Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2017

சசி குடும்பத்துக்கு உண்மையிலேயே நம்பிக்கை துரோகம் செய்தது யார்? ஓபிஎஸா ? எடப்பாடியா?


சசிகலாவின் குடும்பத்துக்கு உண்மையிலேயே நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறிய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்தார். ஆனால் எடப்பாடி தரப்போ தற்போது சசி குடும்பத்தை ஓரம் கட்டி விட்டது.
தமிழக முதல்வர், அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்த 30 நாட்களுக்குள்ளாகவே தன்னை அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்துக்கொண்டார் சசிகலா.
நடை உடை பாவனை என அனைத்திலும் ஜெயலலிதாவைக் காப்பியடித்த சசிகலா ஆட்சிக் கட்டிலில் அமரவும் ஆசைப்பட்டார். இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து சட்டசபை தலைவராக தேர்வாகிக் கொண்டார்.
அப்போதைய முதல்வர் ஓபிஎஸிடம் இருந்து ராஜினாமா கடிதமும் வாங்கப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த ஓபிஎஸ் திடீரென போய் ஜெ நினைவிடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொண்டார்.
தியானத்திற்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தன்னை மிரட்டி சசிகலா குடும்பத்தினர் ராஜினாமா கடிதம் வாங்கியதாக கூறினார். மேலும் பல்வேறு பரபர குற்றச்சாட்டுகளை சசிகலா குடும்பத்தினர் மீது அவர் கூறினார்.
இதனால் கொதித்துப்போன சசிகலா தரப்பு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியது. இதையடுத்து முதல்வராகியே தீர வேண்டும் என்ற சசிகலாவின் ஆசையில் லோடு லோடாக மண்ணைக் கொட்டியது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
4 ஆண்டு சிறைவாசம் உறுதியானதால் தான் திரும்பி வரும் வரை ஆட்சியை பாதுகாக்கும் நம்பிக்கைக்குரிய அடிமையை தேடினார் சசிகலா. குடும்ப உறுப்பினர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விவகாரம் பூதாகரமாகிவிடும் என்பதால் எடப்பாடியை முதல்வராக தேர்வு செய்தார் சசி.
பல்வேறு கூவத்தூர் கூத்துக்களுக்கிடையே முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு கட்டத்தில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனையே எதிர்க்க ஆரம்பித்தார். இந்நிலையில் முதல்வராக 100 நாட்களை கடந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளனர்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட முதல்வரும் அமைச்சர்களும் இப்படி அறிவித்திருப்பது நிச்சயம் சசிகலாவுக்கு பேரிடியாக இருந்திருக்கும். ஓபிஎஸ் நம்பிக்கை துரோகம் செய்ததாக எடப்பாடிக்கு முதல்வர் பதவியை கொடுத்த சசிகலா, சிறை வாசம் முடிந்து ஊர் திரும்பும் வரை தனது நம்பிக்கையை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தார்.
ஆனால் சசிகலா சிறைக்கு சென்று முழுவதுமாக 6 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் எடப்பாடியும் அவரது தலைமையிலான அமைச்சர்களும் தங்களின் வேலையை காட்டிவிட்டனர். தற்போது எடப்பாடிக்கு துதிபாடும் பல அமைச்சர்களும் ஓபிஎஸை நம்பிக்கை துரோகி என வசைபாடியவர்கள்தான்.
சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தது யார்? ஓ.பன்னீர்செல்வமா எடப்பாடி பழனிச்சாமியா? ஆனால் ஒன்று மட்டும் உண்மை.. இவர்கள் எல்லோருமே சேர்ந்து தமிழக மக்களுக்கும், ஜெயலலிதாவுக்கும் மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.