Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2017

கத்திமுனையில் டிரைவரை மிரட்டி, ஆட்டோவை கடத்திய 2 பெண்கள் கைது


சவாரிக்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோவை கடத்திச்சென்றதாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சவாரிக்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் டிரைவரை மிரட்டி ஆட்டோவை கடத்திச்சென்றதாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

ஆட்டோ கடத்தல்
சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (வயது 43). இவர், சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் அருகே ஆட்டோவில் சவாரிக்காக காத்து நின்றார். அப்போது 2 பெண்கள் உள்பட 4 பேர் மீஞ்சூர் வரை செல்ல வேண்டும் எனக்கூறி சவாரிக்கு அழைத்தனர்.

ஜோதிலிங்கம் அவர்கள் 4 பேரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்றார். செங்குன்றம் அருகே சென்ற போது, ஆட்டோவில் இருந்த 2 ஆண்களும் நிறுத்தும்படி கூறினர். ஜோதிலிங்கம் ஆட்டோவை நிறுத்தினார்.

அப்போது அந்த நபர்கள், தங்களிடம் இருந்த கத்தியை டிரைவர் ஜோதிலிங்கம் கழுத்தில் வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்தனர். பின்னர் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு, 4 பேரும் ஆட்டோவை கடத்திச்சென்று விட்டனர்.

வாகன சோதனையில் சிக்கினர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிலிங்கம், புழல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இதுபற்றி அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தெரிவித்து உஷார்ப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் மீஞ்சூர் அருகே கிருஷ்ணன்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த மீஞ்சூர் போலீசார், அந்த ஆட்டோவை மடக்கி பிடித்தனர். ஆட்டோவில் இருந்த 2 ஆண்களும் தப்பி ஓடிவிட்டனர். 2 பெண்கள் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை புழல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2 பெண்கள் கைது
விசாரணையில் அவர்கள், திருவொற்றியூர் விம்கோநகர் ராமநாதபுரம் 6–வது தெருவைச் சேர்ந்த சுபா (20), மீஞ்சூர் அத்திப்பட்டு எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த சுகந்தி(22) என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் தப்பி ஓடிய சங்கர், சுபாவின் கணவர் என்பதும், மற்றொருவரான செல்வம் சுகந்தியின் கணவர் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேர் மீதும் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. தப்பி ஓடிய சங்கர், செல்வம் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.