March 1, 2017
அமேசானில் அமெரிக்கா செய்ததை... தமிழகத்தில் மோடி அரசு செய்கிறதா?
அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு. ஆனால் அது 'வல்லரசு' ஆவதற்கு உலகின் பல குட்டி நாடுகளைச் சுரண்டிய வரலாறு உண்டு. ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றான அமேசான், பிரேசில் உள்ளிட்ட 9 நாடுகளுடன் தன் எல்லையைப் பரப்பி விரிந்து கிடக்கிறது. அந்த நாடுகளில் ஒன்றுதான் வெனிசுலா. அமேசான் காடுகள் அளப்பரிய வளங்களைத் தன்னகத்தே கொண்டவை. எண்ணெய் வளம் அதில் முக்கியமானது. எரிவாயுவுக்காகப் பல்வேறு நாடுகளில் கடை பரப்பியிருந்த அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவிலும் கால்பதித்தன. ஆனால் வெனிசுலாவில் அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு அவர்களுக்கு ஒரு தலைமை இருந்தது. அவர்தான் ஹியூகோ சாவேஸ், வெனிசுலாவின் அதிபர். அமெரிக்காவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் வெனிசுலா மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது. 2002-ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 80% எண்ணெயை வெனிசுலா ஏற்றுமதி செய்தது. நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அரசு மயமாக்கப்பட்டன.
தனியார் நிறுவனங்களின் கொள்ளையை வெளிப்படையாக எதிர்த்தார் சாவேஸ். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் அமெரிக்க நிறுவனங்கள் விட்டுவிடுமா என்ன? ஆட்சிக்கவிழ்ப்பு வேலைகள் துரிதமாகின. சாவேஸுக்கு எதிராக மக்கள் திரள்வதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் அதை எல்லாம் எதிர்த்து மீண்டும் சாவேஸ் பதவியில் அமர்ந்தார். எந்த நாட்டையும் தனது வலிமையால் சீண்டிப்பார்த்து அடிபணிய வைக்கும் அமெரிக்கா, வெனிசுலா விஷயத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டது.
இப்போது கொஞ்சம் தமிழகத்தின் பக்கம் திரும்புவோம்...
பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் படுகொலைசெய்யப்பட்ட நிகழ்வில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலாவில் அனுமதி, அதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம், தமிழகம் முழுவதும் விவசாயிகள் தற்கொலை, அ.தி.மு.க-வில் உள்கட்சி மோதல்கள் என பரப்பான சூழலில் நகர்ந்து வருகிறது தமிழக மக்களின் வாழ்க்கை. ஒருபுறம் அரசியல் சமூகப் பிரச்சனைகளால் பொதுமக்கள் சோர்ந்திருக்கும் நிலையில், மற்றொரு பக்கம் ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட பல திட்டங்கள், தற்போது நிலவும் அரசியல் குழப்பங்களால் சத்தமின்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
உணவுப் பாதுகாப்பு சட்டம்
2013 ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவில் மூன்று திருத்தங்களைக் கோரியும் இதில் மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். அதற்குப்பிறகு உடல்நிலை சரியில்லாமல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாக, தமிழக அரசு அறிவித்தது.
"இந்த சட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதால், ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் பொது விநியோகத் திட்டத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்" என்றும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. 2013 செப்டம்பர் மாதம் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் "உணவுப் பாதுகாப்பு மசோதாவில் எந்தவித திருத்தங்களும் மத்திய அரசு செய்யாத நிலையில், மசோதாவை ஆதரித்து தி.மு.க வாக்களித்திருப்பது தமிழக மக்களுக்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம். நான், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொள்ளாத வரையில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், தமிழகத்துக்குப் பாதகமான ஒன்றாகவே அமையும்" எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனத்துக்குரிய ஒன்று.
உதய் மின்திட்டம்
மத்திய அரசின் உதய் மின்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார் ஜெயலலிதா. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கூட "இந்தத் திட்டம் பொதுமக்களைக் கடுமையாகப் பாதிப்பதோடு, மின் துறையின் கடனை மாநில அரசு ஏற்க வேண்டியதால் நிதிச்சுமை ஏற்படும்." எனத் தெரிவித்திருந்தார். மேலே சொன்னதுபோல், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்தில். தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்துப் பேசிய காட்சிகள் அரங்கேறின. அந்தச் சந்திப்பில் எந்த விதமான தீர்வும் எட்டப்படவில்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு பதவியேற்றது. இதனிடையே கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அமைச்சர் தங்கமணி உதய் மின்திட்டத்தில் தமிழகம் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மத்திய அரசின் உதய் மின்திட்டத்தில் தமிழகம் 21-வது மாநிலமாகத் தன்னை இணைத்துக் கொண்டது.
நெடுவாசல் - ஹைட்ரோ கார்பன் திட்டம்
டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்குத் தமிழக மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் கைவிடப்படுவதாகத் தெரிவித்தார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான். அதோடு ‘‘‘ஷேல் கேஸ்’ திட்டத்துக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படாது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் கைவிடப்படுகிறது" என்றும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்டது 2016 நவம்பர் மாதத்தில். ஆனால் கடந்த 15 ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் எனச் சொல்லப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்த ஒப்புதல்படி மொத்தம் 31 இடங்களில் இந்த எரிவாயு எடுக்கப்படும். அதில் 17 இடங்களில் தனியார் நிறுவனங்கள் எரிவாயு எடுக்கும். காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுப்பதை எதிர்த்த ஜெயலலிதா "விவசாயிகளுக்கும் விளைநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது" என்றும் சொல்லிவந்தார்.
ஆனால் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டங்களால் இந்தத் திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுப்பெற்று வரும் நிலையில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீருக்குப் பாதிப்பு ஏற்படாது. மிகக் குறைவான நிலப்பரப்பே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும். எனவே, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. 500 பேருக்கு வேலை கிடைக்கும். ஏற்கனவே உள்ள எண்ணெய்க் கிணறுகளால் விவசாயம் பாதிக்கவில்லை. இதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.40 கோடி ராயல்டி' கிடைக்கும் எனக் கூறியுள்ளது.
உணவுப் பாதுகாப்பு சட்டம், உதய் மின்திட்டம், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா போன்றவற்றுடன் ‘நீட்’ தேர்வு, கூடங்குளத்தில் அணு உலைகள் விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் போன்றவற்றிலும் மத்திய அரசு தீவிரமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜனிடம் பேசினோம்.
"ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தேனியில் முன்னெடுக்கப்பட்ட ‘நியூட்ரினோ’ திட்டத்துக்கு எதிர்ப்பைக் காட்டி வந்தார்கள். ஆனால் இப்போது வல்லுநர் குழு அமைத்து அந்த வேலைகளை மீண்டும் தொடர்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். வல்லுநர் குழு அமைத்துவிட்டாலே என்ன நடக்கும் எனத் தெரியுமல்லவா? அவர்கள் சொல்வதுதான் சரி என்ற நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படும். அதே போல கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து சுப.உதயகுமார் அவர்களின் தலைமையில் அந்த பகுதி மக்களுடன் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது போராட்டக்குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 'மேற்குவங்க மாநிலத்தில் அமையவிருந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அந்த திட்டத்தை நிறுத்தியுள்ளார். கூடங்குளத்திலும் தமிழக அரசு அதேபோன்ற நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்' என கேட்டுக் கொண்டோம். அதற்கு 'அங்கே இப்போதுதான் அணு உலைக்கான வேலைகளை ஆரம்பித்து உள்ளார்கள். இங்கே முழுமையாக அணு உலை கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அவர்களைப் போல முடிவு எடுக்க முடியாது. ஆனால் அணு உலை விஸ்தரிப்பு வேலைகளின் பொழுது முழுமையான எங்கள் எதிர்ப்பை காட்டுகிறோம்' என்றார். ஆனால் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக 3 மற்றும் 4 அணு உலைகளுக்கான வேலைகளைத் துவக்கி வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்." என்றார்.
சர்வதேச அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக எரிபொருள் சந்தை இருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது ஆலைகளை இயற்கை வளம் பொருந்திய சிறு சிறு நாடுகளில் அமைத்து வருகின்றன. இதற்கு கனிமவளங்கள் நிரம்பிய இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியா முழுவதும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்க, சத்தமே இல்லாமல் அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத கால இடைவெளியில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் நிர்வாக குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தமிழகத்தில் தனது காய் நகர்த்தல்களை செய்து வருகிறதா?
வெனிசுலாவில் அம்மக்களுக்காக போராட ஹியூகோ சாவேஸ் இருந்தார். ஆனால் தமிழகத்தில்!?
அமேசானில் அமெரிக்கா செய்ததை... தமிழகத்தில் மோடி அரசு செய்கிறதா?
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.