தி.மு.க-வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் எந்தவித அரசியலும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் .ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 35 நாட்களாகப் போராடி வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சென்னையில், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது.
வறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக இதுவரையில் உறுதியான எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு தி.மு.க சார்பில், அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, அ.தி.மு.க-வின் இரு அணிகள் மற்றும் பி.ஜே.பி. தவிர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.
"விவசாயிகள் பிரச்னை என்பதால், இதில் கலந்து கொள்வோம்" என்று விடுதலை சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே அறிவித்து விட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நலன் கருதி நடைபெறும் கூட்டம் என்பதால், அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க முடிவு செய்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை நாளை கூட்டத்தில் அநேகமாகப் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பா.ம.க சார்பில் பல்லாவரத்தில் இன்றிரவு நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குப் பிறகே, தி.மு.க அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பா.ம.க வட்டாரங்கள் தெரிவித்தன.
தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை, அண்மைக்காலமாக தி.மு.க-வுடன் எந்தவித நெருக்கமும் காட்டவில்லை. கடந்த ஆண்டு தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது அக்கட்சி. தேர்தலில் அடைந்த தோல்விக்குப் பின்னர், மக்கள் நலக் கூட்டணியுடனான தேர்தல் உடன்பாடு முடிந்து விட்டதாக தே.மு.தி.க. அறிவித்தது. எனவே, தி.மு.க-வின் அழைப்பை ஏற்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தே.மு.தி.க. பங்கேற்காது என்றே தெரிகிறது.
ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், ஆர்.கே. நகர்த் தொகுதி இடைத்தேர்தலில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அணிக்கு ஆதரவு தெரிவித்தது. பின்னர் அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஓ.பி.எஸ்-அணிக்கு தி.மு.க அழைப்பு விடுக்காத நிலையில், த.மா.கா. பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.எனவே, இப்போதைய நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பது மட்டுமே உறுதியாகி உள்ளது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க தலைமையில், புதிய கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்கள் இருக்குமா? என்பதை நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகே தீர்மானிக்க முடியும். எதுவானாலும் பொறுத்திருந்து பார்ப்போம்!


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.