுவது கடினம்.

இதனை மாற்ற வேண்டியது அவசியம். இது மாற்றப்பட்டாக வேண்டும். அதற்கு இதுவே தருணம். இந்த நாட்டில் காவல்துறைத் தலைவர்கள் வீணாகக் காலம் கழிப்பதை நிறுத்திக்கொண்டு தங்கள் நிர்வாகத்திறமையைக் காட்டும் தருணம் வந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

இந்த ஆண்டு ஏப்ரலில் உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பினை இது தொடர்பாக அளித்திருக்கிறது. ‘‘மாநிலத்தின் முதல் நிர்வாகத் தலைவர் என்ற முறையில் தலைமைச் செயலர் பங்களிப்பிற்கும், மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் என்ற முறையில் காவல்துறை அதிகாரியின் பங்களிப்பிற்கும் வித்தியாசம் உண்டு.

அவர்கள் இருவரது பங்களிப்புகளையும் சமமாகப் பார்க்க முடியாது. தலைமைச் செயலர், முதலமைச்சரின் நம்பிக்கையை இழந்தாலோ அல்லது முதலமைச்சரின் புரிந்துணர்வுடன் செயல்படமுடியவில்லை என்றாலோ, தலைமைச் செயலரை நீக்க முடியும். அரசமைப்புச்சட்ட ஷரத்துக்கள் அல்லது சில முக்கியமான விதிகள் மீறப்பட்டிருந்தால் ஒழிய அவ்வாறு நீக்கியதை எவரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், காவல்துறைத் தலைவர் பணியை அவ்வாறு செய்திட முடியாது.’’

காவல்துறைத் தலைவர்கள் பயணிகள் போல் நடந்துகொள்ள வேண்டும் என்று பதினோராவது கட்டளை எதுவும் கூறவில்லை. முதுகெலும்பற்ற காவல்துறைத் தலைவர்களை உண்மையான காவல்துறைத் தலைவர்களாக உயர்த்தக்கூடிய விதத்தில் நல்லுறுதிமிக்க கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகள் உலகம் இதனை நினைவுகூர்தல் தேவை. இல்லையேல், இன்றைக்கு ஸ்ரெஸ்தா தாகூருக்கு நடந்தது, நாளை வேறொரு நேர்மையான அதிகாரிக்கு நடக்கும்.

(கட்டுரையாளர், 2000ஆம் ஆண்டு அணியைச் சேர்ந்த
ஜம்மு-காஷ்மீர் மாநில ஐபிஎஸ் அதிகாரி)
தமிழில்: வீ. அஞ்சான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.