May 28, 2017
மாட்டிறைச்சி தடை சனநாயக நாட்டின் பன்மைத்துவத்தை குலைக்கும் கொடுஞ்செயல் : சீமான் கண்டனம்
மாட்டிறைச்சி தடைகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு தேசிய இனத்திற்கென்று தனித்தன்மையான பண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனமும் பன்னெடுங்காலமாக தனது தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள நடத்திய போராட்டமே உலக வரலாறாக விரிந்து கிடக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் தனித்தன்மைகளோடு இணைந்து வாழும் நாடாக இந்திய ஒன்றியம் விளங்குகிறது. ஆனால், பாஜக அரசானது ஆட்சிபீடத்தில் ஏறியது முதல் தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து ஒற்றை முகமாக உருவாக்கிட தனது பல்வேறு திட்டங்களினால் காய்நகர்த்தி வருகிறது. அதில் ஒன்றுதான் நமது உணவுப்பழக்க வழக்கத்தில் திணித்து இருக்கிற கட்டுப்பாடுகள். குறிப்பாக மாட்டிறைச்சி உண்பதை அடியோடு தடைசெய்யும் விதமாக மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடை.
ஒரு சமூகத்தின் உணவுப்பழக்க வழக்கம் என்பது அந்த சமூகம் வாழ்கின்ற இடம், பருவநிலை, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எழும் வரலாற்று தொடர்ச்சி, பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்டு எழும் காரணியாகும். ஒரு அரசோ, சட்டங்களோ தீர்மானிக்க இயலாத அல்லது தீர்மானிக்கக் கூடாத தனிமனிதனின் அடிப்படை சுதந்திரமான உணவுப்பழக்கவழக்கத்தில் தனது கருத்தை அல்லது தத்துவத்தை திணிக்க முயல்வதன்மூலம் பாஜக அரசின் பாசிசமுகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக விளங்கும் இதுபோன்ற மக்களிடையே பெரும் குழப்பத்தினையும், அச்சத்தினையும் ஏற்படுத்தி இருக்கின்றன. மாட்டிறைச்சியில் அரசியல் செய்ய விரும்பும் இந்துத்துவ பாஜக அரசு உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவான, ஏகபோக நலன்களை உள்ளடக்கிய ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே சட்டம், ஒரே நாடு போன்ற சர்வாதிகார அம்சங்களை வளர்த்தெடுக்கிற மத தீவிரவாதப் போக்காகும். இந்நாட்டில் வாழும் பலகோடி மக்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள். சாதி, மத பிரிவினைகளுக்கெல்லாம் அப்பால் பலராலும் கடைப்பிடிக்கப்படும் உணவு பழக்கவழக்கத்தை ஒழித்துக் கட்ட நினைப்பதன் மூலமாக பாஜக தன்னை இயங்குகின்ற கரமாக ஆர்.எஸ்.எஸ்ஸின் கனவை நிறைவேற்ற முயல்கிறது. மேலும், ஒட்டகக்கறி மீதானக் கட்டுப்பாடு இந்நாட்டின் பூர்வக்குடிகளான இசுலாமிய மக்களின் பண்பாட்டின் மீதானத் தாக்குதலாகும். இதுபோன்ற செயல்கள் மூலமாக பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மத உணர்வைத் தூண்டி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறது. மத்தியில் ஆண்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இத்தடையானது, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பல்வேறு மத வழிபாடு கொண்ட மக்களின் உணர்வுகள் மீது தொடுக்கப்பட்ட கொடும் தாக்குதலாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. எனவே, மத்திய அரசானது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மக்களின் அடிப்படை, பண்பாட்டு பழக்கவழக்கங்களில் கைவைத்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதை சனநாயகம் மீது பற்றுறுதி கொண்ட அனைத்து சக்திகளும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டிய காலத்தேவை பிறந்திருக்கிறது. மத்திய அரசானது இத்தடைச்சட்டத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று வெகுமக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையேல், இதுபோன்ற தடைகளை தகர்த்தெறிய மக்கள்திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி தடை சனநாயக நாட்டின் பன்மைத்துவத்தை குலைக்கும் கொடுஞ்செயல் : சீமான் கண்டனம்
Reviewed by மறத்தமிழன்
on
May 28, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
May 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.