போபால்:மத்தியப் பிரதேசத்தில் போராட்டத் தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஐந்து விவசாயிகள் உயிரிழந்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. நிலைமையை சமாளிக்க, மத்தியப் படைகள் விரைந்துள்ளன; மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பயிர்க் கடன் களை ரத்து செய்ய வேண்டும், தங்களு டைய உற்பத்தி பொருள்களுக்கான குறைந்த பட்ச கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இம்மாதம், 1ம் தேதி துவங்கிய போராட்டம், முதல் சில நாட்களில் அமைதியாகவே நடந் தது. இந்த நிலையில், மாண்ட்சார் மாவட்டம் பிப்லியாமண்டி பகுதியில், ஜூன், 6ல், வாகனங் களுக்கு தீவைப்பது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மீது கற்களை வீசி தாக்குவது என்று, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.வன்முறையை சமாளிக்க, நேற்று முன்தினம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஐந்து விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், பயங்கர வன்முறை வெடித்தது.
மாண்ட்சார் மாவட்டத்தில் துவங்கிய இந்த வன்முறை சம்பவங்கள், பல்வேறு மாவட்டங் களுக்கும் பரவின.அதைத் தொடர்ந்து, மத்திய அரசு, ஆர்.ஏ.எப்., எனப்படும், அதிரடிப் படை வீரர்கள், 1,100 பேரை அனுப்பி வைத்துள்ளது. மாண்ட்சார் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நிலைமை மோசமடைவதை தடுக்க, விவசாயி களுக்கு பல்வேறு சலுகைகளை, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். மாநிலத்தில் உள்ள, ஆறு லட்சம் விவசாயி களுக்கு, 6,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, கடன் சமரச திட் டத்தை அவர் அறிவித்தார்.
மாநிலத் தின் பல்வேறு பகுதிகள், நேற்று இயல்பு நிலைக்கு திரும்பின. தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட முக்கிய இடங் களில், மாநில போலீ சாரும், அதிரடிப் படை வீரர் களும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாண்ட்சார் மாவட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடந்த பிப்லியாமண்டி உட்பட சில பகுதிகளில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.மாலை, 4:00 மணி முதல்,6:00 மணி வரை பெண்கள் மற்றும் குழந்தை கள் நடமாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து, ஊரடங்கு உத்தரவில் சலுகை அளித்தது.
விவசாயிகள் மீதான துப்பாக்கிச் சூட்டை, போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் மறுத்து வரும் நிலை யில், ''போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்தான் விவசாயிகள் உயிரிழந்தனர்,'' என, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் புபேந்திர சிங் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
மாண்ட்சார் மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், ஐந்து விவசாயிகள் உயிரிழந் தனர். ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்த போலீசாரை துாண்டிய சம்பவம் எது என்பது குறித்து, விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க, தடையை மீறி, ம.பி.,க்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் தலைவர்கள் வருவதற்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தடையை மீறி, ராஜஸ்தான் மாநிலம் வழியாக, ம.பி.,க்குள், காங்கிரஸ் தலைவர், ராகுல் நேற்று நுழைய முயன்றார்.
மாநிலத்தின் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி, அவர் செல்லமுயன்றார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் வந்தனர்.
அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதையும் மீறி, நுழைய முயன்றபோது, அவர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, ராஜஸ்தானில் இருந்து, ராகுல், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, ம.பி.,க்கு வந்து சேர்ந்தார்.
''பெரும் பணக்கார தொழிலதிபர்களுக்கான கடனை தள்ளுபடி செய்துள்ள, பிரதமர் மோடி, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறார்,'' என, ராகுல் குற்றஞ்சாட்டினார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, பாதிக்கப் பட்ட விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க, ராகுலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராகுல் உள்ளிட்டோர், ராஜஸ் தான் - மத்திய பிரதேசம் எல்லையில், நயாகான் பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை அங்கு அழைத்து வந்து சந்திக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மாலையில், ராகுல் மற்றும், காங்., தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வன்முறையை துாண்டும் காங்.,
அமைச்சர் வெங்கையா விளாசல்
மத்திய பிரதேச நிலவரம் குறித்து, மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் விவசாயி கள் போராட்டத்தின்போது, வன்முறையை துாண்டிவிட்டது காங்கிரஸ் கட்சி தான். அங்கு நிலைமை சீரடைவதற்கு உதவாமல், போட்டோ எடுத்துக் கொள்வதற்காக, ராகுல் சென்றுள்ளார்.
விவசாயிகளின் நலனுக்காக, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமை யிலான, ம.பி., அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி, பிரச்னையை அரசியலாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காண்ப தற்கு, பேச்சு நடத்த, அரசு எப்போதும் தயாராக உள்ளது. பேச்சு மூலமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும். விவசாயிகளும், மக்களும் அமைதி காக்க வேண்டும்.
சிவராஜ் சிங் சவுகான், ம.பி., முதல்வர், பா.ஜ.,


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.