Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 11, 2017

மோடி இன்று இலங்கை செல்கிறார் மீனவர் பிரச்னை, இலங்கை ராணுவத்தில் சீனர்கள் ஆதிக்கம் குறித்து பேச வாய்ப்புள்ளதா?


புத்த மத திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று இலங்கை செல்கிறார்.

புத்த மதத்தினர் புத்தரின் பிறந்தநாள், ஞானோதயம் பெற்ற நாள், உயிர் நீத்த நாள் ஆகிய மூன்றையும் ‘வெசாக்’ (புத்த பூர்ணிமா) தினம் என்ற பெயரில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

மோடி இன்று இலங்கை பயணம்

ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை கொழும்பு நகரில் 3 நாட்கள் நடக்கிறது.

இதில் உலகம் முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். புத்த பூர்ணிமா திருவிழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்பதற்காக அவர் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த விழாவில் இலங்கை தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

சிறிசேனா விருந்து
தனது பயணத்தின்போது, தேயிலைக்கு புகழ்பெற்ற இலங்கையின் மத்திய மாகாணமான கண்டிக்கும் மோடி செல்கிறார். தோட்ட தொழிலாளர்களுக்காக இந்தியாவின் நிதி உதவியுடன் திக்கோயா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆஸ்பத்திரியை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

கண்டி நகரில் உள்ள அதிபர் மாளிகையில், இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் மோடிக்கு நாளை மதிய விருந்து அளிக்கிறார்.

தமிழர் முன்னேற்ற கூட்டணியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

பேச்சு நடத்த வாய்ப்பு
தனது சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, இலங்கை தலைவர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியும் அவர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.

அண்மையில் இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து மோடி இன்று இலங்கை செல்கிறார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி இலங்கைக்கு செல்வது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் சஞ்சய் பாண்டா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் பிரச்சினை
தமிழக மீனவர்களின் பிரச்சினையை மத்திய அரசு தீவிரத்துடன் அணுகி வருகிறது. இதுவரை பல்வேறு முனைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் இலக்கை நம்மால் அடைய முடியவில்லை. இதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிய முயற்சித்து வருகிறோம்.

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதே எங்களின் நோக்கமாகவும் அணுகுமுறையாகவும் இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டுதான் கடந்த நவம்பர் மாதம் இருநாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் மீனவளத்துறை மந்திரிகள் டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த கூட்டத்தில் இருநாடுகளும் கூட்டு செயற்குழுவை உருவாக்குவது என்றும், அந்த குழு இருநாடுகளின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சுமுகமான முறையில் நிரந்தர தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இழுவை மடிவலை
இந்த குழு மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்திப்பது என்றும் மந்திரிகள் மட்டத்தில் 6 மாதத்துக்கு ஒருமுறை கூடி கூட்டு செயற்குழுவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டு செயற்குழுவின் முதல் கூட்டம் கடந்த டிசம்பர் 31-ந் தேதி டெல்லியிலும், ஜனவரி 2-ந்தேதி மந்திரிகள் மட்டத்திலான கூட்டம் கொழும்பு நகரிலும், கூட்டு செயற்குழுவின் குழுவின் 2-வது கூட்டம் ஏப்ரல் 7-ந் தேதி கொழும்புவிலும் நடந்தது.

இதில் இலங்கை தரப்பில் முன்வைத்த பிரச்சினை, நம்மால் மறுக்க இயலாமல் போன பிரச்சினை என்னவென்றால் நம்முடைய மீனவர்கள் பாரம்பரியமாக இழுவை மடி வலையை பயன்படுத்துவது ஆகும். தற்போது நமது பணி நம்முடைய மீனவர்களை இழுவை மடி வலையை பயன்படுத்துவதை நிறுத்தி தொலைதூர ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுத்துவதுதான். இதற்காக மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து ரூ.1,500 கோடிக்கு திட்டம் வகுத்து உள்ளது. நமது மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து பயிற்சியும் அளிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

நிரந்தர தீர்வு
இதுதவிர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை உடனடியாக சாத்தியப்படுபவை அல்ல. நிரந்தர தீர்வு காண பல்வேறு வகைகளிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது குறித்து இந்திய அரசு எப்போதும் இலங்கை அரசிடம் தொடர்ச்சியாக கவனத்தில் கொண்டு செல்கிறது.

ஒரு மாதத்துக்கு முன்பு கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் மட்டுமே இலங்கை சிறையில் தற்போது இருக்கின்றனர்.

மீனவர்களின் படகுகள்
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இழுவை மடிவலைகளை பயன்படுத்துவதை நிறுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பில் தமிழக மீனவர்களை ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறோம். இழுவை மடிவலைகளை பயன்படுத்துவது படிப்படியாக நிற்கும்போது இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை மீட்டெடுக்க இந்திய அரசு முயற்சிக்கும்.

தற்போது நமது பிரதமரின் இலங்கை பயணம் புத்த பூர்ணிமாவை கொண்டாடும் வகையில் அமைந்த ‘வெசாக்’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த பிரச்சினைகள் (தமிழக மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள்) குறித்து இலங்கை தலைவர்களுடன் பிரதமர் அலுவலக ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாவிட்டாலும், இரு நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுடன் இவை குறித்து அவர் உரையாட வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு சஞ்சய் பாண்டா கூறினார்.

சீனர்கள்
தமிழக மீனவர்களை கைது செய்து படகுகளை கைப்பற்றும் இலங்கை கடற்படையினரின் படகுகளில் சீனாவை சேர்ந்த சிலர் துப்பாக்கியுடன் இருப்பதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சஞ்சய் பாண்டா பதில் அளிக்கையில், “அது போன்ற தகவல்கள் எதுவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் இல்லை. இதுவரை எந்த நிறுவனத்திடம் இருந்தும் இது போன்ற தகவல் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து ஒன்றும் கூறமுடியாது” என்று தெரிவித்தார்.

தமிழர்கள் எதிர்ப்பு
இதற்கிடையே, இலங்கை அரசின் புத்த பூர்ணிமா கொண்டாட்டத்துக்கு இலங்கை தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

இதுபற்றி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான செல்வராஜன் கஜேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “8 ஆண்டுகளுக்கு முன்பு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்தது. அதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. மாறாக வடக்கு மாகாணத்தை சிங்களர் மயமாக்குவதுதான் நடந்து வருகிறது. இனப்படுகொலை நடத்தப்பட்ட அதே மே மாதம்தான் புத்த பூர்ணிமா விழா நடைபெறுகிறது. எனவே இலங்கை தமிழர்கள் அனைவரும் இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கவேண்டும்” என்றார்.

இதேபோல் பல்வேறு இலங்கை தமிழர் அமைப்புகளும் இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.