April 27, 2017
மோடிஜி இதற்குப் பெயர் ஹிந்தி திணிப்பு இல்லை என்றால் வேறு என்ன?
ஹிந்தி மொழியைப் பரப்ப மத்திய அரசு எடுக்கும் அடுத்தடுத்த நகர்வுகள் நம்மை இந்தியர்கள் என்று சொல்வதை விட, ஹிந்தியர்கள் என்று சொல்ல வைத்துவிடும் அளவுக்கு பயங்கர உத்வேகத்துடன் உள்ளது.
தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் பரபரப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இலைமறைக் காயாக, மத்திய அரசு சில ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகளையும் செய்து கொண்டே வருகிறது.
தமிழக அரசியல் பரபரப்பால் எதிர்க்கட்சிகளின் பார்வையிலும், ஊடகப் பார்வையிலும் ஹிந்தித் திணிப்பு போதிய கவனம் பெறாமலேயே உள்ளது.
ஹிந்தி திணிப்பு என்பது பாஜக தலைமையிலான அரசு செய்யும் முதல் முயற்சியல்ல.. திமுகவின் வரலாறு தெரிந்தவர்களுக்கு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறும் நிச்சயம் தெரிந்திருக்கும்.
அது பற்றி ஒரு சின்ன விளக்கம்
ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் - ஒரு பார்வை
1937ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக ஹிந்தி திணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயமாக்கியதே, ஹிந்தி திணிப்புப் போராட்டத்துக்கு வித்திட்டது.
இந்த போராட்டங்களினால் 1939ம் ஆண்டு காங்கிரஸ் அரசு பதவி விலகியது. சென்னை மாகாண பிரிட்டானியா ஆளுநர் எர்ஸ்கின் பிரபு, 1940ம் ஆண்டு கட்டாய ஹிந்திக் கல்வியை விலக்கினார். சுதந்திரத்துக்கு முன்பான இந்த போராட்டம் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமாக இருந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியக் குடியரசில் அலுவல் மொழி குறித்த நீண்ட விவாதத்துக்குப் பின், ஹிந்தி அரசுப் பணி மொழியாகவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல் மொழியாகவும் விளங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது 1950ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
இதன் அடிப்படையில், 1965ம் ஆண்டில் இருந்து இந்தியை மட்டுமே அரசு மொழியாக மாற்ற மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பலை உருவானது. இதில், தமிழகம் முன்னிலை வகித்தது.
திமுக நடத்திய பல போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. 2 மாதங்கள் நடந்த இந்த போராட்டங்களை காவலர்களால் தடுக்க முடியவில்லை. ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், மாநிலங்களின் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக அமைந்தது. இந்த தாக்கத்தால், 1967ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. தமிழகத்தில் அன்று தோல்வி அடைந்த காங்கிரஸ், இன்று வரை அந்த அரியாசனத்தைப் பிடிக்க முடியாமல் உள்ளது.
(தமிழகத்தில் கிளைபரப்ப நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, இந்த படிப்பினை இருந்தும்...)
இந்த நிலையில், மத்தியில் ஆண்ட இந்திரா காந்தி தலைமையிலான அரசு, அரசு அலுவல் மொழிச் சட்டத்தில் எப்போதும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளுமே அரசு மொழிகளாக இருக்கும் வகையில் திருத்தம் செய்தது.
அதன்பிறகு பெரிய அளவில் மொழித் திணிப்பை அடுத்தடுத்து வந்த தலைமைகள் மேற்கொள்ளாததால், மெல்லிய காற்றுப் போல, தமிழகத்தில் ஹிந்தி மொழியும் சேர்ந்து வீசத் தொடங்கியது என்பதே உண்மை.
ஆனால், தற்போது அந்த சூழல் மாறி வருகிறது. ஹிந்தி திணிப்பு எனும் சூறாவளி, மெல்லியக் காற்றையும் வெறுக்கும் அளவுக்கு நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது.
சாலையோர மைல் கற்களில் மாநில மொழிகளை விட, ஹிந்திக்கு முக்கியத்துவம், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம் என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
பாஜக தலைமையிலான அரசு, மத்தியில் ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், மத்திய அரசு, நாடு முழுவதும் ஹிந்தி மொழி பரப்பலுக்காக மட்டும் பல கொள்கைகளை எடுத்து அதனை அறிவித்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
அறிவிப்பு இல்லாமல் மைல் கற்களில் தமிழை அகற்றிவிட்டு ஹிந்தி மொழியில் ஊர் பெயர்களை எழுதியது தமிழர்களுக்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல நியாயங்களையும் கற்பித்தார். ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் நிலவரம் குழம்பியிருக்கும் நிலையில், ஹிந்தி பிரச்னையும் அரசியலாக்கப்படுவது அவலத்தின் உச்சம்.
மைல் கற்களில் ஹிந்தி
குழம்பியக் குட்டையில் மீன் பிடிப்பதைப் போன்று தமிழகத்தில் நிலவும் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மிகவும் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிடத்தக்கவை 75 மற்றும் 77 எண் கொண்ட சாலைகளாகும். இவற்றில் தேசிய நெடுஞ்சாலை 75 கர்நாடகத்தின் வழியாக செல்லும் 73ஆவது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை -பெங்களூர் இடையிலான 48ஆவது எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையையும் வேலூரில் இணைக்கிறது. இந்த சாலையின் மொத்த நீளம் 533 கி.மீ ஆகும். அதேபோல் தேசிய நெடுஞ்சாலை 77 கிருஷ்ணகிரி - திண்டிவனம் நகரங்களை இணைக்கிறது. இந்த சாலைகளில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த சாலைகளில் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களை அழித்து விட்டு, ஹிந்தியில் எழுதும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த சில வாரங்களில் சாலைகளிலுள்ள ஊர்களின் பெயர்களை இந்திமயமாக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
வாணிஸ்ரீ சிவக்குமார்
மோடிஜி இதற்குப் பெயர் ஹிந்தி திணிப்பு இல்லை என்றால் வேறு என்ன?
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 27, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.