Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2017

'இறந்தவங்கள குளிப்பாட்டக்கூட தண்ணி இல்ல'.. ஒரு வருடமாக அவதிப்படும் கிராமம்!


சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்தில் உள்ள தூதுகுடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது, விழிமார் கிராமம். இது, ஒருவருடமாக கடும் தண்ணீர் பஞ்சத்தைச் சந்தித்துள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் இல்லாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர் இந்தக் கிராம மக்கள். விழிமார் கிராமத்தைச் சேர்ந்த சின்னையா, பூமயில் ஆகியோரிடம் பேசும்போது...
'இந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். கடந்த ஒரு வருஷ காலமா போதிய அளவுக்கு மின்சார வசதி இல்லாததால், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். குடிதண்ணீர் இல்லை, போன வாரம், எங்க ஊர்ல ஒருத்தர் இறந்துபோனார். அவரை நல்லடக்கம் பண்ண 25 கிலோமீட்டர் தூரத்துலயிருந்து நாலு டேங்க் தண்ணி 4,500 ரூபாய்க்கு வாங்கி வந்துதான் நடத்துனோம். இதே நிலைதான் கல்யாணத்துக்கும். குடிக்கிற தண்ணி 30 ரூபா. எட்டு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற 'கைகாப்பு' கிராமத்துலயிருந்து வாங்குறோம்' என்றனர்.
'எங்க ஊர்ல மூணு வருஷத்துக்கு முன்னாடியே 25 லட்சம் ரூபா செலவுல போர் போட்டாங்க. அந்த மோட்டாரை உருப்படியா போட்டிருந்தா எங்களுக்கு தண்ணி பிரச்னை இருக்காது. இதை பல முறை பிடிஓ கிட்ட சொல்லியும் நடவடிக்கை இல்லை. பஞ்சாயத்து கிளார்க் சரியில்லாததுதான் இவ்வளவு பிரச்னைக்கும் முக்கியக் காரணம். அவரு ஒழுங்கான முறையில எங்களுக்கான போர்வெல்ல இயக்குனாலே போதும். இல்லாட்டி ஊனமுற்றோர்கிட்டகூட இந்த வேலையைக் கொடுக்கலாம். எதையும் செய்யமாட்டீங்கிறாங்க.
ஒரே பஞ்சாயத்துல இருந்தும், 'தூதுகுடி' கிராமத்துல நூறு நாள் வேலை கொடுக்குறாங்க. எங்க ஊருக்கு அந்த வேலை கொடுக்க மறுக்குறாங்க. அதான், கலெக்டரை பார்க்க வந்திருக்கோம். அவுங்களும் நடவடிக்கை எடுக்குறேன்னு சொல்லியிருக்காங்க', என்கிறார்கள் கவலைதோய்ந்த முகத்துடன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.