Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2017

இறைச்சி, தோல் பொருட்கள் தயாரிப்புக்கு மாடுகளை விற்க தடை .1 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு................


* நாடு முழுவதும் உடனடி அமல்
* மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
* ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் முடங்கும்
* 90 சதவீதம் தோல்பொருள் நிறுவனங்கள் மூடப்படும்
* விவசாயத்துக்கு வாங்க, விற்கவும் கட்டுப்பாடுகள்

 இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு அதிரடி தடை விதித்துள்ளது;  இந்த உத்தரவு நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. விவசாய தேவைக்காக மாடுகளை விற்கவும், வாங்கவும் கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாட்டுத் ேதால் மூலம் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மூடப்படும்  அபாயம் ஏற்பட்டுள்ளது; ரூ.1 லட்சம் கோடி இறைச்சி வர்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு, பசு பாதுகாப்பு பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்தது. இறைச்சிக்காக மாடுகளை வெட்டுபவர்களுக்கும், பசு பாதுகாவலர்களுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் கடும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சில பகுதிகளில் இந்த வன்முறை கொலையிலும் முடிந்துள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில், பசுக்களை வெட்டினால் கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட மத்திய அரசு தடை விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.  அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கால்நடை சந்தைகள் மூலமாக மாடு, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது.
* பண்ணை உரிமையாளர்கள் மட்டுமே சந்தைகளில் கால்நடைகளை விற்பனை செய்ய வேண்டும்.

* விவசாய தேவைக்காக மட்டுமே கால்நடைகள் விற்கப்பட வேண்டும்.
* அதை விற்பவரும் வாங்குபவரும், இறைச்சிக்காக கால்நடைகள் விற்கப்படவில்லை என்ற உறுதிமொழியை கைப்பட எழுதி தர வேண்டும். அத்துடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை 5 நகல் எடுத்து அவற்றை வருவாய் அதிகாரிகள், மாவட்ட கால்நடை மருத்துவர், கால்நடை சந்தை கமிட்டி, வாங்குபவர் மற்றும் விற்பவர் என அவர்களுக்கு தனித்தனியாக என 5 நகல்களை தர வேண்டும்.

* கால்நடைகளை வாங்கியவர்கள் 6 மாத இடைவெளிக்குள் அவற்றை விற்பனை செய்யக் கூடாது.

* இளம் கன்றுகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது.

* வெளி மாநிலங்களுக்கு கால்நடைகளை விற்பனை செய்யக் கூடாது.
* மதம் சம்மந்தப்பட்ட விழாக்களில் கால்நடைகளை பலியிட தடை விதிக்கப்படுகிறது.

* கால்நடை சந்தைகள் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டுமே மாடுகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

* கால்நடை சந்தைகளில் போதிய இட வசதி, தண்ணீர் தொட்டி, மின் வசதி, மருத்துவ வசதி, கழிவறை, வளவளப்பாக அல்லாத தரைதளம், கால்நடைகள் திடீர் மரணமடைந்தால் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா என்பதை கண்காணிப்பு கமிட்டி சோதனை செய்ய வேண்டும்.
* மாநில எல்லையில் இருந்து 25 கி.மீ. தொலைவுக்குள் சந்தை அமைய வேண்டும்.

* ஒவ்வொரு கால்நடை சந்தையிலும், மாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் உரிய உயரத்துடன் உள்ளதால, அவற்றின் குறிப்பிட்ட அளவிலான மாடுகள் மட்டுமே கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கால்நடை கண்காணிப்பாளர் கண்காணித்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இவ்வாறு 23 பக்கங்கள் கொண்ட 50க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணையை சமீபத்தில் காலமான முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே

கையெழுத்திட்டுள்ளார். ஆனாலும் தனி நபருக்கு கால்நடைகள் விற்பனை செய்வது தொடர்பாக அரசாணையில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. கால்நடை விற்பனை என்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றாலும் அதில் விலங்குகள் நலன் அடிப்படையில் மத்திய அரசு இத்தகைய திருத்தத்தை மேற்கொண்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இந்த அரசாணையால் இறைச்சி விற்பனையாளர்களும், தோல் வியாரிபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.  தோல் வர்த்தக நிறுவனங்களின் 90 சதவீத தேவை வார சந்தை, மாட்டு சந்தைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது மத்திய அரசின் உத்தரவால் இனி பெரும்பாலான தோல் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏழை விவசாயிகள் கறவை மாடுகள்

அல்லாதவற்றை வருமானத்திற்காக விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் மத்திய அரசின் உத்தரவால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் மாட்டிறைச்சி விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது. வதைக்கக் கூடாது மாட்டு சந்தைகளில் கால் நடைகளை எவ்வித துன்புறுத்தலுக்கும் உட்படுத்தக் கூடாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* கொம்புகளை வெட்டவோ அவற்றில் வண்ணங்கள் தீட்டவோ கூடாது. எருமைகளின் காதுகளை வெட்டக் கூடாது.

* கால்நடைகளின் உடம்பில் எந்த ரசாயன பொருளாலும் எழுதக் கூடாது.
* கன்றுகள் பால் குடிப்பதை தடுக்க பசுக்களின் மடியை எந்த உபகரணம் கொண்டு மூடக் கூடாது.

* நடனமாடுவது உள்ளிட்ட எந்த செயலையும் செய்ய கால்நடைகளை வற்புறுத்தக் கூடாது.

* மாடுகளை விற்பவரும் வாங்குபவரும் அவரவர் தரும் ஆவணங்கள் சரியானது தானா என சோதித்து பார்க்க வேண்டும்.
* எந்த விழாக்களிலும் கால்நடைகளை பலியிடக் கூடாது.

ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் பாதிப்பு

கடந்த 2016-17ம் ஆண்டில் இந்தியாவின் இறைச்சி வர்த்தகம், சுமார் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு நடந்துள்ளது. இதில் ஏற்றுமதி மட்டும் ரூ.26,303 கோடிக்கு செய்யப்பட்டுள்ளது. இறைச்சி சந்தையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் உள்ளன. பல மாநிலங்களில் வார சந்தைகள் மிக பிரபலமாக நடக்கின்றன. வார சந்தையில் ஏராளான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடை விற்கப்படுகின்றன. இவற்றை வெளி மாநிலங்களில் இருந்து வந்தும் பலர் வாங்கிச் செல்கின்றனர். இவை அத்தனையும் மத்திய அரசின் உத்தரவால் தலைகீழாக மாற உள்ளன.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

மத்திய அரசின் அரசாணை குறித்து, தமிழ்நாடு மாட்டு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில செயலாளர் தென்றல் செல்வராஜ் கூறியதாவது:  மாடுகளை வெட்டக்கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். மாடுகளை வெட்டக்கூடாது, மாடுகளை விவசாயிகளே விற்பனை செய்யவும், வாங்கவும் வேண்டும் என்ற நிலைமை இருக்கும்பட்சத்தில், பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும். அத்துடன்.  இத்தொழிலை நம்பியிருக்கும் வியாபாரிகள், தரகர்கள், லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாக, வரும் நாட்களில் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் மாடு விற்பனை அடியோடு குறையும். சந்தை முடங்கும். மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, தென்னிந்தியாவின் பெரிய சந்தையான பொள்ளாச்சி மாட்டு சந்தையில் வரும் 30ம்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும். இவ்வாறு தென்றல் செல்வராஜ் கூறினார்.

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை உரிமையாளர் முருகன் கூறியதாவது: இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இதனால், ஏராளமான மாடு வியாபாரிகள் மற்றும் தரகர்கள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள், வயதான மாடுகள் மற்றும்  கன்று குட்டிகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டுவராமல் எப்படி விற்க முடியும். அரசின் உத்தரவால் மாடு வளர்ப்பவர்கள் பாதிப்படைவார்கள். கிராம பொருளாதாரம் கால்நடை வளர்ப்பை அடிப்படையாக கொண்டது என்பதால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் இந்த உத்தரவால் ஈரோடு மாட்டு சந்தையில் மட்டும் 40 சதவீதம் வரை வியாபாரம் பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு முருகன் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.