April 5, 2017
ஆர்.கே.நகர் தேர்தல்: பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வருகிற 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அ.தி.மு.க. அணிகள் ஜெயலலிதா மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதானமாக கிளப்பி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. இதனால் பிரசார தொடக்கமே பரபரப்பாக இருந்தது.
தற்போது பணப்பட்டு வாடா நடப்பதாக கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டன. இதில் பெரிய அளவில் பணம் எதுவும் சிக்கவில்லை. நேற்று முன்தினம் வரை ரூ.7 லட்சம் வரை மட்டுமே சிக்கின.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தேர்தல் சிறப்பு பார்வையாளர்களும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை மற்றும் சோதனை நடத்த அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஆர்.கே.நகரில் அரசியல் கட்சியினர் போல் அல்லாமல் சாதாரணமாக வந்து பணப்பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பாக நள்ளிரவுக்கு பிறகு பணப்பட்டு வாடா மற்றும் டோக்கன் விநியோகம் நடப்பதாகவும் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆர்.கே.நகருக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களில் சுற்றி வந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படையினர் 4 குழுவாக பிரிந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது 3 இடங்களில் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டது தெரியவந்தது. காசிமேடு காசிபுரம் என்ற இடத்தில் 5 பேர் வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் பணம்பட்டுவாடா செய்து கொண்டு இருந்தனர். உடனே பறக்கும் படை அதிகாரிகள் 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அனைவரும் நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் இருந்து ஒரு கட்சி சார்பில் தேர்தல் பணிக்காக வரவழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் பெயர் ராஜா, மணி பாரதி, ஞானசேகரன், முருகன், சந்திரமோகன் என்று தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அரியலூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.37 ஆயிரம் பணம் பிடிபட்டது.
கொருக்குப்பேட்டை அஜீஸ் நகர் 3-வது தெருவில் நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலின் பேரில் பறக்கும்படையினர் சென்றனர்.
அங்கு சீனிவாசன் என்பவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் சிக்கியது.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் மதுரையைச் சேர்ந்த பிரபு என்பவர் தங்கி வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்து கொண்டு இருந்தார்.
இதைப்பார்த்த தி.மு.க.வினர் ஷேக், பார்த்த சாரதி மற்றும் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அப்பாஸ் ஆகியோர் தட்டிக் கேட்டனர். உடனே பிரபுவுக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து தி.மு.க.வினரை சுற்றி வளைத்து தாக்கினார்கள். அரிவாள் வெட்டும் விழுந்தது.
இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பிரபு உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.
நேற்று ஒருநாள் இரவில் மட்டும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 17 பேர் பணம்பட்டுவாடா செய்ததாக பிடிபட்டுள்ளனர். இவர்கள் அ.தி.மு.க. அம்மா கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் டோக்கன் மூலம் பரிசுப்பை தருவதாக பறக்கும் படைக்கு தகவல் கிடைத்தது. உடனே பறக்கும்படை அதிகாரிகள் அந்த பாத்திரக்கடையில் சோதனை நடத்தினார்கள். அங்கு ஒரு பையில் எவர் சில்வர் தட்டு, காமாட்சி விளக்குடன் பரிசு பைகள் இருந்தது. இது வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய வைக்கப்பட்டு இருந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டதால் தேர்தல் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது ஆர்.கே.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல்: பறக்கும் படை சோதனையில் ரூ.10 லட்சம் சிக்கியது
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
April 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)




No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.