Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2017

நடத்திப்பார்..! 'தடுத்துப்பார்..!' மன்னார்குடியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்குமா?


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என அணிகள் பிரிந்துகிடக்க... புதிதாக நான்காவது அணியாகத் திவாகரன் அணி முளைத்து வருகிறது. தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையேயான பனிப்போர், மராத்தான் ஓட்டத்தைப்போலத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சசிகலாவின் தாய் பூமியான மன்னார்குடியில், டி.டி.வி.தினகரன் தலைமையேற்க வேண்டிப் பொதுக்கூட்டத்தைத் தினகரன் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துவருகிறார்கள். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி தினகரன் தரப்பினர் மன்னார்குடி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், காவல் துறையினர் இதுவரை பொதுக்கூட்டத்துக்கான அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் கூட்டம் நடைபெறுமா, நடைபெறாதா என்ற பட்டிமன்றப் பேச்சு அ.தி.மு.க-வினரிடையே றெக்கை கட்டிப் பறக்கிறது.
அனுமதி அளிக்கவில்லை என்றாலும் தினகரன் ஆதரவாளர்கள் கட்சிக் கொடி கட்டுவது, ஃப்ளெக்ஸ் வைப்பது, மேடை அமைப்பது என அனைத்து வேலைகளையும் தடபுடலாகச் செய்து வருகிறார்கள். ஆனால், திவாகரன் ஆதரவாளர்களோ, யாருடைய அனுமதியும் இல்லாமல் எப்படிக் கூட்டத்தை நடத்த முடியும், கூட்டத்தை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம் எனச் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
இதுகுறித்து, மன்னார்குடி ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ''அ.தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பவர்கள் சசிகலா குடும்பத்தினர்கள்தான். ஓ.பி.எஸ்ஸைக் கட்சியில் இணைப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் நடந்துவரும் நேரத்தில் தினகரனும், திவாகரனும் போட்டிபோட்டுக்கொண்டால் கீழ்மட்டத்தில் உள்ள தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குத் தெரியாதா? இவர்களுக்குள்ளேயே போட்டி இருந்தால், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் எப்படி இவர்களுக்குப் பின்னால் கட்சியைக் காப்பாற்ற நினைப்பார்கள்? இவர்களை நம்பி கட்சியில் வருகிறவர்களும் கட்சிக்கு வரமாட்டார்கள். உண்மையானத் தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவே இல்லை. இவர்கள் முதலில் போட்டிபோட்டுக் கட்சியை வழிநடத்த நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்றார்கள் ஆவேசத்துடன்.


திவாகரன் ஆதரவாளரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான எஸ்.காமராஜிடம் பேசினோம். ''இந்த நேரத்தில் கட்சிக் கூட்டம் தேவையில்லை. ஏனென்றால், சின்னம்மாவைச் சிறையிலிருந்து மீட்டுக்கொண்டு வரவேண்டும். இன்னும் நான்கு ஆண்டுகள் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த வேண்டும். கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் முனைப்புக் காட்ட வேண்டுமே தவிர, பொதுக்கூட்டம் நடத்துவதில் அவசியமில்லை'' என்றார் ஆவேசமாக.
தினகரன் ஆதரவாளர்களிடம் பேசினோம், ''நாங்கள் கூட்டத்துக்கான ஒப்புதலைத் தலைமையிடம் வாங்கித்தான் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவருகிறோம். காவல் துறையினரிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். இதுவரை அனுமதி குறித்து எந்தப் பதிலும் எங்களுக்குக் காவல் துறையினர் அளிக்கவில்லை. திட்டமிட்டப்படி கூட்டம் நடைபெறும்'' என்றனர்.
மராத்தான் ஓட்டத்தில் யார் வெற்றிபெறப் போகிறார்களோ... பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.