Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2017

108 ஆம்புலன்ஸ் சேவையிலும் ஊழலா? கிடுக்குபிடியில் ஓட்டுநர்கள்!


அவசர காலத்தில் நம் உயிரைக் காப்பாற்றுவதில் டாக்டர்களுக்கு எவ்வளவு முக்கியப் பங்களிப்பு இருக்கிறதோ? அதே அளவு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கும் இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடுங்கள், தமிழகத்தைப் பொறுத்தவரை 108 ஆம்புலன்ஸ் சேவையானது 24 மணி நேரமும் இயங்கிவருகிறது. கடுமையான மழை, அதிக வெப்பம் எதையுமே இவர்கள் பொருட்படுத்தாமல் சாலையே இல்லாத மலைப்பகுதிகளாக இருந்தாலும் சரி, டிராஃபிக் நிறைந்த பெருநகர சாலைகளானாலும் சரி, உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருபவர்களை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிர்பிழைக்கச் செய்பவர்கள்தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள். இப்போது அவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் 108 ஆம்புலன்ஸ் சேவையானது ஜி.வி.கே என்ற ஆந்திர நிறுவனத்திடம், ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு கொடுத்திருந்தது. அந்த நிறுவனம் ஆம்புலன்ஸ் சர்வீஸ், இயந்திரம் மாற்றுதல் என்று பல மோசடிகளைச் செய்து கோடிக்கணக்கானப் பணத்தை ஊழல் செய்திருக்கிறது. இதைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த 23 டிரைவர்களை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், 'தமிழக 108 ஆம்புலன்ஸ் சேவை டிரைவர்களை ஃபிக்சடு டெர்ம் எம்ப்ளாய்மென்ட் என்ற முறையில், அதாவது ஒரு வருடத்துக்கு மட்டும்தான் பணியில் இருக்க முடியும். அதற்குமேல் அந்த டிரைவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர்களுக்கு வேலை வழங்கப்படும்' என்று கூறியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் எந்தவித காரணமும் இல்லாமல் பல டிரைவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் அவர்கள் பெயரில் தமிழக அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்கிறது. இப்படி 108 ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவை ஒப்பந்தத்துக்கு எடுத்திருக்கும் ஜி.வி.கே நிறுவனத்தின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் டி.எம்.எஸ்-ல் நேற்று (5-5-2017) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்களிடம் பேசினோம். ''தமிழ்நாட்டில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தும் ஜி.வி.கே நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்றன. இந்த நிறுவனம் ஆம்புலன்ஸ் பராமரிப்பு என்கிற பெயரில் தமிழக அரசிடம் இருந்து பலமுறை பணம் பெற்றுக்கொள்கிறது. ஆனால், அப்படி எந்த பராமரிப்பையும் அவர்கள் செய்யவில்லை. பல ஆம்புலன்ஸ் வாகனங்கள் மோசமான நிலையில்தான் இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வளவு ஏன்? அனைத்து வாகனங்களிலும் பவர் ஸ்டியரிங் பொருத்திவிட்டோம் என்று பொய்க்கணக்கு காட்டி ஒரு வாகனத்துக்கு ஐம்பது ஆயிரத்துக்கும் மேல் என 198 ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், பவர் ஸ்டியரிங் பொருத்தப்படவே இல்லை. இதை, நெல்லையைச் சேர்ந்த 23 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கண்டறிந்து அரசு நிர்வாகத்திடம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் அனைவரையுமே அந்த நிறுவனம் வேலையைவிட்டு நீக்கிவிட்டது. இதனால் கடந்த ஜனவரி மாதம் சுகாதாரத் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். அவர்களும் விசாரித்து அவர்களுக்கு மீண்டும் பணி வழங்குமாறு உத்தரவிட்டனர். ஆனால், அதில் இன்னும் 11 நபர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. இதைக் கேட்டதற்குத்தான், 'இனி உங்களுக்காக ஃபிக்சடு டெர்ம் எம்ப்ளாய்மென்ட் முறை கொண்டுவந்திருக்கிறோம்' என்று அறிவித்துள்ளனர். அதாவது, ஒரு வருடத்துக்கு மட்டும்தான் வேலை. அதன்பிறகு நாமே கிளம்பிவிடவேண்டும். புதிதாக வருபவர்களுக்குக் குறைவான சம்பளம் கொடுத்து வேலை வாங்கிக்கொள்ளலாம். பின், அவர்களையும் ஒரு வருடம் முடிந்தபின் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இதோடு மட்டுமல்லமால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் ஓய்வுபெற்ற டிரைவர்களின் சம்பளம் அனைத்தையும் அந்த நிறுவனமே வாங்கிக்கொள்கிறது. எங்களின் முக்கிய நோக்கமே ஃபிக்சடு டெர்ம் எம்ப்ளாய்மென்ட் முறையைக் கைவிட வேண்டும். நீக்கப்பட்ட அந்த 11 பேரையும் மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சட்டவிரோதமான தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்றனர்.
தங்கள் உயிரை பணயம்வைத்து நாள்தோறும் பல மனித உயிர்களைக் காத்து வருகின்றனர் டிரைவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.