அ.தி.மு.க ஆட்சியில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளநிலையில், 1570 கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அண்மையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, '73 நாட்களில் 1570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன். எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லாத வண்ணம் அரசு நிர்வாகம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது' என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எத்தனை முக்கிய திட்டங்களுக்கு இந்த கோப்புகள் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார், இது வரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் முதல்வர் பேசியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் "கோப்புகளில் கையெழுத்திட்டேன்" என்று முதலமைச்சர் பேசியதிலிருந்தே அந்த கோப்புகள் வழக்கமான கோப்புகள்தான் என்பது தெரிகிறது.
மேலும் இதுகுறித்த தனது அறிக்கையில், 'நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இரு மாதங்கள் நெருங்கப் போகும் வேளையில் கூட துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டாத முதலமைச்சர் தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்கிறது என்று கூறியிருப்பதை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன். ஆகவே அ.தி.மு.க ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இது போன்ற "பகட்டான" பேச்சுக்கள் மூலம் மறைக்க முயலாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தனது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.