Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2017

ஆவணப்பட இயக்குநர் 'கக்கூஸ்' திவ்யபாரதி மதுரையில் கைது: 2009-ல் பதிவான வழக்கில் நடவடிக்கை


கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியை, 2009-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் அடிப்படையில் போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர்.

மதுரையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. சமூக செயற்பாட்டாளர். துப்புரவு பணியாளர் நலனுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார். சென்ற ஆண்டு கக்கூஸ் என்ற பெயரில் துப்புரவு பணியாளர்கள் சந்தித்து வரும் கொடுமைகளை விவரித்து ஆவணப்படம் தயாரித்தார். இப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டது. கேரளத்தில் கக்கூஸ் ஆவணப்படத்துக்காக திவ்யபாரதிக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் மதுரை மதிச்சியம் போலீஸார் திவ்யபாரதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரை மதுரை 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 8 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் சக்திவேல் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திவ்யபாரதி 2009-ல் மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றார். இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) மாணவர் பிரிவில் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி மன்னர் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவரை பாம்பு கடித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆதிதிராவிட மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் திவ்யபாரதி தலைமையில் அரசு மருத்துவமனைக்கு உள்ளேயும், வெளியேயும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மதிச்சியம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால் திவ்யபாரதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட் அடிப்படையில் திவ்யபாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே திவ்யபாரதியை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஜாமீன் தொடர்பாக மதியம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

’இதுபோன்ற நடவடிக்கைகள் இயல்புதான்’

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திவ்யபாரதி, ''தொடர் அரசியல் செயல்பாடுகளில் இருப்பவர்களை முடக்குவதற்காக இதுபோன்ற வழக்குகள் போடப்படுகின்றன. சமூக செயல்பாட்டாளர்களுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் இயல்புதான்'' என்று தெரிவித்தார்.

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகித்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சேலம் மாணவி வளர்மதி, மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி ஆகியோரின் கைதுக்கு எதிராகத் திவ்யபாரதி தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.