Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 15, 2017

எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா ? விராட்கோலிக்கு கிடைத்த 'ஹாட்ரிக் பத்ரி' #IPL2017


ஒரு பந்து வீச்சாளரின் பொறுப்பு ஒரு அணிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. ஒரு ஓவரில், ஏன்.. ஒரு பந்தில் முழு ஆட்டமே கைமாறும் அளவிற்கு சுவாரசியம் நிறைந்தது கிரிக்கெட் போட்டி. அந்த ஒரு கணம் ஒரு பேட்ஸ்மேனோ பௌலரோ மிகவும் பதற்றத்துடன் இருப்பார்கள். சிலர் இது போன்ற தருணங்களுக்காக காத்துக்கொண்டிருப்பார்கள். எவ்வளவு திறமையான வீரர்களாக இருந்தாலும் அந்த நிமிடத்தில் காலமும் அவர்களுக்கு கை கொடுத்தால் மட்டுமே அது முழு வெற்றியாக அமையும். அந்த வகையான தருணம் பந்து வீச்சாளர்களுக்கு இருக்கிறது என்றால் அது `ஹாட்ரிக்` விக்கெடுகளை வீழ்த்துவது. அந்த வகையில் அவ்வளவு சாதாரணமாக ஹாட்ரிக் விக்கெட் எடுப்பது என்பது முடியாத காரியம். ஆனால், அதனை அடைவது என்பது நிஜமாக ஒரு சாதனைதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த மேஜிக் அவ்வப்போது நிகழும். அதுவும், ஐபிஎல் போன்ற போட்டிகளில் நிகழ்ந்தால் எப்படி இருக்கும்? ஆம், இது வரை, எத்தனையோ பேர் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி வரலாற்றில் தன் பெயரை பதித்துள்ளனர். அந்த வரிசையில் நேற்று ராயல் சாலஞ்சர்ஸின் சாமுவேல் பத்ரியும் இடம்பெற்றுள்ளார். நடந்து முடிந்த மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையேயான போட்டியில் வெஸ்ட் இண்டீஸை சார்ந்த ராயல் சாலஞ்சர்ஸின் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதன் ஸ்பெஷலே அவர் முதல் பவர்ப்ளேவில் ஹாட்ரிக் எடுத்ததுதான்.

மும்பை தன் அதிரடியின் மூலம் கடந்த போட்டிகளில் வெற்றியை பதித்து வருகிறது. இந்த நிலையில், மும்பைக்கும் கோலி தலைமையில் பெங்களூருக்கும் நடைபெற்ற இந்த போட்டி மிக ஆரவாரத்துடன் தொடங்கியது. இந்த போட்டியில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை. 3வது ஓவரில் வந்து அதிர்ச்சி கொடுத்தார் பத்ரி. மூன்றாவது ஓவரின் 2வது பந்தில் பார்த்திவ் படேலை வீழ்த்தினார். இவர் வீழ்ந்த உடன் மகிழ்ச்சியில் திளைத்தது ஆர்சிபி. 3வது பந்தில் தனக்கான முதல் பந்தை சந்தித்த மெக்லனகனும் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து மந்தீப் வசம் வீழ்ந்தார், ஏற்கெனவே அதிரடி நாயகன் பட்லர் விக்கெடை இழந்து ஆடிய நிலையில், அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து 7 ரன்னிற்கு 3 விக்கெட்டுகளை இழந்து நின்றது. பத்ரியின் சாதுரியமான பந்தில் அணியின் கேப்டன் ரோஹித் போல்ட் ஆக ஆர்ப்பரித்தது ஆர்சிபி.

பத்ரி தன் ஆபார பந்துவீச்சினால் படபடவென விக்கெட்டுகளை சாய்த்து மும்பைக்கு ஷாக் கொடுத்தார். இவரின் அடுத்த ஓவரிலும் ரன் மழை பொழியும் ராணாவை வீழ்த்தி தம்ஸ் அப் காட்டினார். இவரின் ஹாட்ரிக் பெங்களூருக்கு பெரும் பலமாக இருந்தது. ஆனால், பொலார்டின் அதிரடி ஆட்டத்தால் மும்பை வெற்றி பெற்றது. இருந்தும் தன் லாவகமான பந்து வீச்சின் மூலமாக ஹாட்ரிக் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சாமுவேல் பத்ரி ?
36 வயதான சாமுவேல் பத்ரி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தன் 31வது வயதில் தன் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். ஆனால், உள்ளூர் போட்டிகளான கரிமியன் பிரிமியர் லீக், பிக்பாஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் பிரிமியர் லீக், போட்டியில் ஒவ்வொரு அணிக்காக விளையாடி உள்ளார். இவர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் 2013ல் ராஜஸ்தான் அணியில் எடுக்கப்பட்டு ஒரு போட்டி மட்டுமே விளையாடியுள்ளார். 2014 ஆண்டில் சிஎஸ்கே அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இவர் விளையாடிய 4 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். அவர் தோளில் ஏற்பட்ட காயத்தினால் பிக்பாஷ் லீக் போட்டியில் விளையாடவில்லை. 2016 ல் பிக்பாஷ் தொடரில் அதே அணிக்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

ஐபிஎல்லில், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இன்று நடந்த போட்டியில் முதன்முதலாக களமிறங்கினார். தன் முதல் போட்டியிலே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளார் சாம்ஸ். 4 ஓவர் வீசி 9 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து சிகப்பு நிற ஜெர்ஸியில் நம்மை சிலிர்க்க வைத்தார். ஆனால், அவர் இது வரை 50 ஓவர் போட்டியில் ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மே.இ.தீவுகள் அணிக்காக 34 டி20 போட்டியில் விளையாடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

இந்த போட்டியில் இவரது ஹாட்ரிக்கின் மூலம் ஐபிஎல் போட்டியில் ஹாட்ரிக் எடுத்த 15 வது வீரர் என்னும் பெருமையும் பெற்றார். இந்த போட்டியில் பெங்களூர் தோற்றாலும் பெங்களூர் ரசிகர்கள் மத்தியில் ‘பத்ரி..எங்கய்யா இருந்த இவ்ளோ நாளா?’  என்ற கேள்வி எழுந்துள்ளது. தன் முதல் போட்டியில் அசத்திய இவர் இனி வரும் போட்டிகள் அனைத்திலும் நிச்சயமாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். இவரது வரவை ஆர்சிபி மிகச்சரியாக பயன்படுத்தும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.

வாழ்த்துக்கள் பத்ரி...ஆல் தி பெஸ்ட்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.