Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2017

கல்பனா சாவ்லா மரணத்தில் மறைந்துள்ள மர்மங்கள் பற்றி தெரியுமா?


விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பனா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டினார் கல்பனா சாவ்லா.
41வது வயதில் உலக மக்களின் நட்சத்திரமாகிப் போன ஒரு இந்தியப் பெண் வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு:
கல்பனா சாவ்லா அவர்கள், இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் ஜூலை 1, 1961 ஆம் ஆண்டு, பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
கல்பனா சாவ்லா, தனது ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார். பின்னர், 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.
விண்வெளி பயணம்:
இவர் முனைவர் பட்டம் பெற்ற உடனேயே நாசா இவரை வரவேற்றது. 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) இல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
1997 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் வெண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.
கொலம்பியா விண்கல நிகழ்வு:
முதல் விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா சாவ்லா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார். 2000 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளகூடிய இந்த பயணம் பலதரப்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது.
பின்னர், 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) என்ற இரண்டாவது பயணம் விண்ணை நோக்கி தொடங்கியது.
கல்பனாவின் இழப்பு
விண்கலம் விண்ணை நெருக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது விண்கலத்தின் வெளிப்புறம் இருந்த ஒரு பகுதி உடைந்து விண்கலத்தின் இடது புற இறக்கையில் பலமாக மோதி மிக பெரிய துளையை ஏற்படுத்தியது. பாதிப்புகள் பெரிதாக இருந்தும் கூட அவர்கள் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தனர். இருப்பினும் அவர்களால் விண்கலத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய இயலவில்லை.
இதை பற்றிய செய்து நாசாவிற்கு அனுப்பப்பட்டாலும் அந்த குறைந்த நேரத்தில் மற்றொரு விண்கலம் அமைத்து அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டுவருவதென்பது முடியாத காரியம் என்பதால் நாசாவும் உதவ முடியாத நிலையில் இருந்தது.
வேறு வழி இன்றி 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய அவர்கள் சென்ற அந்த விண்கலம், பூமியை அடைய 16 நிமிடங்களே இருந்த நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வெடித்துச் சிதறியது. கல்பனா சாவ்லா உள்பட ஏழு விலைமதிப்பற்ற விண்வெளி வீரர்களும் பலியாகினர்.
சாதனை
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து, பலர் வியக்கும்படி தன் கனவுகளை நனவாக்கி வாழ்ந்து காட்டியவர் கல்பனா சாவ்லா. பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய அவர், இந்தியாவிற்கு உலகப் புகழ் சேர்த்தவர் என்றால் அது மிகையாகாது. ‘கனவுகளைக் கண்டு அந்த கனவுகளை நனவாக்குவதற்கு விடா முயற்சியோடும், முழுமனதோடும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’ என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தி சென்ற வீரப் பெண்ணை நாமும் போற்றுவோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.