Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2017

GST-யால் நடுத்தர வர்கத்தினர் சந்திக்க உள்ள பிரச்சனைகள் என்னென்ன..?


தற்போதுள்ள உற்பத்தி வரி, விற்பனை வரி, சேவை வரி ஆகியவற்றிற்கு மாற்றாக GST வரி நாடு முழுவதும் நாளை அமல்படுத்தப்பட உள்ளது. அனைத்து பொருள் உற்பத்தியாளர்களும், சேவை வழங்குவோரும் GST-க்கு ஆட்படுவதால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் அதன் தாக்கம் இருக்கும் என்பது நாம் நினைவில் வைக்க வேண்டிய ஒன்று.

அந்த வகையில் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தினரின் மீதும் GST-யின் தாக்கம் தவிர்க்க இயலாத ஒன்றாகும். ஒவ்வொருவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பால், பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்களுக்கு GST வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி, மாவு வகைகள், பிரெட், செய்திதாள்கள், கைவினை பொருட்கள், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றிற்கும் வரி கிடையாது. கல்வி, சுகாதாரம், ஆன்மீக பயணம் போன்றவற்றிற்கும் வரி இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பின் கீழ் வருகின்றன.

நுரைக்கும் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் வகைகள், வாசைன திரவியங்கள், வாஷிங் மெஷின், வாக்வேம் கிளீனர், அழகு சாதனப் பொருட்கள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ மொபைல்கள் ஆகியன அதிகபட்ச அளவான 28 சதவீத வரி விதிப்பின் கீழ் வருகின்றன.

பொட்டலமிடாத உணவு தானியங்கள், பால், வெல்லம் உள்ளிட்ட பொருட்களுக்கு GST-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சோப்பு மற்றும் குளியலறையில் பயன்படும் இதர பொருட்களுக்கு 18 சதவீதம் GST விதிக்கப்பட்டுள்ளது. உப்பு, வெல்லம், பனை வெல்லம், முட்டை, பொட்டலமிடாத உணவு தானியங்கள், பச்சை காய்கறிகள், பிராண்ட் அல்லாத இயற்கை தேன், கண் மை, குழந்தைகளின் உபயோகத்திற்கான ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டும் புத்தகங்களுக்கு முழுவரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சர்க்கரை, தேயிலை, வறுத்த காப்பி கொட்டை, சமையல் எண்ணெய், ஆடை நீக்கிய பால் மாவு, குழந்தைகளுக்கான பால் பொருள் உணவு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை அகர்பத்தி, தென்னம் பாய், வீட்டு பயன்பாட்டிற்கான LPG பொருட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வெண்ணெய், நெய், பாதாம் பருப்பு, பழச்சாறு, ஊறுகாய், ஜாம் ஜெல்லி, குடை, கைப்பேசி உள்ளிட்ட பொருட்களுக்கு 12 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கூந்தல் தைலம், பற்பசை, சோப்பு, பாஸ்தா, சோளப் பொரி, ஐஸ்கிரீம், குளியல் அறை பொருட்கள், கணினி, பிரிண்டர் போன்ற பொருட்கள் 18 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் அரிசிக்கு முழு வரிவிலக்கு என்ற நிலை மாறி, GST-யில் பிராண்டட் அரிசிகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பிராண்டட் அரிசி வாங்கும் நடுத்தர மக்களுக்கு சுமையாக மாறும். அல்லது அவர்களையும் நான் பிராண்டட் அரிசி வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளும்.

ஏசி பயன்பாடு, வார இறுதி நாட்களில் ஓட்டல்களில் சாப்பிடுவது, தியேட்டர்களுக்கு சென்று திரைப்படம் கண்டு களிப்பது, தீம் பார்க்குகளில் பொழுது போக்குவது, சுற்றுலா செல்வது போன்றவை நடுத்தர மக்களுக்கு இனி கூடுதல் செலவை ஏற்படுத்தும். ஒட்டு மொத்தத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருந்து நடுத்தர வாழ்க்கையை எட்டிப்பிடித்த மக்கள், இன்னும் சற்று மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு முன்னேறுவதை, GST வரியானது இயலாத ஒன்றாக்கும் என்றே கருதப்படுகிறது.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.