June 21, 2017
ஆந்திர முன்னாள் தலைமைச் செயலாளரின் பதவிக்கு உலை வைத்த ஃபேஸ்புக் பதிவு!
ஃபேஸ்புக் பதிவுகள் ஒரு சிலருக்குப் பாதகமாய் அமைந்து விடுகின்றன. இதற்கு அண்மைக்கால உதாரணமாய் இருக்கிறார் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிருஷ்ணா ராவ்.
இவர் கடந்தாண்டு தலைமைச் செயலாளர் பதவியில் ஒய்வுபெற்றவுடன், ஆந்திர அரசின் அங்கமான பிராமண நல அமைப்பின் தலைவர் பொறுப்பைப் பெற்றிருக்கிறார். ஒரு வருடம் வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பதவி வகித்தவருக்கு ஃபேஸ்புக் பதிவு பதவியைப் பறிக்கக் காரணமாக இருந்து இருக்கிறது.
கடந்த வாரம் கிருஷ்ணா ராவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கார்ட்டூனிஸ்ட் கைது குறித்தும், 'பாகுபலி' மற்றும் 'கெளதமிபுத்ரா சதகர்னி' திரைப்படங்களுக்கு வரிச் சலுகை வழங்கியது குறித்தும் பதிவு ஒன்றைப் போட, அந்தப் பதிவே இவரது பதவிக்கு உலை வைத்திருக்கிறது.
ஃபேஸ்புக் பதிவு போட்ட, மறுநாளே ஆந்திர பிராமண நல அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அரசிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணா ராவ் முதலமைச்சர் சந்திர பாபுவைப் பார்க்க அனுமதி கேட்டு இருக்கிறார்.
முதலமைச்சர் பல்வேறு துறைசார்ந்த கூட்டங்களிலும், குடியரசுத் தலைவர் தேர்வு குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் என்று அனுமதி கொடுக்க மறுத்திருக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
'என்னுடைய ஃபேஸ்புக் கருத்துகள் யாருக்கும் எதிரானது அல்ல. நல்ல நம்பிக்கையான விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறேன். சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துச் செயல்பட்டு வருகிறேன்' என்று சொல்லி விளக்கம் கொடுத்து வருகிறார் கிருஷ்ணா ராவ்.
முதலமைச்சரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன், 'அமராவதி மற்றும் ஆந்திராவின் பிற பிரச்னைகள் குறித்தும் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன்' என்று தனது அடுத்த அஸ்திரத்தை வீசியிருக்கிறார் கிருஷ்ணா ராவ்.
'அரசு தனக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கிருஷ்ணா ராவ். ஆனால், கிருஷ்ணா ராவ் தலைமைச்செயலாளராகவும், கார்ப்பரேஷன் தலைவராகவும் இருந்தவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மிகவும் அக்கறையோடும், பிரியத்துடன்தான் நடந்து இருந்தார் ' என்று விளக்கம் கொடுக்கிறார் ஆந்திர அரசின் ஊடக ஆலோசகர் பாரகலா பிரபாகர்.
நெருப்பில்லாமல் புகையாது என்பது புரிகிறது. கிருஷ்ணா ராவின் அடுத்தடுத்த பேஸ்புக் பதிவுக்காகக் காத்திருக்கிறது தெலுங்கு தேசம்
ஆந்திர முன்னாள் தலைமைச் செயலாளரின் பதவிக்கு உலை வைத்த ஃபேஸ்புக் பதிவு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
June 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.