July 20, 2017
நீட்டுக்கு எதிராக மனிதச்சங்கிலி உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்: திமுக மா.செ. கூட்டம் !
நீட் தேர்வுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு:
தீர்மானம் 1: பவள விழா காணும் “முரசொலி!”
10.8.1942-ல் துவங்கப்பட்ட கழகத்தின் போர்வாளும், பாதுகாப்புக் கேடயமும், கலைஞரின் மூத்த பிள்ளையுமான “முரசொலி” 75 ஆண்டு காலப் பயணத்தை நிறைவு செய்து பவள விழா காண்கிறது. 18 வயதில் தலைவர் கலைஞர் அவர்களால் முதல் வெளியீடாக கையெழுத்து ஏடாக வந்த முரசொலி கழகத்தின் உடன்பிறப்பாகவே நம் நாடி நரம்புகளோடு பின்னிப் பிணைந்து பெருமையோடு நடைபோட்டுக் கொண்டிருப்பதை நாம் உணர்வோம்.
கலைஞரின் அனல் பறக்கும் “அரசியல் கட்டுரைகள்”, உணர்ச்சிமிகு “உடன்பிறப்பு கடிதம்”, “மறவன் மடல்” நகைச்சுவையுடன் கருத்துச் செறிவும் கொண்ட “ஆண்டி- போண்டி” - பல திராவிட இயக்க எழுத்தாளர்களின் பொருள் பொதிந்த கட்டுரைகள் என்று திமுகவின் பிரகாசமான கொள்கைப் பிரச்சார ஏடாக அனைவரது கைகளிலும் தவழ்ந்து கொண்டிருக்கும் முரசொலி நிலைத்து நின்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.
“முரசொலி”யின் பவள விழாவினை ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் சீரும் சிறப்புமாகக் “முரசொலி அறக்கட்டளை” சிறப்பாக கொண்டாடுவதற்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் மாவட்டங்களில் இருந்து கழக உடன்பிறப்புகளுடன் பெருமளவில் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்திட இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2: நீட் தேர்வுக்கு விதிவிலக்கு கோரி மனித சங்கிலிப் போராட்டம்!
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு “நீட்” என்ற நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாகத் தமிழகத்தின் மீது திணித்து இன்றைக்கு கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்துள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக 1.2.2017 அன்றே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் அதிமுக அரசு உரிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது.
22.6.2017 அன்று தமிழக மாணவர்களின் நலனை காக்கப் போகிறோம் என்று கபட நாடகம் போட்டு ஒரு அரசாணையை வெளியிட்டு, அந்த அரசாணையும் இப்போது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் மாநிலப் பாடதிட்டத்தில் பிளஸ் டூ படித்த 4.2 லட்சம் மாணவர்களுக்கான 85 சதவீத இடங்கள் மருத்துவக் கல்லூரிகளில் பறி போயிருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய 4,675 மாணவர்கள் மட்டுமே செல்லும் நிலை ஏற்பட்டு, தமிழகத்தில் சமூக நீதிக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதுடன் மாணவர்களிடையே பாகுபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு “விதிவிலக்கு” அளித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்ற 27-7-2017 மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் “மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை” அறவழியில் அமைதியான முறையில் நடத்துவது என்று இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும், சமுதாய அமைப்புகளும், மாணவ- மாணவியரும் பெரும் அளவில் கலந்து கொண்டு தமிழகத்தின் ஒருமித்த உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3: குண்டர் சட்டத்தை ரத்து செய்க!
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டம் நூறு நாட்களைத் தாண்டி விட்டது. கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் குழாய்கள் நெல்வயல்களில் எண்ணைக் கசிவை ஏற்படுத்தி ஒரு புறம் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு; இன்னொருபுறம் அதை எதிர்க்கும் கிராம மக்கள் மீது பொய் காரணங்களைக் கூறி போலீஸ் தடியடி நடத்துவது, பொய் வழக்குகளைப் பதிவு செய்வது, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துக் கொண்டு ஜாமினில் விடுவிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருவது போன்ற அராஜகச் செயல்களைக் அத்துமீறி செய்து, தமிழகக் காவல்துறை தகுதியான தலைமையின்றி தடுமாறுகிறது.
மெரினாவில் மெழுகுவர்த்திப் போராட்டம் நடத்தியதற்காகவும், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காவும் மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது, “இயற்கையை காப்போம்” என்று துண்டு பிரசுரம் விநியோகித்ததற்காக சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது என்று காவல்துறை அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது மட்டுமின்றி, பா.ஜ.க.வை விமர்சிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த “குதிரை பேர” ஆட்சி இவர்கள் மீதெல்லாம் கண்மூடித்தனமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதற்கு இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மாநில நலன் கருதி நடைபெறும் ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை நசுக்கும் வகையில் குண்டர் சட்டத்தை ஏவுவதை உடனடியாக நிறுத்தி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள கதிராமங்கலம் மக்கள் மற்றும் பேராசிரியர் ஜெயராமன், சேலம் மாணவி வளர்மதி, மே-17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரை உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசை,
இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மக்கள் அச்சம் தெரிவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4: சட்டமன்றப் பணிக்குப் பாராட்டு!
நடந்து முடிந்த சட்டமன்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் அடங்கிய வரவு-செலவுத் திட்டக் கூட்டத் தொடரில் மக்கள் சந்தித்து வரும் அன்றாட பிரச்சினைகள், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட படுவீழ்ச்சி, குதிரை பேர அரசின் “வாக்குக்குப் பணம்” “நம்பிக்கை வாக்குக்குப் பணம்” “குட்கா வடிவில் கேன்சருக்குப் பணம்” “டெண்டருக்குப் பணம்” நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பணம்” குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் கடிதம் அனுப்பியது, முதலமைச்சர் மீது வழக்கு தொடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, மாநிலத்தின் இரு உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் மீது விசாரிக்க வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது, ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் போராட்டம், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ சங்கங்களின் போராட்டம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சரக்கு மற்றும் சேவை வரியால் (ஜி.எஸ்.டி.) மக்கள் அடைந்துள்ள பாதிப்புகள், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த - மாநிலம் சார்ந்த பிரச்சினைகளை ஆணித்தரமாகச் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி, ஆக்கபூர்வமான விவாதங்களை முன் வைத்து, ஜனநாயகக் கடமையினை நிறைவளித்திடும் வகையில் நேர்த்தியான முறையில் ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவருக்கும், துணைத் தலைருக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 5: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக!
கடும் வறட்சியாலும், மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக ஜூன் 12-ம் தேதி விவசாயத்திற்கு காவிரிநீர் திறக்காத காரணத்தாலும் விவசாயம் பொய்த்துப் போய் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றமே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டும், அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றதற்கு இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
ஆகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது, கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவது, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம், வறட்சி காலத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று இம்மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
நீட்டுக்கு எதிராக மனிதச்சங்கிலி உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்: திமுக மா.செ. கூட்டம் !
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.